சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பள்ளிக்கூடங்கள் ஒரு மாதமாக மூடியே கிடக்கின்றன.
கடந்த மாதம் 8–ந்தேதியில் இருந்து சென்னை,
திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்ட பள்ளிக்கூடங்களுக்கு மழை காரணமாக விடுமுறை
விடப்பட்டது. தொடர்ந்து பெய்த மழையால், மழையின் அளவு மற்றும் அது பெய்யும்
நிலையை பொறுத்து விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த விடுமுறை 25–ந்தேதி வரை நீடித்தது.
இதன் பின்னர் மழை கொஞ்சம் விடுமுறை எடுத்துக் கொண்டதால் பள்ளிகள்
திறக்கப்பட்டன. கடந்த மாதம் 26, 27, 28 ஆகிய தேதிகளில் மட்டும் பள்ளிகள்
திறக்கப்பட்டன. 28–ந்தேதி சனிக்கிழமை என்ற போதிலும் அன்று அனைத்து
பள்ளிகளுமே முழு நேரமும் செயல்பட்டன.
இந்த 3 நாட்களும் பள்ளிகளின் நேரமும்
அதிகரிக்கப்பட்டிருந்தது. மாலை 3.30 மணிக்கு முடியும் பள்ளிகள் 4.30 மணி
வரையிலும் கூடுதலாக ஒரு மணி நேரம் செயல்பட்டன.
மழையும் நன்கு ஓய்ந்திருந்ததால் தொடர்ந்து
பள்ளிகள் செயல்படும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. கடந்த 29–ந்தேதி
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம். மறுநாள் திங்கட்கிழமை (30–ந்தேதி)யில்
இருந்தே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது.
இந்த மாதம் (டிசம்பர்) 1–ந்தேதி அன்று
யாரும் எதிர்பாராத வகையில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் சென்னை
மாநகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.
இதையடுத்து இன்று (டிசம்பர் 6–ந்தேதி) வரை
பள்ளிகளுக்கு தொடர்ந்து 6 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. அதற்குள் மழை
வெள்ளம் வடிந்து விடும். நாளை (7–ந்தேதி) முதல் பள்ளிகளை திறந்துவிட
வாய்ப்பு ஏற்படும் என்றே கல்விதுறை அதிகாரிகள் நினைத்திருந்தனர்.
ஆனால் இன்னும் பல இடங்களில் வெள்ளம் வடியாத நிலையில், பெரும்பாலான பள்ளிகள் முகாம்களாகவே செயல்பட்டு வருகின்றன.
இதற்கிடையே சென்னை, காஞ்சிபுரம்,
திருவள்ளூர், நாகை, கடலூர், தஞ்சாவூர், பெரம்பலூர், வேலூர், திருவண்ணமாலை,
புதுக்கோட்டை, திண்டுக்கல், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் சுற்றுவட்டாரப்
பகுதிகளிலும், புதுச்சேரியிலும் இன்று காலை முதல் பரவலாக கனமழை பெய்து
வருகிறது.
இதனால் கடந்த ஒரு மாதமாகவே மூடிக்கிடக்கும்
பள்ளிகள் மீண்டும் திறக்கப் படுவதற்கு மேலும் காலதாமதம் ஆகும் என்றே
எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...