Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தனியார் பள்ளிக்கு சவால் விடலாம்!

           சமீபத்தில் அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த இரு தீர்ப்புகள் உத்தரப் பிரதேசக் கல்வித் திட்டத்தில் புயலைக் கிளப்பியிருக்கின்றன. இனி, அரசு ஊழியர்களின் குழந்தைகள் கட்டாயமாக அரசு தொடக்கநிலைப் பள்ளிகளில் தான் படிக்க வேண்டும் என்றது ஆகஸ்ட் மாதம் வெளியான தீர்ப்பு. 

       இது தொடர்பாக உ.பி. அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது நீதிமன்றம். அடுத்து, ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக வேலைபார்த்துவந்த 1 லட்சத்து 32 ஆயிரம் ஆசிரியர்களை வேலையிலிருந்து நீக்க செப்டம்பர் 12-ல் உத்தரவிட்டது தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு. கல்வி பெறும் உரிமைச் சட்டம் 2010-ன்படி அவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வைப் பூர்த்தி செய்யாததைக் காரணமாகச் சொன்னது. மேலும், சிக் ஷா மித்ரா எனப்படும் தொடக்கநிலைப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணிக்காகத் தேர்வாகியிருந்த 40 ஆயிரம் பேரையும் இடைநிறுத்தம் செய்துள்ளது.

வரவேற்பும் வருத்தமும்
முதல் தீர்ப்பின் விளைவாக அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் மேம்படும் வாய்ப்புகள் இருப்பதால் அதைப் பல்வேறு தரப்பினர் மகிழ்ச்சியோடு வரவேற்றுள்ளனர். இருப்பினும், இதனை எதிர்த்து இரு காரணங்களுக்காக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்படும். முதலாவதாக, அரசு ஊழியர் ஒருவர் பணியில் நியமிக்கப்பட்டபோதே அவருடைய குழந்தையை அரசுப் பள்ளியில்தான் சேர்க்க வேண்டும் என்று எந்த ஒப்பந்தமும் இல்லையே என்னும் கேள்வி எழுப்பப்படும். இனி வரும் காலங்களில் அப்படி ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டாலும் அது குழந்தையின் தேர்வு செய்யும் உரிமையைப் பறிப்பதற்கு இணையானதாகும் என இரண்டாவது எதிர்க் கருத்து வைக்கப்படும். அடுத்த தீர்ப்பு இன்னமும் சிடுக்கானது. ஒப்பந்த ஆசிரியர்களைப் பணி நீக்கம் செய்த இந்த இரண்டாவது தீர்ப்பினால் ஒரு லட்சத்து 72 ஆயிரம் குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றன. அதன் விளைவாக அடிக்கடி ஆசிரியர்களின் தற்கொலைச் செய்திகள் நம்மை உலுக்குகின்றன. கடந்த 15 ஆண்டுகளாக வெறும் ரூ. 3,500 மாதச் சம்பளத்துக்காக அரசுப் பள்ளிகளில் ஆசிரியராக வேலையில் இருந்தவர்கள்தான் இந்த ஒப்பந்த ஆசிரியர்கள். அவர்களைச் சார்ந்துதான் பல பள்ளிகளே இயங்குகின்றன. அவர்களுடைய இத்தனை ஆண்டு ஆசிரியர் அனுபவத்தைக் கணக்கில்கொண்டு அரசாங்கம் நல்லதொரு தீர்வைக் காண வேண்டும். அடுத்தடுத்த அடி முதன்முதலில் தனியார் பள்ளிகள் அங்கிங்கெனாதபடி எங்கும் முளைக்கத் தொடங்கியது 1990-களில்தான். அவற்றின் மீது மக்களுக்கு ஈர்ப்பு உண்டாகக் காரணம் ஆங்கிலம்தான். அரசுப் பள்ளிகளில் தொடக்க