ரயிலில் பயணம் செய்யும் பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக விரைவில் மொபைல் ஆப் (செயலி) அறிமுகப்படுத்தப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கூறினார்.
இதுகுறித்து, அவர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
ரயில்களில் பயணம் செய்யும் பெண் பயணிகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்காக விரைவில் மொபைல் ஆப் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக அகில இந்திய அளவிலான மொபைல் அப்ளிகேஷன் சேவை உருவாக்கப்படும். இதன் மூலம்,பெண் பயணிகள் ரயில்வே பாதுகாப்பு படையின் உதவியை விரைவாக பெற முடியும்.சமூக விரோதிகள் கைவரிசையைக் காட்ட ரயில்கள் எளிதான இலக்காக உள்ளன. எனவே, இத்தகைய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள ரயில்வே பாதுகாப்பு படையில் நுண்ணறிவுப் பிரிவை ஏற்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதற்கான நிதியுதவி ரயில்வே பாதுகாப்பு படைக்கு வழங்கப்படும்.பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்பவர்களை பிடிப்பதற்காக ஏற்கெனவே நாடு தழுவிய அளவில் சிறப்பு தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளது. ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார், மாநில போலீஸாருடன் இணைந்து பணியாற்றி குற்றங்களைத் தடுக்க வேண்டும். இது தொடர்பாக, அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளேன்.இவ்வாறு அமைச்சர் சுரேஷ் பிரபு கூறினார்.
சென்னை கோட்ட ரயில்வே எஸ்.பி. விஜயகுமார் கூறும்போது, ‘‘ரயில் பயணிகள் அவசர உதவிக்கு 1512 என்ற இலவச அழைப்பு எண்ணிலும், 9962500500 என்ற செல்போன் எண்ணிலும் 24 மணி நேரமும் தொடர்புகொள்ளலாம். மேலே குறிப்பிடப்பட்டுள்ள செல்போன் எண்ணில் ‘வாட்ஸ் அப்' மூலமும் புகார் தெரிவிக்கலாம்.
இப்போது பெண்களின் வசதிக்காக புதிய ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புகார் கொடுக்கும்போது, அவர்கள் பயணம் செய்யும் ரயிலின் விவரம், சம்பவ இடம் மற்றும் விவரங்கள் உடனடியாக காவல் துறைக்கு தெரியவரும். இதனால் ஓரிருநிமிடங்களில் போலீஸின் உதவி அவர்களுக்கு கிடைக்கும். குற்றவாளிகளை பிடிக்கவும், குற்றங்களை தடுக்கவும் புதிய ஆப் உதவியாக இருக்கும்’’ என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...