இ-சேவை மையங்கள் மூலமாக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளுக்கு
விண்ணப்பிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு
வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழக முதல்வர்
ஜெயலலிதாவின் உத்தரவுப்படி தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தமிழகம்
முழுவதும் இ-சேவை மையங்களை அமைத்து நிர்வகித்து வருகிறது. தலைமைச்
செயலகத்தில் ஒரு இ-சேவை மையமும், தமிழகத்தில் உள்ள மொத்தம் 264
வட்டாட்சியர் அலுவலகங்களிலும் தலா ஒரு இ-சேவை மையமும், சென்னை மாநகராட்சி
தலைமை அலுவலகத்தில் ஒரு இ-சேவை மையமும், சென்னை மாநகராட்சியின் 15 மண்டல
அலுவலகங்கள் மற்றும் 54 கோட்ட அலுவலகங்களில் தலா ஒரு இ-சேவை மையமும்,
சென்னை, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய மண்டல
பாஸ்போர்ட் அலுவலகங்களில் தலா ஒரு இ-சேவை மையமும் என மொத்தம் 339இடங்களில்
இ-சேவை மையங்களை தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் அமைத்துள்ளது.
இ-சேவை மையங்கள் மூலமாக தமிழக அரசின் வருவாய்த் துறை மற்றும் சமூக நலத்துறை சார்ந்த 15,55,710 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு சம்மந்தப்பட்ட துறைகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 7,80,784 நபர்களுக்கு பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது.28,658 நபர்களுக்கு கைபேசி எண்/இ-மெயில் முகவரி மாற்றம் செய்து தரப்பட்டுள்ளது. 2,818 நபர்கள் பாஸ்போர்ட் பெறுவதற்கு விண்ணப்பம் செய்துள்ளனர்.தற்போது 264 வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம், சென்னை மாநகராட்சியின் 15 மண்டல அலுவலகங்கள் என 280 இடங்களில் உள்ள இம்மையங்கள் வாயிலாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் வழங்கப்படும் இணையவழி விண்ணப்ப சேவைகளான நிரந்தரப்பதிவு செய்தல், தேர்வுகளுக்கு விண்ணப்பித்தல், விண்ணப்பங்களில் மாறுதல் செய்தல் மற்றும் விண்ணப்பத்தின் நகல் பெறுதல் ஆகிய சேவைகளை தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் துவக்கி உள்ளது.நிரந்தரப் பதிவு செய்ய ரூ.50/-ம், தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ரூ. 30/-ம், விண்ணப்பங்களில் மாறுதல் செய்ய ரூ. 5/-ம், விண்ணப்பங்களில் மாறுதல் செய்து விண்ணப்பத்தின் நகல் பெற ரூ. 20/-ம், சேவைக் கட்டணமாக வசூலிக்கப்படும்.
மேலும், விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்திற்கு செலுத்த வேண்டிய நிரந்தரப் பதிவுக் கட்டணமான ரூ.50/-யும் மற்றும் நிர்ணயம் செய்யப்பட்ட தேர்வுக் கட்டணம் ஆகியவற்றை இம்மையங்களில் செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கட்டணம் செலுத்தியதற்கான ஒப்புகைச் சீட்டினை உடனடியாக பெற்றுக்கொள்ளலாம். எனவே, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளுக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் அரசு இ-சேவை மையங்களை அணுகி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...