நிலையில் ஆங்கிலம் பயிற்றுவிக்கப்படாததால் ஆரம்பக் காலங்களில் படித்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் பணக்காரர்களும் தனியார் பள்ளிகளை நோக்கி நகர்ந்தனர். மேல்தட்டைச் சேர்ந்தவர்களின் குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் படித்தவரை அங்கு வேலைபார்த்த ஆசிரியர்கள் மற்றும் அலுவலக அதிகாரிகள் ஏதோ ஒரு விதத்தில் அவர்களுக்குக் கட்டுப்பட்டு இருந்தனர். அதனால், அரசுப் பள்ளிகளின் தரமும் தொடர்ந்து கண்காணிப்பில் இருந்தது. ஆனால், மேட்டுக்குடியினர் அரசுப் பள்ளிகளை விட்டு விலகத் தொடங்கிய பிறகு, அதன் தரம் சரிவடையத் தொடங்கியது. அவர்களைத் தொடர்ந்து நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் தனியார் பள்ளிகளிடம் தஞ்சமடைந்தனர். இதன் விளைவாகச் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக அடித்தட்டில் இருப்பவர்களின் குழந்தைகள் மட்டுமே அரசுப் பள்ளிகளில் மிஞ்சினர். ஓயாத சிக்கல் ஏதோ தனியார் பள்ளிகள் வந்தவுடன் பிரச்சினை தீர்ந்துவிட்டதா என்றால் அதுவும் இல்லை. புதிது புதிதாக முளைக்கும் தனியார் பள்ளிகளின் கல்வித் தரம் கேள்விக்குறியாகவே உள்ளது. வெறும் ரூ. 100 மட்டுமே கட்டணமாக வசூலிக்கும் தனியார் பள்ளிகள் கிராமப்புறங்களிலும், புறநகர்ப் பகுதிகளிலும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், அந்தத் தொகையைக்கூடக் கட்ட முடியாதபடி 15% முதல் 20% குழந்தைகளின் குடும்பச் சூழல் இருக்கிறது. இதனால் போதுமான வருமானம் ஈட்ட முடியாமல் இந்தப் பள்ளிகள் தங்களிடம் பணிபுரியும் பெரும்பான்மையான ஆசிரியர்களுக்கு ரூ. 3,000-த்துக்கும் குறைவான சம்பளம் மட்டுமே தருகின்றன. சொற்ப சம்பளத்துக்குச் சிறந்த ஆசிரியர்களைத் தக்கவைக்க முடியுமா? புறநகர்ப் பகுதியைச் சேர்ந்த பெரும்பான்மையினர் அடித்தட்டு மக்களே. இருப்பினும் பணம் படைத்த சிலரும் பள்ளிப் படிப்புக்குச் செலவு செய்யத் தயாராக இல்லை. மறு பக்கம், அர்ப்பணிப்போடு பள்ளிக்கூடம் நடத்துபவர்கள்கூடப் பணம் பறிக்கும் கொள்ளையர்கள் என சந்தேகப்படும் போக்கு நிலவுகிறது. மொத்தத்தில், பள்ளிகளின் கல்வித் தரம் குறித்து சரியான புரிதல் இல்லை என்பதே நிதர்சனம். எங்கே தொடங்குவது? சமீபத்தில் உ.பி. அரசு அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்களை நிரந்தரமாகப் பணி நியமனம் செய்யத் தொடங்கியது. ஆனால், கல்வித் தரம் தொடர்பான பிரச்சினைக்குத்தான் தீர்வு எட்டப்படவில்லை. ஏனென்றால், திறமைவாய்ந்த ஆசிரியர்களுக்கு நிரந்தர வேலை கிடைக்கும்போது, அவர்கள் தங்களைச் சுரண்டும் தனியார் பள்ளிகளுக்குச் செல்ல விரும்புவதில்லை. மாறாக, செயலிழந்து சோர்வாக இயங்கிவரும் அரசுப் பள்ளிகளில் அமரத்தான் எத்தனிக்கின்றனர். அங்குதானே பொறுப்புகளும் குறைவாக இருக்கும்! சந்த் கபீர் நகர் எனும் பகுதியைச் சேர்ந்த கிராமப்புறப் பள்ளிகளின் செயல்பாட்டைக் கடந்த இரண்டு ஆண்டுகளாக புனியாத் என்னும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் மதிப்பிட்டு வருகிறது. தனியார் பள்ளிகள் மற்றும் அரசுப் பள்ளிகள் என