'மழை பெய்வது மற்றும் வானிலை குறித்த முன்னெச்சரிக்கை எதையும் வெளியிடவில்லை' என, அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான, 'நாசா' அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. சென்னை அரசு கல்லுாரி பேராசிரியரின், இ - மெயில் கேள்விக்கு அந்த நிறுவனம், பதிலளித்துள்ளது. ஒரு மாதத்துக்கு மேலாக பெய்த கன மழையால், சென்னை நகரம் துவம்சமாகி விட்டது. அதே நேரம், மழை மற்றும் புயல் குறித்து, பல வதந்திகள் வலம் வந்து, மக்களை மிரட்டி கொண்டிருக்கின்றன. இதில், சில தகவல்கள், சென்னை மக்களை கடுமையாக மிரட்டின.
'வாட்ஸ் ஆப், பேஸ்புக், டுவிட்டர்' மூலம் பகிரப்பட்ட இந்த தகவல்களால், சென்னை மக்கள் பெரும் பீதி அடைந்துள்ளனர்.
சென்னை, வியாசர்பாடி, அம்பேத்கர் அரசு கல்லுாரியின் ஆங்கில துறை தலைவர், பேராசிரியர் ரவிச்சந்திரன், இந்த தகவல் குறித்து, நாசா தலைமையகத்திற்கு, இ - மெயிலில் அவசர கடிதம் அனுப்பினார். அதற்கு உடனடியாக, நாசாவிலிருந்து பதில் வந்துள்ளது. நாசாவின் மழை பொழிவு கணக்கீடு துறை விஞ்ஞானியும், திட்டத்துறை அதிகாரியுமான ஜார்ஜ் ஹப்மேன் அளித்த பதில் வருமாறு:
'மழை எவ்வளவு பெய்யும்' என, நாசா கணக்கிடுவதாக பரவும் செய்தி எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. நாசா என்பது, ஒரு ஆராய்ச்சி நிறுவனம். எங்கள் நிறுவனம், வானிலை தொடர்பான முன்னெச்சரிக்கையை தெரிவிப்பதில்லை. மழை எவ்வளவு பெய்யும் என, எதிர்கால கணிப்புகளை மேற்கொள்வதில்லை.மாறாக, உலகில் ஒவ்வொரு பகுதிகளிலும், எவ்வளவு மழை பெய்துள்ளது என்பதையே, செயற்கைக்கோள்கள் மூலம் படமெடுத்து கணக்கிடுவோம்.
அதே நேரம், எங்கள் தகவல்களை, வானிலை தொடர்பான முன்னெச்சரிக்கைக்கு மற்ற நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன. எனவே, இது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம்.
மாறாக வதந்திகளை பரப்பி எங்களை மேற்கோள் காட்டும் இணையதள முகவரிகளை எங்களுக்கு அனுப்பினால், விசாரணை நடத்துவோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...