வெளி மாவட்டங்களுக்கு பணிக்கு செல்லும் பெற்றோரால், பாதியில் படிப்பு
முடக்கப்படும் ஏழை மாணவர்களின் பிரச்னைக்கு, இன்னும் தீர்வு
கிடைத்தபாடில்லை.
அனைவரும் கல்வி பெற, ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான
ரூபாய்களை ஒதுக்கும் எஸ்.எஸ்.ஏ.,அதிகாரிகள், படிப்புக்கு ஏங்கும்
இக்குழந்தைகளின், மவுன அழுகையை எப்போது உணரப் போகிறது?உடுமலை
சுற்றுப்பகுதியில், நுாற்றுக்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில், ஆயிரக்கணக்கான
மாணவ, மாணவியர் படிக்கின்றனர். மாணவர்களின் இடைநிற்றலை தடுப்பது, முறையான
கல்வி, குறிப்பிட்ட வயதில் அனைவருக்கும் கல்வி என்ற நோக்கத்தின்
அடிப்படையில்தான், அரசின் சார்பில் பல்வேறு திட்டங்கள்
செயல்படுத்தப்படுகின்றன.
இருப்பினும், பெற்றோரின் அலட்சியத்தாலும், பல்வேறு குடும்ப சூழலாலும்,
குழந்தைகளுக்கு அடிப்படை கல்வி கிடைப்பதற்கு முன்பே, அவர்களின் பள்ளி
வாழ்க்கை முடிவு பெற்று விடுகிறது. உடுமலை சுற்றுப்பகுதியிலுள்ள
கிராமங்களில் வசிக்கும் பலர், வெல்லம் உற்பத்தி தொழில் புரிய, வெளி
மாவட்டங்களுக்கு செல்கின்றனர். குழந்தைகளையும், உடன் அழைத்து செல்கின்றனர்.
பெற்றோர் பணிக்கு செல்லும் மாவட்டத்திலுள்ள பள்ளியில், ஆறு மாத காலம்
படிக்கின்றனர்.
பெற்றோருக்கு பணி முடிந்த பின், மீண்டும் சொந்த கிராமத்துக்கு
திரும்புகின்றனர். மீண்டும் இப்பகுதியிலுள்ள பள்ளியில், ஆறு மாதம்
படிக்கின்றனர். அனைவருக்கும் கல்வி இயக்க(எஸ்.எஸ்.ஏ.,) திட்டத்தின்படி,
பள்ளிகளில் குழந்தைகள் எப்போது சேர்ந்தாலும் அனுமதிக்கப்படுன்றனர்.
இவ்வாறு, அடிக்கடி பள்ளிகள் மாற்றப்படுவதால், பல குழந்தைகள் படிப்பை
பாதியில் நிறுத்தி விடுகின்றனர். உடுமலை சுற்றுப்பகுதியிலுள்ள, அம்மாபட்டி,
ஜல்லிப்பட்டி, ஓனாக்கல்லுார், பெதப்பம்பட்டி, உட்பட பத்துக்கும் மேற்பட்ட
கிராமங்களில் இந்த நிலைதான் உள்ளது. இதனால், மாணவர் எண்ணிக்கை சரிவை
நோக்கியே செல்கிறது.
ஆறு மாதத்துக்கு ஒரு பள்ளி, புதிய ஆசிரியர், புதிய நண்பர்கள், புதிய சூழல்
ஆகியவற்றால் பாதிக்கப்படும் குழந்தைகளில் பலரால், உயர் வகுப்புகளுக்கு
செல்ல முடிவதில்லை. நாளடைவில் உயர்கல்வி எட்டாக்கனியாக மாறி விடுகிறது. சில
குழந்தைகள், பெற்றோர் பணிக்கு செல்லும் நாட்களில், அங்குள்ள புதிய
பள்ளியிலும் சேராமல், நீண்ட இடைவெளிக்கு பின்னர், மீண்டும் பழைய பள்ளிக்கே
வந்து சேர்கின்றனர். நடத்தும் பாடம் என்னவென்பதே புரியாமல், காலத்தை
கடத்துகின்றனர்.
'
ஆல் பாஸ்' முறையால் ஒன்பதாம் வகுப்பு வரை, இதன் பாதிப்பு தெரிவதில்லை.
பத்தாம் வகுப்பில் அம்மாணவர்கள், 'மக்கு குழந்தைகள்' என ஆசிரியர்களால்
தனிப்பட்ட முறையிலும், 'கற்றலில் பின்தங்கியவர்கள்' என ஆவணங்களிலும்
அழைக்கப்படுகின்றனர்.
ஆலைத் தொழிலுக்கு செல்லும் பெற்றோர், வீட்டில் குழந்தைகளை பராமரிக்க
வழியின்றியே, உடன் அழைத்து செல்கின்றனர். அனைவருக்கும் கல்வி அளிக்க,
கோடிக்கணக்கான ரூபாய்களை ஒதுக்கும், எஸ்.எஸ்.ஏ., அதிகாரிகள், அந்த கல்வி
முழுமையாக குழந்தைகளை சென்றடைகிறதா என்பதையும், கண்காணிப்பது அவசியம்.
எஸ்.எஸ்.ஏ., அதிகாரிகள் ஆய்வு நடத்தும் வேளையில், குழந்தைகள் பள்ளியில்
படிக்கின்றனரா என்பது குறித்து மட்டுமே பார்க்கின்றனர்.
கல்வி ஆர்வலர்கள் கூறியதாவது: வயிற்றுப் பிழைப்புக்காக, வெளி
மாவட்டங்களுக்கு செல்லும் பெற்றோர், குழந்தைகளை பராமரிக்க வழியின்றியே,
உடன் அழைத்து செல்கின்றனர். இவ்வாறு, பராமரிக்க இயலாத மலைவாழ்
குழந்தைகளுக்கு கல்வி அளிக்க, அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் உதவியுடன்,
உண்டு உறைவிடப்பள்ளிகள் செயல்படுகின்றன. இதே போல் பெற்றோரால் அடிப்படை
கல்வியை இழக்கும், குழந்தைகளுக்கும், கல்வித்துறை மாற்று வழி காண வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) விஜயலட்சுமி கூறுகையில், ''உண்டு உறைவிடப்
பள்ளிகள், ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படுகிறது. அதில்
அக்குழந்தைகளை சேர்ப்பது குறித்து, அத்துறையே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இடைநிற்றலை தவிர்க்க, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பிலும் சில மையங்கள்
உள்ளன. பெற்றோர் பணிக்கு செல்லும்போது, குழந்தைகளை உடன் அழைத்து செல்லாமல்,
அம்மையங்களில் சேர்க்க முன்வர வேண்டும்,'' என்றார்.
இடைநிற்றல் எவ்வளவு?
உடுமலை ஒன்றியத்தில், 2013-14ம் கல்வியாண்டில், அனைவருக்கும் கல்வி இயக்கம்
சார்பில் ஏப்ரலில் நடந்த பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுப்பில்,
எண்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். 2014-15
கல்வியாண்டில், 35 மாணவர்களும் நடப்பு கல்வியாண்டில், 64 மாணவர்களும்
கண்டறியப்பட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...