ஆதிதிராவிடர் நலப் பள்ளியில், தலைமை ஆசிரியர் உட்பட, நான்கு பணியிடங்கள் காலியாக உள்ளதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.
பள்ளியில் உள்ள கழிப்பறைகளை பராமரிக்காததால், சுகாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது.பொன்னேரி ரயில் நிலைய சாலையில், 1932ல் துவங்கப்பட்ட, ஆதிதிராவிடர் நலத்துறை நடுநிலைப் பள்ளியில், 1 முதல் 8ம் வகுப்பு வரை, 84மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர்.
இந்த பள்ளியில், ஒரு தலைமை ஆசிரியர், இரு பட்டதாரி ஆசிரியர்கள், மூன்று இளநிலை ஆசிரியர்கள் என, மொத்தம், ஆறு ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும். கடந்த மார்ச் மாதம், பள்ளியின் தலைமையாசிரியர் பணியிடமாற்றம் பெற்று சென்றார்.அதனால், தலைமை ஆசிரியர் உட்பட நான்கு பணியிடங்கள் நிரப்பப்படாமல்காலியாகவே உள்ளன. காலி பணியிடங்களால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது குறித்து, கடந்த, ஜூன் மாதம், நமது நாளிதழில்செய்தி வெளியானது. இதையடுத்து, இரண்டு ஆசிரியர்கள் அந்த பள்ளிக்கு நியமிக்கப்பட்டனர். ஆனால், அடுத்த ஒரு மாதத்திலேயே, அவர்கள் வேறு பள்ளிகளுக்கு, இடமாற்றம் செய்யப்பட்டனர்.
ஓராசிரியர் பள்ளியாக...
தற்போதுள்ள இரண்டு ஆசிரியர்களில், ஒருவர் மாற்றி ஒருவர், அலுவலக பணிகளுக்கு சென்று விடுவதால், பெரும்பாலான நேரங்களில், ஓராசிரியர் பள்ளியாகவே இயங்குகிறது. பள்ளியில் ஆசிரியர்கள் இல்லா ததால், 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், ஒன்று முதல், 5ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு, பாடம் நடத்திவருகின்றனர்.ஆசிரியர்கள் பற்றாக்குறையால், மாணவர்களின் அடிப்படைக் கல்வி பாதிக்கப்பட்டு உள்ளது.
ஊக்கத்தொகை?
ஒன்பது மாதங்களாக, தலைமை ஆசிரியர் இல்லாததால், பள்ளியில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, ஊக்கத்தொகை கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும், பள்ளியில் துப்புரவு பணியாளர் இல்லாததால், குடிநீர், கழிப்பறை உள்ளிட்டவை முறையாகப் பராமரிக்கப்படாமல், சுகாதாரம் கேள்விக்குறியாகி, தொற்று நோய் பரவும் ஆபத்து உள்ளது.இதனால், மாணவர்களே சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது:ஆசிரியர்களை நியமிக்காமல், ஆதிதிராவிடர் நலத்துறை நிர்வாகம் அலட்சியம் காட்டிவருகிறது. மாணவர்களின் கல்வித் திறன் பாதிக்கப்பட்டு உள்ளது. அடிப்படைக் கல்வி தரமானதாக இல்லை என்றால், மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்பதை, அதிகாரிகள் உணர்வதில்லை. பள்ளிக்கு போதுமான ஆசிரியர்களை உடனடியாக நியமிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, மாவட்ட கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஆதிதிராவிடர் நலத்துறை நடுநிலைப் பள்ளியில், ஆசிரியர்கள் பற்றாக்குறை குறித்து, கல்வி இயக்குனரகத்திற்கு, தெரிவிக்கப்பட்டு உள்ளது. இரண்டு ஆசிரியர்களை நியமிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. விரைவில், ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவர். அடிப்படை வசதிகளும் சீரமைக்கப்படும்.இவ்வாறுஅவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...