மதுரை மாவட்டத்தில் பள்ளிகள் மூலம் மாணவ, மாணவியருக்கு
செயல்படுத்தப்பட்டுள்ள மூவகைச் சான்று பெறும் திட்டத்தில் உள்ள
நடைமுறைச்சிக்கலால் சான்றுகள் பெறுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
பள்ளி மாணவர்கள் 6ஆம் வகுப்பு படிக்கும் போது சாதி, இருப்பிடம் மற்றும்
தந்தையின் வருவாய்ச் சான்றை வருவாய்த்துறையில் பெறுவது வழக்கம். தற்போது
ஆன்லைன் மூலம் சான்றுகள் பெறும் வசதி நடைமுறையில் உள்ளது.
எனவே அந்தந்த பள்ளிகளே மாணவ, மாணவியருக்கு மூவகைச் சான்று என
அழைக்கப்படும் சாதி, வருவாய், இருப்பிடச் சான்றுகளைப் பெற்றுத் தர வேண்டும்
என கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் அரசு, அரசு உதவி
பெறும் கல்வி நிலையங்களுடன், மெட்ரிக்குலேசன் என 400-க்கும் மேற்பட்ட
பள்ளிகள் உள்ளன. இதில் 1ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் அனைவருக்கும்
மூவகைச் சான்று பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
பள்ளிக் குழந்தைகளிடம் தந்தையின் சாதிச் சான்று, குடும்ப அட்டை,
வருவாய்ச் சான்று ஆகியவற்றின் நகல்களைப் பெற்று அதை ஸ்கேன் செய்து
சம்பந்தப்பட்ட வட்டாட்சியருக்கு ஆன்லைனில் பள்ளிகளே அனுப்ப வேண்டியுள்ளது.
வட்டாட்சியருக்கு அனுப்ப அந்தந்தப் பள்ளிகளுக்குரிய பயனாளர் குறியீடு,
ரகசிய குறியீடு ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும். ஆனால், குறியீடுகளை
பயன்படுத்துவதில் தாமதம் ஏற்படுவதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
மேலும், வரும் டிசம்பருக்குள் சான்றுகளைப் பெற வேண்டிய நிலையில், பல
பள்ளிகளில் ஸ்கேன் வசதியில்லை. இதனால் தனியார் கணினி மையத்தை நாடினால்,
அதற்கு தனி கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. தற்போது மூவகைச் சான்றுகளை
பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
நடைமுறைச் சிக்கலைத் தீர்க்க ஆதார் அட்டை சிறப்பு முகாமைப் போல மூவகைச்
சான்றுக்கு தனி பிரிவை உருவாக்கி கல்வி மாவட்டம் வாரியாக சான்றுகளை ஸ்கேன்
செய்து ஆன்லைன் மூலம் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து சான்றுகளைப் பெறலாம்
என்று ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...