மொத்தமாக 40 பள்ளிகள் இந்தச் சோதனையில் கலந்துகொண்டன. அதன் முடிவில் கீழ்க்கண்ட நான்கு முடிவுகள் கண்டறியப்பட்டன. முதலாவதாக, அரசுப் பள்ளிகளைக்காட்டிலும் தனியார் பள்ளிகளின் செயல்திறன் ஒப்பீட்டளவில் சிறப்பாக இருந்தது. ஆனாலும் பெருவாரியான தனியார் பள்ளிகளின் தரம் மோசமாகவே இருந்தது. இரண்டாவதாக, சிறப்பாகச் செயல்படும் பள்ளிகளுக்குக் கூடுதலாகச் செலவு செய்யப் பல பெற்றோர் தயாராகவே இருந்தனர். மூன்றாவதாக, கூடுதல் வரவு கிடைக்கத் தொடங்கியதும் சில பள்ளிகள் தகுதிவாய்ந்த ஆசிரியர்களுக்குக் கூடுதல் சம்பளம் தந்து அவர்களைத் தக்கவைத்துக்கொண்டன. நான்காவதாக, கல்வித் தரம் உயர்வுக்குக் கிடைத்த வரவேற்பால் யார் சிறப்பான பள்ளி நடத்துவது எனும் போட்டி உருவாகியிருக்கிறது. மொத்தத்தில் கல்வித் தரம் உயரத் தொடங்கியது. இத்தகைய முன்னுதாரணங்களிலிருந்து பாடம் கற்று, அரசுப் பள்ளிகளுக்கு எதிரான சட்டச் சிக்கல்களை அவிழ்க்க உ.பி. அரசு முடிவெடுத்தாலும் உடனடித் தீர்வு கிடைக்காது. அதற்குப் பல கட்டங்களில் வேலை செய்ய வேண்டும். முதல் கட்டமாக, அரசுப் பள்ளியில் மாணவர் வருகையை அதிகரிக்க மாதக் கல்விக் கட்டணமாக ரூ.300 மதிப்பிலான கூப்பன் தரலாம். ஆனால், இதன் மூலம் கல்வித்தரத்தை உயர்த்த முடியாதே! ஆகவே, விடுதியுடன்கூடிய ஐந்து முதல் ஆறு பள்ளிகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசாங்கம் தொடங்கலாம். அதற்கு ‘ஜவஹர் நவோதயா வித்யாலயாஸ்’ பள்ளிகளைச் சிறந்த மாதிரியாக எடுத்துக் கொள்ளலாம். நுழைவுத் தேர்வின் அடிப்படையில் இந்தப் பள்ளிகளில் 2,000 முதல் 3,000 மாணவர்களைச் சேர்க்கலாம். தேர்வு எனும்போது ஒரு சிறு போட்டி இருக்கும். அது நிச்சயம் உற்சாகம் ஊட்டும். அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு மாவட்டத்தையும் சேர்ந்த தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளின் தரத்தையும் துல்லியமாக மதிப்பிட ஏதுவாக இருக்கும். நுழைவுத் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெரும் மாணவர்கள் ஆவலோடு படிப்பார்கள். கூப்பன் முறையும் மேலும் அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்துக்கும் உத்வேகம் ஊட்டும். அரசுப் பள்ளிகளின் இத்தகைய சிறப்புத் திட்டத்தைக் கண்டு தனியார் பள்ளிகளுக்கும் தங்கள் தரத்தை உயர்த்தும் நிர்ப்பந்தம் உண்டாகும். அவர்களும் பயிற்சி பெற்ற சிறந்த ஆசிரியர்களைத் தங்கள் பள்ளியில் தக்கவைத்துக்கொள்ளக் கூடுதல் முயற்சிகள் எடுப்பார்கள். இதில் மிகவும் முக்கியமானது சிறப்புக் கூப்பனை அறிமுகப்படுத்துவதுதான். இந்தத் திட்டம் நிச்சயமாக அரசுப் பள்ளிகளின் பொறுப்பை அதிகரிக்கும். அரசுப் பள்ளி ஆசிரியர்களின் சம்பளத்தைக்கூட நிரந்தரச் சம்பளம், ஊக்கத்தொகை என இரண்டாகப் பிரித்துக்கொள்ளலாம். இப்படியாகச் சிறப்புக் கூப்பனைக் கையில் வைத்துக்கொண்டு தனியார் பள்ளிகளுக்கு அரசுப் பள்ளிகள் சவால்விடலாம்!




2 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive