கைவிடப்படும் நிலையிலுள்ள விழுப்புரம் ரயில்வே பள்ளியை மீட்டெடுக்க வேண்டும் என்று ரயில்வே ஊழியர்கள் வலியுறுத்தினர். ரயில்வே பணியாளர்களின் குழந்தைகளுக்காக சென்னை பெரம்பூர், அரக்கோணம், திருச்சி, ஈரோடு, விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் ரயில்வே நிர்வாகம் சார்பில் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
முதலாம் வகுப்பு முதல் 6ஆம் வகுப்பு வரை ஆரம்பப் பள்ளியாக தொடங்கிய இந்தப் பள்ளி 1998-இல் உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. மாணவர்கள் சேர்க்கை வீழ்ச்சி: 10ஆண்டுகளுக்கு முன்புவரை 800 முதல் 1,000 மாணவ, மாணவிகளுடன் சிறப்பாக இயங்கி வந்த இந்தப் பள்ளி, தரம் குறைந்து மாணவர்களின் எண்ணிக்கையை படிப்படியாக இழந்தது.
பாடத் திட்டம் மாற்றம்: ஆங்கிலோ- இந்தியன் பாடத் திட்டத்துடன் ஆங்கில வழியில் இயங்கி வந்த இந்தப் பள்ளியில், ரயில்வே ஊழியர்களின் பிள்ளைகள் பயின்று வந்தனர். 2011ஆம் ஆண்டு தமிழக அரசு சமச்சீர் கல்வித் திட்டத்தைச் செயல்படுத்தியதால், ஆங்கில வழியில் இந்தப் பாடத் திட்டம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
சென்னைத் தலைமையக ரயில்வே நிர்வாகத்தின் கீழ் இயங்கும் இந்தப் பள்ளி, மாவட்டக் கல்வித் துறையின் மூலம் தேர்வுகள் உள்ளிட்ட பணிகளை ஒருங்கிணைத்து வருகிறது. இந்தப் பள்ளியில் மாணவர் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து படிப்படியாக மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆசிரியர்கள் பற்றாக்குறை: தற்போது பள்ளியில் மொத்தம் 164 மாணவ, மாணவிகள் மட்டுமே பயின்று வருகின்றனர். தலைமை ஆசிரியர், 8 ஆசிரியர்கள், 4 அலுவலர்கள், ஓர் எழுத்தர் பணியாற்றி வருகின்றனர். மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததால், முதலாம், இரண்டாம் வகுப்புகள் மூடப்பட்டு விட்டது. 3 முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு போதிய ஆசிரியர்கள் இல்லாததால், ஓராசிரியரே அனைத்துப் பாடங்களையும் எடுக்கும் நிலை உள்ளது.
தமிழ்ப் பாடத்துக்கு ஆசிரியர் இல்லாத நிலையில், சென்னையிலிருந்து 3 ஆசிரியர்கள் தாற்காலிகமாக அவ்வப்போது வந்து பாடம் நடத்திச் செல்கின்றனர். 10ஆம் வகுப்பில் 26 மாணவ, மாணவிகள் படித்து வரும் நிலையில், திருச்சியிலிருந்து இரண்டு ஆசிரியர்களை இந்தப் பள்ளிக்கு பணியிட மாறுதல் செய்த நிலையில், அவர்கள் பணியில் சேரவே இல்லை.
ரயில்வே ஊழியர்களின் பிள்ளைகள் மட்டுமே இந்தப் பள்ளியில் சேர்க்கப்படுவார்கள் என்ற விதிமுறை தொடர்வதால், ஊழியர்களின் உறவினர்களின் பிள்ளைகள், ரயில்வே குடியிருப்பையொட்டி வசிக்கின்றவர்களின் பிள்ளைகளை சேர்க்க இயலாத நிலை உள்ளது.
விழுப்புரம் ரயில்வே பகுதியிலிருந்த லோகோ ஷெட், பணிமனை போன்றவை இடம் மாற்றப்பட்டதால், பல ஊழியர்கள் குடிபெயர்ந்துவிட்டனர். இதனால், ரயில்வே ஊழியர்களின் பிள்ளைகளும் குறைந்துவிட்டதாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.
விரைவில் நூற்றாண்டு விழா காண உள்ள இந்த ரயில்வே பள்ளியை மீட்டெடுக்க வேண்டும்; மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ரயில்வே ஊழியர்கள் அல்லாதவர்களின் பிள்ளைகளையும் சேர்க்க வேண்டும். சிபிஎஸ்இ உள்ளிட்ட கல்வித் திட்டத்தை கொண்டு வர வேண்டும். ஈரோடு, பாலக்காடு போன்ற ரயில்வே பள்ளிகளில் மாற்றம் செய்யப்பட்டதைப் போல, காலத்துக்கு ஏற்றவாறு பாடத் திட்டத்தை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். போதிய நிரந்தர ஆசிரியர்களை நியமித்து, பள்ளிக் கட்டடங்களைச் சீரமைக்க வேண்டும் என்று ரயில்வே ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக ரயில்வே தொழில் சங்கத்தினர் நிர்வாகத்திடம் தொடர்ந்து முறையிட்டு வருகின்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...