Home »
» பொங்கல் பண்டிகையின் வரலாறு மற்றும் விதிமுறைகள் - படையல் பூஜை செய்திட உகந்த நல்ல நேரம்
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள். இந்த
நன்னாளிலே சுப ஓரைகளில் சூரிய பகவானுக்கு பூஜை செய்தால், அஷ்ட லஷ்மிகளும்
நம் வீட்டில் வாசம் செய்யும், நம்மை காக்கும். மன்மத வருடம், தை மாதம்
முதல் நாள் 15.1.2016 வெள்ளி அன்று பொங்கல் பானை வைத்து பொங்கல் பொங்கவும்,
சூரியனுக்கு படையல் பூஜை செய்திடவும் உகந்த நல்ல நேரம் காலை 9 மணி முதல்
10.30 மணி வரை பொங்கல் வைத்து வழிபடலாம்.
சூரிய பகவானுக்கு
உகந்த நண்பகல் 12.00 – 01.00 PM சூரிய ஓரையில் பூஜை செய்தால், தன-தான்யம்
பெருகும். காலை 9.30 மணிமுதல் 10.30 மணிவரை சுக்கிர ஓரையில் பொங்கல்
வைத்தால் தனம், தானியம் பெருகும். அதேபோல, மதியம் 01.00 – 02.00 மணி அளவில்
சுக்கிர ஓரையும், மதியம் 02.00 – 03.00 மணிவரை புதன் ஓரையும் சிறந்ததே.
சந்திர ஓரையில் பொங்கல், வடை, பாயசம், 21 வகையான காய்கறிகளை கொண்டு
சமைத்து, சூரியபகவானுக்கு படைத்து வணங்க வேண்டும். அப்போது 21 வகையான
சமைக்காத பச்சை காய்கறிகளையும் வைத்து, அத்துடன் மஞ்சள் கொத்து,
இஞ்சிகொத்து, கரும்பும் வைத்து, சூரியபகவானுக்கு கற்பூர ஆரத்தி காட்டி
வணங்க வேண்டும். இதனால் சூரியபகவானின் ஆசி பரிபூரணமாக கிட்டும்.
பொங்கல் பண்டிகையின் வரலாறு!
பொங்கல்
என்பது தென்னிந்திய மக்களின் பழமை வாய்ந்த பண்டிகையாகும்; குறிப்பாக
தமிழர்களின் பண்டிகையாகும். இந்த பண்டிகையின் வரலாற்றைப் பார்க்க
வேண்டுமானால் நாம் சங்க காலமான கி.மு. 200 - கி.மு. 300 நோக்கி செல்ல
வேண்டும். பொங்கல் என்பது சமஸ்கிருத புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதை
போல் திராவிட அறுவடை பண்டிகையாக அறியப்பட்டாலும் கூட, வரலாற்று அறிஞர்கள்
இந்த பண்டிகையை சங்க காலத்தின் போது கொண்டாடப்பட்ட தை நீராடல் என
நம்புகின்றனர். சங்க காலத்தின் போது நடந்த கொண்டாட்டங்கள் தான் இன்றைய
பொங்கல் கொண்டாட்டமாக மாறியுள்ளது. கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, தை
நீராடலின் போது சங்க கால பெண்கள் 'பாவை நோன்பு' என்ற விரதத்தை
கடைப்பிடித்து வந்தனர்.
பல்லவர்களின் ஆட்சி காலத்தில் (கி.பி.
400-கி.பி.800) இது மிகவும் முக்கியமான பண்டிகையாக விளங்கியது. தமிழ்
மாதமான மார்கழியின் போது இது கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையின் போது
நாட்டில் மழையும் வளமும் செழிக்க வேண்டி இளம் பெண்கள் வேண்டுவார்கள். இந்த
மாதம் முழுவதும் பால் மற்றும் பால் பொருட்களை தவிர்ப்பார்கள். தங்கள்
முடிக்கு எண்ணெயிட்டு கொள்ள மாட்டார்கள். மேலும் பேசும் போது கடுமையான
சொல்லை பயன்படுத்த மாட்டார்கள். பெண்கள் அனைவரும் விடியற்காலையில் குளித்து
விடுவார்கள். ஈர மண்ணில் செய்யப்பட்ட கட்யாயணி என்ற பெண் தெய்வத்தின்
சிலையை அவர்கள் வணங்கி வந்தார்கள். தை மாதத்தின் முதல் நாள் தங்கள் நோன்பை
முடித்துக் கொள்வார்கள்.
