சி.ஏ., படிப்புக்கான நுழைவுத்தேர்வு மற்றும் பாடத்திட்டத்தில், அதிரடி மாற்றம் செய்யப்படுகிறது. இனி, பிளஸ் 2 முடித்தால் மட்டுமே, சி.ஏ., தேர்வை எழுத முடியும்.
ஐ.சி.ஏ.ஐ., எனப்படும், இந்திய 'சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்' அமைப்பின், தேசிய தலைவர் எம்.தேவராஜ ரெட்டி மற்றும் துணைத் தலைவர் நிலேஷ் ஷிவ்ஜி விகம்சே, நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை, சி.ஏ., பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வரப்படும். அதன்படி, புதிய பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை உருவாக்கப்பட்டு உள்ளது. மத்திய கம்பெனி விவகாரத் துறை அமைச்சம் மற்றும் சட்டத் துறை அமைச்சக அனுமதி, இன்னும் சில வாரங்களில் கிடைக்கும்.
* புதிய பாடத்திட்டப்படி, தற்போதுள்ளது போல, 10ம் வகுப்பு மட்டும் முடித்தால், சி.ஏ., படிக்க முடியாது; பிளஸ் 2 தேர்ச்சி பெறுவது கட்டாயம்
* சி.பி.டி., என்ற பொதுத்திறன் தேர்வின் பெயர் மாற்றப்பட்டு, அடிப்படை தேர்வு என, பெயரிடப்பட்டு உள்ளது. முதலில், இந்த தேர்வை எழுதிய பின், எட்டு மாத இடைக்கால படிப்பு நடத்தப்படும். இந்த தேர்வில் வெற்றி பெற்ற பின், சி.ஏ., படிக்கலாம்
இதில், இரண்டு வகை பாடப்பிரிவுகளில் வெற்றி பெற்ற பின், மூன்று ஆண்டுகள் செய்முறை பயிற்சி தரப்படும். பயிற்சியின், கடைசி இரு ஆண்டுகளில், ஐ.டி., தொடர்பான சிறப்பு பயிற்சியும், நான்கு வாரங்கள் வழங்கப்படும்
* பட்டதாரிகள், கம்பெனி செயலர் படிப்பு மற்றும், 'காஸ்ட் அக்கவுன்டிங்' முடித்தவர்கள், அடிப்படை தேர்வு இல்லாமல் நேரடியாக, சி.ஏ., இடைநிலை படிப்பில் சேர்ந்து பயிற்சி பெறலாம்.
சி.ஏ., முடித்தவர்களுக்கு வேலையில்லை என்ற நிலையே இல்லை. வெளிநாடுகளிலும் அதிக சம்பளத்தில் வேலை கிடைக்கிறது. இந்த தேர்வுக்கு, கல்லுாரிகள் சிறப்பு பயிற்சி தர விரும்பினால், அதற்கான அனுமதியையும், உதவியையும், ஐ.சி.ஏ.ஐ., அமைப்பு வழங்கும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
புதிய படிப்பு
கறுப்பு பணம் ஒழிப்புச் சட்டத்தின் கீழ், ஆடிட்டர்கள் மூலம் நிறுவனங்களுக்கு ஆலோசனை அளிக்க, இந்திய நிதித் துறை அமைச்சகம் கேட்டு கொண்டுள்ளது. இதன்படி, ஆடிட்டர்களுக்கு கறுப்பு பணத்தை ஒழிப்பது குறித்து, ஆறு மாத சான்றிதழ் படிப்பு தர உள்ளோம். அதேபோல், ரயில்வே சொத்துகளை கணக்கிடவும், ஆடிட்டர்கள் அமைப்பு உதவ உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...