Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கனமழை நிவாரணப் பணி - நெகிழ வைத்த 'நெட்டிசன்'கள்!

     'புரட்சியை மட்டுமல்ல; மனிதத்தையும் விதைக்கலாம்' என நிரூபித்திருக்கின்றன, சமூக வலைதளங்கள். பொதுவாக, 'டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ் ஆப்' ஆகியவை, வேறுவேறு தளங்களில் இயங்குபவை. இந்த மூன்றையும் இணைத்திருக்கிறது, சென்னை மற்றும் கடலுாரில் பெய்த பேய் மழை.

           'லைக்' போதையில் இருக்கும் பேஸ்புக்வாசிகள் செய்த ஒரு, 'ஷேர்'; 'ரீட்விட்' போதையில் இருக்கும் டுவிட்டர்வாசிகள் செய்த ஒரு, 'ரீட்விட்', வதந்திக்கு பெயர் போன, 'வாட்ஸ் ஆப்'வாசிகளின் ஒரு, 'பார்வேர்டு மெசேஜ்', வெள்ளத்தில் சிக்கிய பலரை காப்பாற்றியுள்ளது; பலரை பசியாற வைத்துஉள்ளது; பலரை உறவுகளிடம் சேர்த்துள்ளது.



சுருக்கமாக சொன்னால், வளசரவாக்கத்தில் நீர் சூழ்ந்த அடுக்குமாடி குடியிருப்பில் சிக்கிய கர்ப்பிணியை மீட்க வழி வகுத்திருக்கிறது, தக்க சமயத்தில் பரிமாறப்பட்ட ஒரு ட்விட்.

சென்னைவாசிகள் தவிப்பு 'பவர் கட், சிக்னல் கிடைக்கவில்லை' என, சென்னைவாசிகள் தத்தளித்து கொண்டிருக்க, 'சென்னையில் தானே நெட்வொர்க் பிராப்ளம், நாங்க பாத்துக்குறோம்' என, உலகெங்கும் உள்ள தமிழ் நெட்டிசன்கள் ஒன்றுபட்டதும், அதற்கு கிடைத்த பலனும் உண்மையிலேயே பிரமிக்க வைத்துஇருக்கிறது.


தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் வழங்கும் நிவாரணப் பொருட்களை ஆளுங்கட்சியினர் தடுப்பதை, ஆதாரத்துடன் வெளியிட்டு, சமூக வலைதளங்களுக்கென ஒரு, 'பவர்' இருக்கிறது என புரிய வைத்துள்ளது. இணையவாசிகள் வெறுமன வாய்ச்சவடால் மட்டுமே விடுபவர்கள் அல்ல என உணர்த்தியுள்ளது.

'சென்னையில், வாகன வசதியுடன் உணவு தயாராக உள்ளது; தேவைப்படும் இடத்திற்கு கொண்டு வரப்படும்' என, தெரிவித்துவிட்டு, தொடர்புக்கு, ஒரு மொபைல் எண்ணையும் பகிர்ந்திருந்தார், டுவிட்டரில் ஒருவர்.

நிவாரண பணிகள்:அதை நுாற்றுக்கும் மேற்பட்டோர், 'ரீட்விட்' செய்ய, அந்த எண்ணை தொடர்பு கொண்டதில், மழையால் பாதிக்கப்பட்ட பலரும் பசியாறி இருக்கின்றனர்; இது, ஒரு உதாரணம் தான்.

'வேளச்சேரி அருகே நண்பர் சபா, 2,000 பேருக்கான உணவுடன் காத்திருக்கிறார்; தொடர்புக்கு...' , 'கே.எம்.சி., மருத்துவக் கல்லுாரி மாணவர்களுக்கு குடிநீர் தேவை; தொடர்புக்கு...', மருத்துவ ஆலோசனை; தொடர்புக்கு..' என, பேஸ்புக், ட்விட்டரில், கடந்த நான்கு நாள்களாக எங்கு திரும்பினாலும் நிவாரணப் பணிகள் ஜோர்.


