கோவை மாவட்டத்தில், பொதுத்தேர்வை எதிர்கொள்ளவுள்ள மாணவர்களுக்கு, சிறப்பு
கவுன்சிலிங் வழங்கவுள்ளதாக, மண்டல உளவியல் நிபுணர் அருள்வடிவு
தெரிவித்தார்.
பள்ளி மாணவர்களின் வளர் இளம் பருவம் சார்ந்த உளவியல் பிரச்னைகளை களையும்
விதத்தில், நடமாடும் உளவியல் ஆலோசனை மைய திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்கள் தனி மண்டலமாக
பிரிக்கப்பட்டுள்ளது.
பாடங்கள் முடிக்கப்பட்டு, தொடர்ந்து தேர்வுகள், பயிற்சிகளை எதிர்கொள்ளும்,
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் ஒரு வித மன அழுத்தத்தில் தள்ளப்படுவது
இயல்பு. இதனால், மாணவர்கள் மத்தியில் பதட்டம், பயம், மறதி, துாக்கமின்மை
போன்ற மாற்றங்கள் ஏற்படலாம்.
மாதிரி தேர்வு, பயிற்சி வழங்கவேண்டிய ஆசிரியர்கள், தனிப்பட்ட முறையில்
மாணவர்களின் மீது கவனம் செலுத்தி, மன நல ஆலோசனைகளை வழங்குவது என்பது சக
மாணவர்களின் பயிற்சிகளை பாதிக்கும். இதனால், ஆசிரியர்களின் உதவியுடன்
மாணவர்களின் பட்டியல் பெற்று உளவியல் நிபுணர்கள் சிறப்பு கவுன்சிலிங்கை
துவக்க திட்டமிட்டுள்ளனர்.
கோவை மாவட்டத்தில், அரையாண்டு தேர்வுகள் முடிந்து பள்ளிகள் திறந்ததும்
சிறப்பு கவுன்சிலிங் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும்,
குழுவாக தேர்வு குறித்த ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளது. ஆசிரியர்களின்
அறிவுறுத்தல் படி, தேவைப்படும் மாணவர்களுக்கு தனிப்பட்ட முறையில்
கவுன்சிலிங் வழங்கப்படும்.
மண்டல உளவியல் நிபுணர் அருள்வடிவு கூறுகையில், ''தேர்வு சமயங்களில்
பொதுவாக, மாணவர்கள் மன அழுத்தத்தில் இருப்பர். தேர்வு பயம் தேவையற்றது
என்பதும், துாக்கமின்மை பிரச்னை, மறதி போன்றவற்றுக்கு தீர்வு குறித்தும்
ஆலோசனை வழங்க உள்ளோம். கற்றலில் பின்தங்கிய மாணவர்களுக்கு, எளிதாக
படிப்பதும், நினைவுத்திறனை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசனை
வழங்கப்படும்,'' என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...