வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இது மேற்கு நோக்கி
நகரும்போது நாளை(ஞாயிற்றுக்கிழமை) முதல் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய
வாய்ப்பு உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை காலத்தில் சராசரியாக பெய்யவேண்டிய
மழை அளவு 44 செ.மீ. ஆனால் இந்த வருடம் இதுவரை தமிழ்நாட்டில் பெய்த மழை அளவு
48 செ.மீ.,
சென்னையில் பெய்ய வேண்டிய சராசரி மழை அளவு 79 செ.மீ. ஆனால் இந்த வருடம் இதுவரை பெய்த மழைஅளவு 114 செ.மீ.
கடந்த 2005-ம் ஆண்டு தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலத்தில் 77
செ.மீ.மழை பெய்துள்ளது. இது சராசரி மழையைவிட 79 சதவீதம் அதிகம். அதாவது மழை
கொட்டித்தீர்த்துள்ளது. 1918-ம்ஆண்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் 109
செ.மீ.மழையும், 1985-ம்ஆண்டு மீனம்பாக்கத்தில் 107 செ.மீ.மழையும் அதிக
பட்சமாக பெய்துள்ளது.
புதிய காற்றழுத்த தாழ்வு நிலை
இப்போது தென்கிழக்கு வங்கக்கடலில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது.
இது பற்றி சென்னை வானிலை மண்டல ஆராய்ச்சி மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது:-
தென் மேற்கு வங்கக்கடலில் நிலவிவந்த மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்
கிழக்கு வங்கக்கடலில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி
உள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணிநேரத்திற்கு தமிழ்நாட்டில் சில
இடங்களில் மழை பெய்யும்.
நாளை முதல் அதிகரிக்கும்
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகர்ந்து தென் மேற்கு
வங்கக்கடலில் இலங்கை அருகே வரும்போது தமிழ்நாட்டில் மழையின் அளவு
அதிகரிக்கும். அதாவது நாளை(ஞாயிற்றுக்கிழமை) முதல் கடலோர மாவட்டங்களில்
மழையின் அளவு அதிகரிக்கும். ஞாயிற்றுக்கிழமை, திங்கட்கிழமைகளில் கடலோர
மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
நேற்று காலை 8-30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் கேளம்பாக்கத்தில் 4
செ.மீ.மழையும், குடவாசலில் 3 செ.மீ.மழையும், காரைக்கால், மகாபலிபுரம்,
வலங்கைமான், சீர்காழி தலா 2 செ.மீ.மழையும், நன்னிலம், கீழ் அணைக்கட்டு,
கும்பகோணம், மயிலாடுதுறை, பாபநாசம்(தஞ்சைமாவட்டம்) ஆணைக்காரன் சத்திரம்,
தரங்கம்பாடி, திருவிடை மருதூர், நாகப்பட்டினம், பேச்சிப்பாறை, ஆடுதுறை,
பாண்டவராயர் தலை தலா 1 செ.மீ.மழை பெய்துள்ளது.
இவ்வாறு எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...