தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும், நேற்று
முன்தினம் இரவு முதல், கன மழை பெய்ததால், மக்கள் வீடுகளில் முடங்கினர்.
இதனால், தீபாவளி வியாபாரம், பெரிதும் பாதிப்புக்குள்ளானது.
மாவட்ட வாரியாக மழை நிலவரம் வருமாறு:
நாகப்பட்டினம்: நாகையில், செல்லுார், சவேரியார் கோவில் தெரு, பாலையூர் சுனாமி குடியிருப்பு உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில், மழை நீர் புகுந்துள்ளதால், மக்கள் மேடான பகுதிக்கு, இடம் பெயர்ந்தனர். கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டதால், மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. 1,500 விசைப்படகுகள், 4,500 பைபர் படகுகள், கரையில் நிறுத்தி வைக்கப் பட்டன. ஒரு லட்சம் மீனவர்கள், வீடுகளில் முடங்கினர்.விளை நிலங்களில், வௌ்ள நீர் புகுந்துள்ளதால், பயிர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. சாலைகளில் வெள்ளநீர் பாய்வதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.கடலுார்: நேற்று முன்தினம் காலையில் இருந்து, கனமழை பெய்தது. ஒரே நாளில், கடலுார் மாவட்டத்தில், சராசரியாக, 70.78 மி.மீ., மழை கொட்டியதால், தாழ்வான பகுதிகளில், மழை நீர் தேங்கி உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நேற்று முன்தினம் இரவு 2:30 மணி முதல், மின்சாரம் நிறுத்தப்பட்டதால், மாவட்டம் இருளில் மூழ்கியுள்ளது.கடலுார் பகுதியில், நேற்று அதிகாலை, 5:00 மணி முதல், 9:30 மணி வரை, மணிக்கு, 50 - 75 கி.மீ., வேகத்தில், சூறைக்காற்று வீசியதால், பல இடங்களில் மரங்கள் முறிந்தும், வேருடனும் சாய்ந்தும் விழுந்தன. கடலுார் அடுத்த கண்ணாரப்பேட்டையில், பெரிய மரம் ஒன்று விருத்தாசலம் ரயில் பாதையில் விழுந்தது. ஆலப்பாக்கத்தில், சிதம்பரம் மார்க்க ரயில் பாதையிலும், மரங்கள் விழுந்தன.இதனால், காரைக்காலில் இருந்து பெங்களூரு செல்லும் விரைவு ரயில், முதுநகர் ரயில் நிலையத்தில், காலை, 8:15 மணிக்கு நிறுத்தப்பட்டது. சிதம்பரம் செல்ல வேண்டிய சரக்கு ரயில், முதுநகர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. தண்டவாளத்தில் விழுந்த மரங்களை அகற்றும் பணியில், ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர்.
விழுப்புரம்:விழுப்புரம் நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு அருகே, குடிசை வீடு இடிந்து விழுந்து, சமையல் தொழிலாளி பாலு, 45, இறந்தார்.ஜெயங்கொண்டான் கிராமத்தில் ஒரு வீடு, சின்னசேலம் கருந்தலாங்குறிச்சி காலனியில், ராமசாமி என்பவரின் வீடு இடிந்து விழுந்தன.திண்டிவனம், பாரதிதாசன் பேட்டையில் மழை நீர் புகுந்து, 18 கூரை வீடுகள் சேதமடைந்தன. திண்டிவனம், வகாப் நகரில் மழை நீர் சூழ்ந்துள்ளதால், பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விக்கிரவாண்டி அடுத்த கொங்கராம்பூண்டி கிராமத்தில், 19 ஏக்கர் வாழை மரங்கள் சேதமடைந்தன.
தர்மபுரி:தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்களில்,நேற்று அதிகாலை முதல், கன மழை பெய்தது. மழை சேதம் குறித்து கண்காணித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க, ஐந்து தாசில்தார், 25 வருவாய் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டனர்.கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை, கெலவரப்பள்ளி அணை முழு கொள்ளளவை எட்ட உள்ளன. எனவே, தர்மபுரி மாவட்டத்தில், தென்பெண்ணை ஆறு செல்லும் பகுதிகளில், ஏழு குழுக்கள் அமைத்து கண்காணிக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.திருவண்ணாமலையில், கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், சாலைகளில் விழுந்த மரங்களை, நெடுஞ்சாலைத் துறையினர் உடனடியாக அகற்றினர். சேதமான மின்கம்பங்களை, மின்வாரியத்தினர் சீரமைத்தனர்.
