கிறிஸ்துமஸ் தொடர் விடுமுறையை ரத்து செய்ய, தனியார் பள்ளிகள் முடிவு
செய்துள்ளன. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கடலுார்
மாவட்டங்களில், கன மழை மற்றும் வெள்ளப்பெருக்கால், ஒரு மாதமாக பள்ளிகள்
இயங்கவில்லை. டிச., 14 முதல், பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன.
எனினும், டிச., 22க்குள் முடிக்க வேண்டிய, 10ம் வகுப்பு, பிளஸ் 2 அரையாண்டு
தேர்வுகள் மற்றும்,1ம் வகுப்பு முதல், 9ம் வகுப்பு வரையிலான, இரண்டாம்
பருவ தேர்வுகளை நடத்துவதா, வேண்டாமா என, பள்ளிக் கல்வித்துறையும், பள்ளி
நிர்வாகமும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளன.
இரண்டாம் பருவ பாடங்களை நடத்தாமல், தேர்வை மட்டும் நடத்த முடியாது
என்பதால், டிச., 24 முதல், ஜன., 1 வரையிலான, கிறிஸ்துமஸ் பண்டிகை தொடர்
விடுமுறை நாட்களை ரத்து செய்ய, தனியார் பள்ளிகள் முடிவு செய்துள்ளன.சென்னை,
எழும்பூர் டான் போஸ்கோ பள்ளி, 'டிச., 15 முதல், அரையாண்டு தேர்வுக்கு
முந்தைய திருப்புதல் தேர்வு நடக்கும்; டிச., 24 மீலாது நபி, 25ல்
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மட்டும் விடுமுறை விடப்படும்; டிச., 26 முதல்,
வழக்கமான வகுப்புகள் நடக்கும்' என, அறிவித்துள்ளது.
மேலும் சில பள்ளிகள், விடுமுறை மற்றும் தேர்வு குறித்து பெற்றோர்,
மாணவர்களிடம் கருத்து கேட்டு வருகின்றன. இதில், 50 சதவீத பெற்றோர்,
'அரையாண்டு தேர்வுக்கு பதில், விடுமுறை நாட்களிலும் வகுப்புகள் நடத்தலாம்'
என, தெரிவித்துள்ளனர். மற்றொரு தரப்பினர், டிசம்பர் விடுமுறைக்கு, வெளியூர்
செல்ல திட்டமிட்டு, டிக்கெட் முன்பதிவு உட்பட, பல ஏற்பாடுகள் செய்து
விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால், தனியார் பள்ளி நிர்வாகங்கள்
குழப்பத்தில் உள்ளன.
இதுகுறித்து, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலர்
இளங்கோவன் கூறும்போது, ''தேர்வு மற்றும் விடுமுறை குறித்து, இன்னும் முடிவு
எடுக்கவில்லை. முதற்கட்டமாக, பள்ளிகளை திறந்து இயல்பு நிலைக்கு வர
வேண்டும். அதன்பின், தேர்வு மற்றும் விடுமுறையை திட்டமிட முடியும். சில
தனியார் பள்ளிகள் முடிவு எடுத்தால், அது அவர்களின்நிர்வாகம் தொடர்பானது,''
என்றார்.-
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...