ரயில்வே துறையின், 13 லட்சம் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது
தொடர்பாக, ரகசிய ஓட்டெடுப்பு நடந்துள்ளது. பெரும்பாலானோர் வேலை
நிறுத்தத்தில் ஈடுபட ஆதரவு தெரிவித்து இருப்பதாக தொழிற்சங்கத்தினர்
கூறினர்.
இந்திய ரயில்வேயில், பயணிகள் சேவையில், 12 ஆயிரம்; சரக்கு ரயில் சேவையில்,
7,000 என, 19 ஆயிரம் ரயில்கள் ஓடுகின்றன. ரயில் இயக்கம், பணிமனை, உற்பத்தி
தொழிற்சாலையில் பணி புரிவோர் என, 13 லட்சம் ஊழியர்கள் உள்ளனர்.
ரயில்வே சேவையில் செய்யப்படும் மாற்றத்திற்கு எதிர்ப்பு, ஊதிய உயர்வு
உள்ளிட்ட, 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய அரசிடம் ஊழியர்கள்
முறையிட்டு உள்ளனர். ஆனால், பேச்சுக்கு மத்திய அரசு அழைக்கவில்லை. எனவே,
காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என, ரயில்வே
தொழிற்சங்கங்கள் முடிவு எடுத்தன.
வரும் ஏப்ரல், 11 முதல், காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது;
இதற்காக, ஊழியர்களிடம் ஓட்டெடுப்பு நடத்துவது என, முடிவு செய்யப்பட்டது.
கோரிக்கைகள் என்ன?
* மத்திய அரசின் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்
* ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை, 18 ஆயிரம் ரூபாயில் இருந்து, 26 ஆயிரம் ரூபாயாக மாற்ற வேண்டும்
* பயணிகள் ரயில், சரக்கு ரயில் சேவையில், தனியாரை அனுமதிக்கக் கூடாது.
தட்சிண ரயில்வே தொழிலாளர் சங்கம், வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு
எடுத்து விட்டது. இந்திய ரயில்வே தொழிலாளர்களின் தேசிய சம்மேளனம் நடத்திய
ஓட்டெடுப்பில், 94 சதவீதம் பேர் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு
தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது;
ஓட்டெடுப்பு நிலவரம் இன்று வெளியாகிறது. வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு
அதிகரித்து வருகிறது. மத்திய அரசு உடனடியாக அழைத்து பேசாவிடில், மார்ச்,
11ல், மண்டல வாரியாக பொது மேலாளரிடம், வேலை நிறுத்த, 'நோட்டீஸ்' அளிப்போம்.
ஏப்ரல், 11 முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இளங்கோ, செயல் தலைவர், தட்சிண ரயில்வே ஊழியர் சங்கம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...