கடலுாரில் முகாம்:


தாம்பரத்துக்கு இவர், வேளச்சேரி ஏரியாவுக்கு இவர், மத்திய சென்னைக்கு இவர், வட சென்னைக்கு இவர் என, டுவிட்டரில் ஏற்கனவே நன்கு பரிச்சயப்பட்ட நண்பர்கள் ஒரு குழுவாக கூடி, வேலையைப் பகிர்ந்துள்ளனர். நிதி அளிக்க முடியாதவர்கள், தன்னார்வலராக களமிறங்கியுள்ளனர்.'சென்னை, மீடியாவின் கண்காணிப்பில் இருக்கிறது; அதனால் நாம், கடலுார் பக்கம் போவோம்' என, அமர் என்பவர் தலைமையிலான ஒரு குழு, கடலுார் மாவட்டத்தில் முகாமிட்டிருக்கிறது. அங்கிருந்தபடி, அவர் ஒவ்வொரு தேவையையும் டுவிட்டரில், 'அப்டேட்' செய்ய, அந்த உதவியை செய்யக்கூடிய பொருத்தமான நபரை, கோர்த்து விடுகின்றனர் பலர்.

உதாரணத்துக்கு, போர்வை தேவையெனில் ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் இருக்கும் டுவிட்டர் நண்பர்களுக்கு, 'மென்சன்' செய்கின்றனர். இதைப் பார்த்து அவர், தனக்கு தெரிந்த நண்பர் வட்டாரத்தை உசுப்பேத்துகிறார்.


இளைஞர்கள் ஆர்வம்:




சமூக வலைதள தகவல் பரிமாற்றத்தினாலேயே கோவை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நிவாரணப் பொருட்களுடன் நேற்று, பல வாகனங்கள் கடலுாருக்கு விரைந்துள்ளன.

உதவிக்கோரி வரும் தகவல்களை வெறுமன பகிர்வதோடு மட்டுமல்லாது, அந்த இடம் தங்களுக்கு அருகில் இருந்தால், அவர்களே உதவுகின்றனர்; அதை புகைப்படத்துடன் பதிவிடுகின்றனர்; இதைப் பார்த்து, சென்னையில் உள்ள பல இளைஞர்கள், தன்னார்வலராக களமிறங்கியுள்ளனர். களத்தில் பணியாற்ற முடியாதவர்கள், நம்பகமான நண்பர்களுக்கு நிதி அளிக்கின்றனர்.
தவறாகப் பயன்படுத்தப்படும் என்பதால், பொதுவாக சமூக வலைதளங்களில் மொபைல் எண்ணை வெளிப்படுத்த தயங்குவோம். ஆனால், 'மாற்று சேலை இல்லாமல் இங்கு நாங்கள் தவித்து வருகிறோம்; உதவ முடியுமா? தொடர்புக்கு....' என, தயங்காமல் பெண் ஒருவர் தன் மொபைல் எண்ணை பேஸ்புக்கில் பரிமாறி இருந்தார்.இப்படி எங்கெங்கும், நுாற்றுக்கணக்கான மொபைல் எண்கள்; அதற்கான பதில்கள், உதவி என நெகிழ வைத்துள்ளது, இந்த நெட்டிசன்களின் சேவை.


'அன்போடு கொச்சி' அள்ளி தந்தது!


சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, கேரள மாநிலம், கொச்சியைச் சேர்ந்த இளைஞர்கள், டிச., 2ம் தேதி, 'அன்போடு கொச்சி' என்ற அமைப்பை, 'பேஸ்புக்'கில் துவங்கினர். குறுகிய காலத்துக்குள் இந்த அமைப்பில், 2,500 பேர் உறுப்பினராகி உள்ளனர்.



சில மணி நேரங்களில், உலகின் மூலை முடுக்குகளில் இருந்து, கேரள மாநிலத்தவர் உதவ முன்வந்தனர். அடுத்த, 24 மணி நேரத்துக்குள், அந்த இளைஞர்கள் ஏற்பாடு செய்திருந்த விளையாட்டு மைதானத்தில், 50 டன் நிவாரணப் பொருட்கள் குவிந்தன. இரண்டு நாட்களுக்குள், சென்னைக்கு, 10 லாரிகளில் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டன; பொருட்கள் இன்னும் வந்துகொண்டிருக்கின்றன.

இத்துடன், அந்த இளைஞர்களில் சிலர், சென்னைக்கு வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 'அண்டை மாநிலத்தில் தான் பிரச்னை; நமக்கு என்ன வந்தது' என்றில்லாமல், கொச்சி இளைஞர்கள் உதவ முன்வந்து இருப்பது, பரிவு காட்டுவதற்கு எல்லைகள் தடையல்லை என்பதையே காட்டுகிறது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive