தாழ்த்தப்பட்ட, பழங்குடியின (எஸ்.சி. - எஸ்.டி.) பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் 8-ஆம் வகுப்பு படிக்கும்போது, அவர்கள் சார்ந்த பள்ளிகளிலேயே
ஜாதிச் சான்றிதழையும், இருப்பிடச் சான்றிதழையும் பெறுவதற்கான புதிய வரைவு
விதிமுறைகளை மத்திய அரசு உருவாக்கியிருக்கிறது.
இதுதவிர, அந்கப் பிரிவுகளைச் சேர்ந்த குழந்தைகளுக்கு, பிறப்புச்
சான்றிதழின் அடிப்படையில் ஜாதிச் சான்றிதழ் கிடைக்கும் வகையிலும் புதிய
விதிமுறைகளை மத்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.
இந்தப் புதிய வரைவு விதிமுறைகள் குறித்த கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை
அடுத்த மாதம் (டிசம்பர்) 21-ஆம் தேதி வரை தெரிவிக்கலாம் என மத்திய
பணியாளர், பயிற்சித் துறை அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
மத்திய அரசின் கீழ் நடைபெறும் சேர்க்கைகளுக்கும், சேவைகளுக்கும்
விண்ணப்பிப்பதற்காக தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்கள் ஜாதிச் சான்றிதழ்
அல்லது இருப்பிடச் சான்றிதழ் பெறுவதில் சிக்கல்களை எதிர்கொள்வதாக
தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து மேற்கண்ட நடவடிக்கையை
மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
இதுவரையிலும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கான ஜாதிச்
சான்றிதழையும், இருப்பிடச் சான்றிதழையும், வருவாய்த் துறை அதிகாரிகள்
மூலமாக மாநில அரசுகளும், யூனியன் பிரதேச அரசுகளும் வழங்கி வருகின்றன.
இருப்பிடச் சான்றானது, மத்திய - மாநில அரசுகளின் வேலைவாய்ப்புகள், கல்வி
ஆகியவற்றில் "உள்ளூர் மக்களுக்கான முன்னுரிமை' என்ற அடிப்படையில்
இடஒதுக்கீடு பெறுவதற்கு உதவிகரமாக இருக்கிறது.
புதிய திட்டம்: இந்நிலையில் பள்ளிகளிலேயே ஜாதிச் சான்று, இருப்பிடச் சான்று
ஆகியவற்றைப் பெறுவதற்கான வரைவு விதிமுறைகளை மத்திய அரசு
உருவாக்கியிருக்கிறது.
இதன்படி, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்கள் 8-ஆம் வகுப்பு பயிலும்போது,
ஜாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்று பெறுவதற்கு ஆதாரமான ஆவணங்களை
பள்ளிகளின் தலைமையாசிரியரே வாங்கி சரிபார்த்து, அவற்றை உரிய அதிகாரிகளின்
கவனத்துக்கு அனுப்பி வைக்க வழிவகை செய்யப்படவுள்ளது.
இந்தப் புதிய திட்டத்தை ஆண்டுதோறும் செப்டம்பர் முதல் அக்டோபர் வரையிலான
இரண்டு மாத காலகட்டத்தில் அல்லது மாநில அரசுகள் விரும்பும் காலகட்டத்தில்
செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.
மேலும், ஆவணங்கள் பெறப்பட்ட 30 முதல் 60 நாள்களுக்குள் அவற்றை ஆய்வு செய்து
மாணவர்களுக்கான ஜாதிச் சான்றிதழை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அதிகாரிகள்
அனுப்பி வைக்க வேண்டும் என்று விதிமுறை வகுக்கப்படுகிறது. ஒருவேளை
சான்றிதழ்களுக்கான விண்ணப்பம் நிராகரிக்கப்படுமானால், அதற்கான காரணத்தை
அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும் என்ற விதிமுறையையும் மத்திய அரசு
அமல்படுத்தவுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...