சட்டசபை தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள், மழை வெள்ளம் காரணமாக
ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதற்காக, சட்டசபை தேர்தல் தள்ளிப்போக வாய்ப்பே
இல்லை என, தேர்தல் கமிஷன் அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
அ.தி.மு.க., அரசின் பதவி காலம், 2016 மே, 16ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
அதற்கு முன், சட்டசபை தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும்.தற்போது
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடந்து வருகிறது. ஜனவரி, 5ம் தேதி, இறுதி
வாக்காளர் பட்டியல் வெளியாக இருந்தது. வெள்ளம் காரணமாக, ஜன., 20க்கு ஒத்தி
வைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள, 32
மாவட்டங்களில், நான்கு மாவட்டங்கள் மட்டுமே, வெள்ளத்தில் பெரிதும்
பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு முழு வீச்சில் நிவாரணப் பணிகளை முடித்து,
தேர்தலுக்கு தயாராகவே, ஆளுங்கட்சி முயற்சிக்கும்.
ஏனெனில், திட்டமிட்டபடி மே, 16ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடித்தாக
வேண்டும். இல்லையெனில், கவர்னர் ஆட்சி வந்துவிடும். அதை, ஆளுங்கட்சியினர்
விரும்ப மாட்டார்கள்.
தமிழகத்துடன் மேற்கு வங்கம், கேரளா, அசாம், புதுச்சேரி போன்ற
மாநிலங்களுக்கும், சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் முன்னேற்பாடுகள்
குறித்து, தேர்தல் கமிஷன் அதிகாரிகள், நேற்று முன்தினம் மேற்கு வங்கம்
சென்று, மாநில அதிகாரிகளுடன் ஆலோசித்துள்ளனர்.
தமிழக வருகை, வெள்ளம் காரணமாக தள்ளி போயுள்ளது. ஒரு வாரத்தில், வெள்ள மீட்பு பணிகள் முடிந்து விடும். அதன்பின் தேர்தல் பணிகள் துவக்கப்படும்.
தேர்தலுக்கு முன், பொதுத் தேர்வுகள் முடிந்து விடும் நிலையில், தேர்தல்
பணியில், எவ்வித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. எனவே, தேர்தல்
ஒத்திப்போவதற்கான வாய்ப்பு இல்லை; திட்டமிட்டபடி தேர்தல்
நடைபெறும்.காஷ்மீர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மிகப்பெரும் வெள்ளப்பெருக்கு
ஏற்பட்டது. மாநிலம் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. வெள்ள நிவாரண
பணிகளை செய்ய வேண்டும் என்பதற்காக, சட்டசபை தேர்தலை ஒத்திவைக்க வேண்டும்
என, எல்லா கட்சிகளும் விரும்பின.
நிராகரிப்பு:
ஆனால், இந்த கோரிக்கையை தேர்தல் கமிஷன் திட்டவட்டமாக மறுத்து விட்டது.
தேர்தலையும் குறித்த காலத்தில் நடத்தி முடித்தது. எப்போதும் இல்லாத
வகையில், காஷ்மீர் தேர்தலில் ஓட்டுப்பதிவும் மிக அதிகமாக இருந்தது. மாநிலம்
முழுவதுமே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காஷ்மீரில் தேர்தல் ஒத்திவைக்கப்படாத
நிலையில், நான்கு மாவட்டங்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தில்,
தேர்தலை ஒத்திவைக்க வேண்டிய அவசியமே இல்லை. அதுவும் தேர்தல் அறிவிப்பு
ஏப்ரல் முதல் வாரம் தான் வெளியாகும். அதற்குள் அரசு, எல்லா நிவாரண
பணிகளையும் முடித்து விட முடியும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...