திருச்சி:திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலுார், அரியலுார் மாவட்டங்களிலும், நேற்று முன்தினம் முதல் அவ்வபோது லேசான மழையும், கனமழையும் பெய்தது. இதனால், நான்கு லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிர்கள், நன்கு வளர்ச்சி அடையும் என்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.அரியலுார் மாவட்டத்தில், நந்தியாகுடிகாடு என்ற இடத்தில், ஓட்டு வீடு சுவர் இடிந்து விழுந்து, ஜெகதாம்பாள், 60, என்பவர் இறந்தார்.
புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டத்தில், கடல் சீற்றத்தால், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள், கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
சேலத்தில் 42.6 மி.மீ., மழை : சேலம் மாவட்டத்தில், நேற்று காலை, 10:30 மணிக்கு துவங்கிய மழை, இரவு வரை நீடித்தது. நேற்று முன்தினம், மாவட்டம் முழுவதும், 42.6 மி.மீ., மழை பெய்துள்ளது. மழையளவு விபரம் (மி.மீ.,): சேலம்,- 1.0; ஏற்காடு,- 3.8; வாழப்பாடி,- 1.0; ஆத்துார்,- 7.4; தம்மம்பட்டி,- 6.8; கெங்கவல்லி,- 11.2; வீரகனுார்,- 11.4. சங்ககிரி, இடைப்பாடி, மேட்டூர், ஓமலுாரில் மழை இல்லை.
புதுச்சேரி:புதுச்சேரியில், நேற்று அதிகாலை, 3:00 மணி முதல், கன மழையுடன் சூறைக் காற்று வீசியது. தாழ்வான பகுதிகளில், மழை வெள்ளம் சூழ்ந்தது. 25க்கும் மேற்பட்ட வீடுகள், இடிந்து விழுந்தன. அரியாங்குப்பத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில், கயிறு திரிக்கும் தொழிலாளி சுந்தரமூர்த்தி,65, என்பவர் இறந்தார்.
நகரம் மற்றும் கிராமப்புறங்களில், 500க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. பல இடங்களில் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. அதிகாலை முதல் மின் வினியோகம் அடியோடு துண்டிக்கப்பட்டது. மின்சாரம் இல்லாததால் குடிநீர் வினியோகமும் தடைபட்டது.பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீட்பு நடவடிக்கைகளில் துரிதமாக செயல்பட்டனர்.புதுச்சேரி துறைமுகத்தில், மூன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டது. வங்கக்கடலில் வழக்கத்திற்கு மாறாக, 12 அடி உயரத்திற்கு அலைகள் எழும்பின. மாலையில், காற்றும், மழையும் ஓய்ந்ததால், புதுச்சேரி நகரின் கடை வீதிகளில், தீபாவளிக்கு பொருட்கள் வாங்க, மக்கள் கூட்டம் அலைமோதியது.
நாகை மீனவர்கள் மீட்பு: நாகையை அடுத்த, கோடியக்கரையில் இருந்து, 7ம் தேதி, ஏழுமலை என்பவரின் நாட்டுபடகில், மீனவர்கள், மூன்று பேர் மீன்பிடிக்க சென்றனர். நடுக்கடலில் மீன்பிடித்தபோது, திடீரென்று சூறாவளி காற்று வீசியதால், கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டது. அலையில் சிக்கிய மீனவர்கள், திசை மாறி இலங்கை கடல் எல்லைக்குள் சென்றனர்.அவர்களுக்கு அந்நாட்டு மீனவர்கள், தவறாக திசை காட்டியதால், ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி கடல் பகுதிக்குள் வந்தனர்.இது குறித்து, அப்பகுதியில் மீன்பிடித்த, தங்கச்சிமடம் மீனவர்கள், மண்டபம் மரைன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மரைன் போலீசார், கடலில் தத்தளித்த மீனவர்களை மீட்டு, மண்டபம் கரைக்கு வந்தனர்.
மழையால் ரயில்கள் தாமதம்: பலத்த மழையால், தென் மாவட்டங்களில் இருந்து, நேற்று காலை, சென்னை எழும்பூருக்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் உட்பட, ஆறு எக்ஸ்பிரஸ் ரயில்கள், ஒரு மணி நேரம் தாமதமாக வந்தன.சென்னை புறநகர் மின்சார ரயில் பாதையில், இரண்டு இடங்களில் மரம் விழுந்ததால், புறநகர் மின்சார ரயில் போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...