15 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து ஜனவரி 30 முதல் பிப்.,1 வரை தொடர் பஸ் மறியல் நடத்தப்படும் என, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
மாநில துணை பொது செயலாளர் மயில் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:தமிழகத்தில் 6 வது ஊதியக்குழுவை அரசு ஊழியர் ,
ஆசிரியர்களுக்கு அரசு அமல்படுத்தியது. அதில், இடைநிலை ஆசிரியர்களுக்கு
மத்திய அரசுக்கு இணையான சம்பளம் வழங்கவில்லை. இதனால் 70 ஆயிரம் இடைநிலை
ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டனர். ஏற்கனவே 2006 ஜனவரிக்கு முன் மத்திய
அரசுக்கு இணையான சம்பளத்தை தமிழகத்தில் உள்ள இடைநிலை ஆசிரியர்கள் பெற்றனர்.
அந்த சம்பளத்தை 6வது ஊதியக்குழுவின் மூலம் தமிழக அரசு பறித்துவிட்டது.
இதை எதிர்த்து எங்கள் கூட்டமைப்பு சார்பில், பல கட்டபோராட்டம்
நடத்தப்பட்டது. சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது '6வது ஊதியக்குழு
முரண்பாடு களையப்படும், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ரத்தாகும்,” என
முதல்வர் ஜெ.,உறுதி அளித்தார். ஆனால், இன்று வரை அது நடக்கவில்லை.
தமிழகத்தில், ஆங்கில வழிக்கல்வி பள்ளிகளின் தோற்றத்தால், அரசு பள்ளிகள்
பின்னடைவை சந்தித்து வருகின்றன.டிச.,18ல் நைரோபியில் நடந்த உலக வர்த்தக
அமைப்பு மாநாட்டில் கல்வி, சுகாதாரம் காக்கப்படும் என, மத்திய அரசு
கையெழுத்திட்டது. இதன் மூலம் உலக வர்த்தக அமைப்பில் உள்ள எந்த நாடும்
இந்தியாவில் உயர்கல்வி நிலையங்கள் துவக்கலாம். இதனால் கல்வி வணிகமாக மாறி,
உயர்கல்வி எட்டாக்கனியாகும்.
பிப்ரவரி 5 முதல் 7ம் தேதி வரை துாத்துக்குடி, கோவில்பட்டியில் 6வது மாநில
மாநாடு நடக்க உள்ளது. இதில் 60 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர். இவை
உட்பட 15 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, ஜாக்டோ பேரமைப்பு சார்பில், ஜனவரி
30 முதல் பிப்ரவரி 1 வரை அனைத்து மாவட்ட தலைநகரங்களில் தொடர் மறியல்
போராட்டம் நடக்கும்.
ரூ.10 ஆயிரம் கோடி: 6வது ஊதியக்குழு பரிந்துரைப்படி சம்பளம் வழங்காததால்,
இடைநிலை ஆசிரியருக்கு மாதம் ரூ.10 ஆயிரம் இழப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய
அரசு இடைநிலை ஆசிரியருக்கு அடிப்படை ஊதியம் ரூ.9,300; தர ஊதியம் ரூ.4,200
என நிர்ணயித்தது. ஆனால், தமிழக அரசு ரூ.5,200; ரூ.2,800 என குறைத்து
நிர்ணயம் செய்துள்ளது, என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...