'சட்டப்படிப்பு படிப்பதற்கான வயது வரம்பை நீக்கும் உத்தரவில் தலையிட
முடியாது' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சட்டப்படிப்பின் தரத்தை
உயர்த்த, தேசிய சட்ட ஆணையம் மத்திய அரசுக்கு, 2002-ல் அறிக்கை அளித்தது.
இதையடுத்து, 2008ல் சட்டப் படிப்புக்கான விதிகளை, இந்திய பார் கவுன்சில்
வரையறுத்தது. அதில், சட்டப்படிப்புக்கு முதன் முறையாக, நாடு தழுவிய அளவில்,
வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டது.
இந்த வயது வரம்பை எதிர்த்து உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச
நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் அமைத்த
மூன்று பேர் குழு, 'சட்டப் படிப்புக்கான வயது வரம்பு விதியைக் கட்டாயமாக
அமல்படுத்த வேண்டும்' என, பரிந்துரை செய்தது.
இந்நிலையில், சட்டப் படிப்புக்கான வயது வரம்பு விதியை மறுபரிசீலனை செய்ய,
வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் தலைமையில், ஒரு நபர் குழுவை பார் கவுன்சில்
அமைத்தது. இக்குழு சட்டப் படிப்புக்கான வயது வரம்பை அறவே நீக்கும்படி,
2013ல் பரிந்துரை செய்தது.
இதையடுத்து, சட்டக் கல்விக்கான வயது வரம்பை நீக்கி, இந்திய பார் கவுன்சில், 2013 செப்டம்பரில் உத்தரவிட்டது.
வழக்கு தாக்கல்
இந்நிலையில், தமிழகத்தில், 2015 - 16ம் ஆண்டுக்கான சட்டப் படிப்பு மாணவர்
சேர்க்கை துவங்கியது.இதில், இந்திய பார் கவுன்சில் ஆணைப்படி, மூன்றாண்டு
சட்டப் படிப்பில் சேர வயது வரம்பு இல்லை; 5 ஆண்டு சட்டப் படிப்பில்
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு மட்டும் வயது வரம்பு இல்லை
என்றும், மற்ற இனத்தவருக்கு, 21 வயது என்றும் நிர்ணயிக்கப்பட்டு, தமிழக
அரசு உத்தரவிட்டது.
ஆனால், 'இந்த அறிவிப்பு உச்ச நீதிமன்றத்தின், மூன்று பேர் குழு தாக்கல்
செய்த பரிந்துரைக்கு எதிரானது' என, மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு
தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், பார் கவுன்சிலின் வயது
வரம்பு தளர்வு உத்தரவை ரத்து செய்து, ஏற்கனவே இருந்த முறைப்படி, வயது
வரம்பு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிட்டது. இந்த உத்தரவை
எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை, நீதிபதிகள்
ஜே.எஸ்.கெஹார் மற்றும் ரோஹிண்டன் நாரிமன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச்
விசாரித்து, மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்தது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...