நெற்பயிர்கள் செழிப்பதற்காக அளவுக்கு
அதிகமான மழையை கொண்டு வருவதற்காகவே இந்த நோன்பு. பழமை வாய்ந்த இந்த
மரபுகளும், சடங்குகளும் தான் பொங்கல் கொண்டாட்டங்களுக்கு பிள்ளையார் சுழி
போட்டது. தை நீராடல் பண்டிகை பற்றியும், பாவை நோன்பின் போது
கடைப்பிடிக்கப்படும் சடங்குகள் பற்றியும், ஆண்டாளின் திருப்பாவை மற்றும்
மாணிக்கவாசகரின் திருவெம்பாவை ஆகியவற்றில் தெளிவாக
குறிப்பிடப்பட்டிருக்கிறது. குலோத்துங்கா என்ற சோழ அரசன் கோவில்களுக்கு
நிலையத்தை பரிசாக அளிப்பார். குறிப்பாக பொங்கல் பண்டிகையின் போது என
திருவள்ளூர் வீரராகவா கோவிலில் உள்ள கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொங்கல் விதிமுறைகள்
பொங்கலிடுவதிலும்
சில விதிமுறைகள், வரைமுறைகள் இருக்கின்றன. பொங்கல் பண்டிகையின் போது
பெண்கள் சூரியன் உதிப்பதற்கு 5 நாழிகைக்கு முன்பு எழுந்து நீராடிவிட்டு,
வீட்டு முற்றத்தில் நீர் தெளித்து கோலமிட வேண்டும். வீட்டின் முற்றத்தில்
ஒரு பகுதியை பசு சாணத்தால் மெழுகி, வெள்ளையடித்து, காவி பூச வேண்டும்.
அரக்கு நிறம் துர்க்கா தேவிக்குரியது. துன்பங்கள் விலகி மங்கல வாழ்வும்,
இன்பமும் நிலைக்க காவி பூசப்படுகிறது. அந்த பகுதியை மாவிலை, வாழை, கரும்பு
மற்றும் மலர்களால் அலங்கரித்து, பிள்ளையாரை பிடித்து வைக்க வேண்டும்.
பின்னர் குத்து விளக்கேற்றி, பூரண கும்பம் வைத்து வெற்றிலை, பாக்கு,
தேங்காய் முதலிய மங்கல பொருட்களையும் படைக்க வேண்டும்.
விநாயகர் பூஜை
விநாயகரை
முதலில் மனதில் நினைத்து, இஷ்டதெய்வங்களை பிரார்த்தனை செய்ய வேண்டும். ஒரு
புதுப்பானையை எடுத்து அதன் வாய்ப்புறத்தில் மஞ்சள் இலை, மாவிலை கட்ட
வேண்டும். பானையின் மேல்புறத்தில் திருநீறை குழைத்து, 3 இடங்களில் பூசி,
சந்தனம், குங்குமத்தால் திலகமிடவேண்டும்.
பொங்கலோ பொங்கல்
பானைக்குள்
பசும்பாலும், நீரும் விட்டு நிரப்பி தூபதீபம் காட்டி, கற்பூரதீபத்தினால்
அடுப்பில் நெருப்பை உண்டாக்கி பற்ற வைக்க வேண்டும். பின்னர் கணவரும்,
மனைவியும் சூரியனை வணங்கி, இஷ்டதெய்வங்களை பிரார்த்தனை செய்து பானையை
பக்குவமாக, தம் கைகளால் பற்றி பிடித்து தூக்கி அடுப்பில் வைக்க வேண்டும்.
பானையில் பால் பொங்கி வரும் போது பொங்கலோ, பொங்கல் என்று உரத்தக் குரல்
எழுப்பிக்கொண்டே பச்சரிசியை இருகைகளாலும் அள்ளி சூரியபகவானை வணங்கியபடி
பானையின் வாய்விளம்பினை 3 முறை சுற்றி பானையில் இடவேண்டும்.
சூரியனுக்கு படையல்
பொங்கிய
பொங்கலை 3 தலைவாழை இலையில் இட்டு படைத்து பழங்கள், கரும்பு, முதலியவற்றை
கொண்டு அர்ச்சித்து, தூபதீபம் காட்டி சூரியபகவானை வணங்கி வழிபாடு செய்ய
வேண்டும். தீபாராதனை காட்டும் போது குலதெய்வத்தையும், மூதாதையர்களையும்
பிரார்த்தனை செய்ய வேண்டும்.
அனைவருக்கும் பொங்கல் மற்றும் உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்!
அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் அன்புடன் சு.முருகன் கொழப்பலூர்
ReplyDeleteபாடசாலை வாசகர்கள் & பாடசாலை ஆசிரியர் மற்றும் குடும்பத்தார்க்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் .
ReplyDeleteகொழப்பலூர் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிபவரா திரு.முருகன் அவர்களே...
ReplyDelete