வரலாறு காணாத கனமழை வெள்ளத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும்
கடலூர் மாவட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வீடு, உடமைகளை இழந்த
மக்களுக்கு அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.
வெள்ளத்தில் பாடப்புத்தகம், நோட்டு புத்தகம், கல்வி சான்றிதழ்களை இழந்த மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடுகளையும் பள்ளிக்கல்வி துறை செய்துள்ளது.மேலும் மழையால் ஒரு மாதத்திற்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்ததால் 10–ம் வகுப்பு, பிளஸ்–2 மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில் அனைத்து உதவிகளையும் அரசு செய்வதாக உறுதியளித்து உள்ளது.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மன நல கவுன்சிலிங் வழங்கப்பட்டு வருகிறது.தொற்று நோய் பரவாமல் தடுக்க மருத்துவ முகாமும் நடத்தப்பட்டன. மாணவர்களின் தேர்வு பயத்தை போக்கவும், பொதுத்தேர்வுஎழுதக்கூடிய மாணவர்கள் குறைந்தபட்ச மதிப்பெண் எடுத்து தேர்வில் வெற்றி பெறவும் அரசு சிறப்பு வழிமுறைகளையும் அறிவித்துள்ளது.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் 10 மற்றும் 12–ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு கையேடு வழங்கப்படும் என்று கல்வித்துறை செயலாளர் சபீதா அறிவித்து இருந்தார்.குறைந்தபட்ச மதிப்பெண் அதாவது பாஸ் பெறுவதற்கான வினா–விடைகள் அடங்கிய குறிப்புகள் அதில் இடம் பெற்று இருக்கும். அதனை படித்தால் அனைத்து மாணவர்களும் எளிதாக வெற்றி பெற முடியும். அந்த வகையில் சிறப்பு கையேடு தயாரிக்கப்படுகிறது.
ஏற்கனவே பிற மாவட்டங்களில் படிப்பில் குறைவாக உள்ள மாணவர்களுக்கு இதுபோன்ற ஒரு கையேடு வழங்கப்பட்டு வருகிறது. அவற்றுடன் மேலும் சில பகுதிகளும் இணைக்கப்பட்டு புதிதாக இவை தயாரிக்கப்படுகிறது.சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் 6 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத உள்ளனர். அவர்களுக்கு சிறப்பு கையேடு வழங்க அச்சடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.10–ம் வகுப்பு மாணவர்களுக்கு 3 லட்சம் கையேடுகளும் 12–ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடவாரியாக 10 லட்சம் கையேடுகளும் அச்சடிக்கப்படுகின்றன.10–ம் வகுப்பு மாணவர்களுக்கு அனைத்து பாடங்களுக்கும் ஒரே புத்தகமாகவும் பிளஸ்-2 மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம் மொழிப் பாடத்திற்கு ஒருபுத்தகமும் மற்ற பாடங்களுக்கு தனித் தனியாகவும் கையேடுகள் அச்சடிக்கப்படுகின்றன.பிளஸ்–2 மாணவர்களுக்கு 2–க்கும் மேற்பட்ட புத்தகங்கள் வழங்கப்படும். இதில் அனைத்து பாடங்களில் உள்ள முக்கிய வினாக்களும் அதற்கு உண்டான பதில்களும் இடம் பெறும்.இந்த சிறப்பு கையேடுகள் மாணவ–மாணவிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும். கையேடுகள் அச்சடிக்கும் பணி அரசு அச்சகத்தில் இரவு–பகலாக நடக்கிறது.கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் 2–ந் தேதி திறக்கும்போது 4 மாவட்ட மாணவ–மாணவிகளுக்கும் கையேடுகள் வழங்கப்படும். அதற்கான அனைத்து பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக கல்வி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...