செல்லிடப்பேசி தயாரிப்பு நிறுவனமான "ரிங்கிங் பெல்ஸ்' நிறுவனத்தின்
அறிவிப்பின்படி, ரூ.251-க்கு செல்லிடப்பேசியை விற்பனை செய்யாவிட்டால், அந்த
நிறுவனம் மீது மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய
தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
மலிவுவிலை செல்லிடப்பேசி எப்படி தயாரிக்கப்படுகிறது?, ரூ.251-க்கு
செல்லிடப்பேசியை விற்பனை செய்ய முடியுமா?, இந்திய தர நிர்ணய அமைப்பிடம்
இருந்து தரச் சான்றிதழ் பெறப்பட்டதா ஆகியவை தொடர்பாக, ரிங்கிங் பெல்ஸ்
நிறுவனத்திடம் விசாரித்து வருகிறோம்.
இந்த அறிவிப்பு தொடர்பாக எதிர்காலத்தில் முரண்பாடுகள் தென்பட்டால்,
சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக, மத்திய
தொலைத்தொடர்புத் துறை கண்காணித்து வருகிறது என்று ரவிசங்கர் பிரசாத்
தெரிவித்தார்.
முன்னதாக, ரூ.251-க்கு ஆண்ட்ராய்டு செல்லிடப்பேசி விற்கப்படும் என்று
ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் அறிவித்தது. இதற்கான முன்பதிவை கடந்த வாரம்
தொடக்கியது. இரண்டு நாள்களுக்குள் 6 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள்
முன்பதிவு செய்தனர்.
இந்த அறிவிப்புக்கு செல்லிடப்பேசி தயாரிக்கும் நிறுவனங்கள் எதிர்ப்பு
தெரிவித்தன. மானிய விலையில் விற்றாலும் கூட, குறைந்தது ரூ.3,500-க்குதான்
ஆண்ட்ராய்டு செல்லிடப்பேசிகளை விற்க முடியும் என்று அந்த நிறுவனங்கள்
தெரிவித்தன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...