அரசு பள்ளி மாணவர்களின் தமிழ் வாசிப்பு திறனை மேம்படுத்த மத்திய அரசின்
'வாசித்தலே எல்லை' என்ற திட்டத்தின் கீழ், கோவை மாவட்டத்தில், 150
பள்ளிகளில் சிறப்புக்குழு சார்பில், ஆய்வுப் பணிகள் விரைவில்
துவங்கவுள்ளது.
அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ், புதிய அணுகுமுறை
திட்டத்தின் கீழ், மாநில மொழிகளில் மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த,
'வாசித்தலே எல்லை'என்ற திட்டத்தை, மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, தமிழகம் முழுவதும், விண்ணப்பித்த, 6,653 அரசு பள்ளிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதில் தேர்வு பெறும் பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.ஆய்வுகளில், தொடக்கப்பள்ளிகளில், 4, 5 வகுப்புகளுக்கும், நடுநிலைப்பள்ளிகளில், 4 முதல் 8 வரையும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், 6 முதல் 8 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் தமிழ் வாசிப்பு திறன் மதிப்பீடு செய்யப்படும்.அந்த வயது, வகுப்பிற்கு ஏற்ப, நுால்கள், பாட புத்தகம், கதைகள், செய்தி தாள் போன்றவற்றை மாணவர்கள் தெளிவாகவும், உச்சரிப்பு, நிறுத்தல் குறியீடுகளுக்கு ஏற்ப அனைத்து மாணவர்களும் வாசிக்கவேண்டியது அவசியம்.கோவை மாவட்டத்தில், 228 பள்ளிகள் இத்திட்டத்தின் கீழ், போட்டிகளில் பங்கேற்க விரும்புவதாக, விண்ணப்பித்திருந்தனர்.
ஆனால், விதிமுறையின்படி, 20க்கும் குறைவாக மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட, 78 பள்ளிகள் நிராகரிக்கப்பட்டு, 150 பள்ளிகளில் ஆய்வுகள் மேற்கொள்ள அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.அதன்படி, ஆசிரியர் பயிற்றுநர்கள், தலைமையாசிரியர்கள், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், 300 பேர் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. முதல்கட்ட ஆய்வுகளை ஜன., இறுதிக்குள் முடிக்க தலைமை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...