'இனி, ஒரே நேரத்தில், இரண்டு பட்டப்படிப்புகளில் மாணவர்களை சேர்க்க வேண்டாம்' என, கல்லுாரிகளுக்கு பல்கலை மானியக்குழுவான யு.ஜி.சி., எச்சரிக்கை விடுத்துள்ளது.
தற்போது, 'இதுபோன்ற இரட்டை பட்டப் படிப்பில் மாணவர்களை சேர்க்க வேண்டாம்' என்று, யு.ஜி.சி.,எச்சரித்துள்ளது. இதுகுறித்து யு.ஜி.சி., செயலர் ஜஸ்பால் சந்து அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பல சட்ட மற்றும் அரசு அமைப்புகளிடம் யு.ஜி.சி., கருத்து திரட்டியதில், இரண்டு டிகிரி முறைக்கு எதிரான கருத்துகள் வந்துள்ளன. எனவே, ஒரே நேரத்தில் இரண்டு பட்டங்கள் பெற்றால், அதற்கான அங்கீகாரத்தில் சிக்கல் எழ வாய்ப்புள்ளது. எனவே, கல்லுாரிகள், இரண்டு பட்ட முறையில் மாணவர்களை சேர்க்கவோ அல்லது ஊக்கப்படுத்தவோ வேண்டாம்.இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பால், ஏற்கனவே படித்தவர்களின் நிலை என்ன என, பட்டதாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.இந்த குழப்பம் குறித்து, தரமான கல்விக்கான கூட்டமைப்பு ஆலோசகர் பேராசிரியர் சுவாமிநாதன் கூறியதாவது:உயர் கல்வியில் மேலாண்மை செய்யும், என்.சி.டி.இ., - ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் யு.ஜி.சி., போன்றவை, பட்டப்படிப்பு தொடர்பாக, பொதுமக்கள், கல்வியாளர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோரின் கருத்துகளை கேட்க வேண்டும். தங்கள் விருப்பத்துக்கு மாணவர்களை பட்டப்படிப்பில் சேர்த்துக்கொண்டு, அவர்கள் பணத்தையும், நேரத்தையும் செலவிட்டு பட்டம் பெற்ற பின், அவ்வப்போது உத்தரவை மாற்றி விடுவதால், பட்டதாரிகள் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, குறைந்தது, 20 ஆண்டுகளுக்கு இதுதான் விதிமுறை என, தொலைதுார பார்வையுடன் முன்னோடியான விதிமுறைகளை வகுத்து முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...