''வங்க கடலில், மீண்டும் காற்று அழுத்த
தாழ்வு நிலை உருவாவதால், இந்த வார இறுதியில், சென்னை உள்ளிட்ட கடலோர
மாவட்டங்களில், கனமழை பெய்யும்,'' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மைய இயக்குனர் ரமணன் கூறியதாவது:வங்க கடலில்
உருவான காற்று அழுத்த தாழ்வு மண்டலத்தால், சென்னை உள்ளிட்ட வட
மாவட்டங்களில், கனமழை பெய்தது. கடலுார் அருகே, நவ., 8ல் கரையை கடந்த காற்று
அழுத்த தாழ்வு மண்டலம், வேலுார் அருகே நிலை கொண்டதால், வட மாவட்டங்களில்,
பரவலாக தொடர்ந்து மழை பெய்து வந்தது.
தற்போது இந்த தாழ்வு மண்டலம், கேரளாவை
நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால், தென் மாவட்டங்களில், இன்று மழை பெய்ய
வாய்ப்பு உள்ளது. இந்நிலையில், அந்தமான் அருகே மீண்டும், ஒரு காற்று அழுத்த
தாழ்வு நிலை உருவாகிறது.
இது, குறைந்த காற்று அழுத்த தாழ்வு
மண்டலமாக, அடுத்த இரு நாட்களில் வலுப்பெறலாம். அதனால், நவ., 15 முதல்,
சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்பு
உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
நேற்று காலையுடன் முடிந்த, 24 மணி
நேரத்தில், வேலுார் மாவட்டம், ஆம்பூரில் அதிகபட்சமாக, 8 செ.மீ., மழை
பெய்துள்ளது. சேலம் மாவட்டம், ஏற்காடு - 6; நீலகிரி மாவட்டம் ஊட்டி - 5;
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர், ஈரோடு மாவட்டம், கோபி, சிவகங்கை மாவட்டம்,
இளையான்குடி - 4 செ.மீ., மழை பெய்துள்ளது.
கூடுதல் மழை:தமிழகத்தில், வடகிழக்கு பருவ
மழை துவங்கிய பின், நவ., 1 முதல், 11 நாட்களில், சராசரியை விட கூடுதல் மழை
பெய்துள்ளது.'அக்டோபரில் துவங்கி டிசம்பரில் முடிவடையும், வட கிழக்கு பருவ
மழை காலத்தில், எதிர்பார்த்ததை விட கூடுதலாக பெய்ய வாய்ப்பு உள்ளது' என,
வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே கணித்து இருந்தது.
ஒரு வாரம் தாமதமாக, அக்டோபர், 27ல் பருவ மழை
துவங்கியது. ஆனாலும், நவ., 1 முதல், நேற்று வரை, தமிழகத்தில் பெய்த மழை
குறித்து, வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
வடகிழக்கு பருவ மழை காலத்தில், நவ.,1 முதல்,
11 வரை, சராசரியாக, 26 செ.மீ., மழை பெய்ய வேண்டும். ஆனால், 30 செ.மீ., மழை
பெய்துள்ளது. நெல்லையில் அதிகபட்சமாக, சராசரி மழை அளவை விட, 71 சதவீத
அளவுக்கு கூடுதலாக, மழை பதிவாகி உள்ளது.
எனினும், 11 மாவட்டங்களில், சராசரிக்கும்
குறைவாக மழை பெய்துள்ளது. இதில், விருதுநகர், மதுரை, தேனி, சிவகங்கை
மாவட்டங்களில் சராசரியை விட, 30 சதவீத அளவுக்கு, மழை குறைவாக பதிவாகி
உள்ளது. புதுச்சேரியில், 11 நாட்களில், 46 செ.மீ., மழை பெய்ய வேண்டும்.
ஆனால், 37 செ.மீ., மழை தான் பெய்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...