ரூ.251 விலையில் ‘ஸ்மார்ட்போன்’ தருவதாக அறிவித்த செல்போன் நிறுவனத்தில் வருமான வரி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
ரூ.251–க்கு ஸ்மார்ட்போன்
உத்தரபிரதேச மாநிலம் நொய்டா நகரைச் சேர்ந்த ‘ரிங்கிங் பெல்ஸ்’ என்ற
செல்போன் நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது தயாரிப்பான ‘பிரீடம்
251’ என்னும் ஸ்மார்ட்போனை மிகக் குறைந்த விலைக்கு (ரூ.251) விற்பனை
செய்வதாக அறிவித்தது. இதையடுத்து கடந்த 18 மற்றும் 19–ந்தேதிகளில் மட்டும்
அந்த நிறுவனத்தின் இணையதளம் மூலம் 6 கோடிக்கும் அதிகமானோர் இந்த ரக
செல்போனை வாங்குவதற்கு முன்பதிவு செய்தனர்.
அதே நேரம், இவ்வளவு
குறைந்த விலையில் ஸ்மார்ட்போனை விற்பனை செய்வது சாத்தியமல்ல என்று இதர
செல்போன் நிறுவனங்கள் போர்க்கொடி உயர்த்தின. இதுதொடர்பாக மத்திய அரசு
விசாரணை நடத்தவேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
திடீர் ஆய்வு
இதைத்தொடர்ந்து மத்திய உற்பத்திவரி துறை மற்றும் வருமானவரி இலாகா
அதிகாரிகள் சம்பந்தப்பட்ட செல்போன் நிறுவனத்திற்கு சென்று திடீர் சோதனை
நடத்தினர். அப்போது அந்த நிறுவனத்தின் நிதி கட்டமைப்பு மற்றும்
கம்பெனிகளின் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் ஆகியவற்றை
அவர்கள் ஆய்வு செய்தனர். சில ஆவணங்களை மேற்சோதனைக்காக அவர்கள் எடுத்தும்
சென்றனர்.
இதுபற்றி சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் தலைவர் அசோக்
சத்தாவிடம் நிருபர்கள் கேட்டபோது அவரும், வருமானவரி மற்றும் உற்பத்திவரி
துறை அதிகாரிகள் தங்களது நிறுவனத்தில் ஆய்வு நடத்தியதை ஒப்புக்கொண்டார்.
விளக்கம் அளிக்க உத்தரவு
அவர் கூறுகையில், ‘‘இந்தியாவில் தயாரிப்போம், திறன் இந்தியா, புதிய
தொழில் தொடங்கிடுவோம் ஆகிய திட்டங்களின் அடிப்படையில் இதைச் செயல்படுத்தி
இந்த மைல்கல்லை அடைய திட்டமிட்டு இருக்கிறோம். ஆய்வு நடத்திய அதிகாரிகள்
எங்களது எதிர்காலத்துக்காக சில வழிகாட்டுதல்களையும் வழங்கினர். இதற்காக
தங்களது ஆதரவையும் ஒத்துழைப்பையும் அளிப்பதாக தெரிவித்தனர்’’ என்றார்.
பிரீடம்
251 ஸ்மார்ட்போனை இந்திய தரநிர்ணயச் சான்று இல்லாமல் சந்தைப்படுத்தி
இருப்பது தொடர்பாக மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகம் ரிங்கிங்பெல்ஸ்
நிறுவனத்திடம் விளக்கம் அளிக்கும்படி கேட்டும் உள்ளது. இந்த நிறுவனத்தின்
நம்பகத்தன்மை குறித்து உத்தரபிரதேச மாநில அரசு ஆய்வு நடத்தும்படியும்
உத்தரவிட்டு இருக்கிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...