ஆசிரியர் பணியில் சேர போலியாக தயாரித்த
சான்றிதழில் குறிப்பிடப்பட்ட பெயரில் உள்ள அசல் நபர் அரசம்பட்டியில்
பணிபுரிந்து வருவது தெரியவந்துள்ளது.
தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டைச்
சேர்ந்தவர் முனியப்பன். பிளஸ் 2 வரை பயின்ற இவர் நாமக்கல்லில் தங்கி
குடும்ப அட்டை, ஆசிரியர் தகுதிச் சான்று உள்ளிட்டவற்றை துரைராஜ் என்கிற
பெயரில் போலியாக தயாரித்து ஆசிரியர் பணியில் சேர்ந்தார். பின்னர், அவர்
பணியிட மாற்றலில் வேலூர் மாவட்டத்துக்குச் சென்ற போது, அவரது சான்றிதழ்களை
சரிபார்த்த கல்வித் துறை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் புகார் அளித்தனர்.
இதுகுறித்து, தருமபுரி மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர்.
இதில், முனியப்பன் போலியாகச் சான்றிதழ்
தயாரித்து பணியில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து,
முனியப்பன், அவருக்கு உடந்தையாக இருந்ததாக ராஜேந்திரன் ஆகியோர் கைது
செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், முனியப்பன் தயாரித்த அனைத்து
போலிச் சான்றிதழ்களும் துரைராஜ் என்ற பெயரில் இருந்ததால், அது தொடர்பாக
குற்றப் பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
இதில், போலியாக தயாரித்த சான்றிதழ்களில்
குறிப்பிடப்பட்டுள்ள பெயரில் உள்ள நபர், கிருஷ்ணகிரி மாவட்டம், அரசம்பட்டி
அருகே பெண்டரஅள்ளியில் உள்ள பொன்னுசாமி மகன் துரைராஜ் (44) என்பதும், அவர்
அரசம்பட்டியில் உள்ள அரசுப் பள்ளியில் பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.
மேலும், முனியப்பன் அளித்த நாமக்கல் மாவட்ட
முகவரிக்கு குற்றப் பிரிவு போலீஸார் நேரில் சென்று நடத்திய விசாரணையில்,
அந்த முகவரி, பெயரில் யாரும் இல்லை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலிச் சான்றிதழ்கள் தயாரித்து ஆசிரியர் பணியில் சேர்ந்த விவகாரம் குறித்து போலீஸார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...