Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆன்லைன் ஷாப்பிங்கா? கொஞ்சம் அவசர படாதீங்க?

           இணையத்தில் அட்வான்ஸ் புக்கிங் செய்தால், மொபைல் போனுக்கு சினிமா டிக்கெட் எஸ்.எம்.எஸ் ஆக வந்துவிடுகிறது மேலும் இணையத் தளத்திலேயே மட்டன் பிரியாணி முதல் மள்ளிகை பொருட்கள் வரை ஆர்டர் செய்ய முடிகிறது.

           உட்கார்ந்த இடத்திலிருந்தே குண்டூசி தொடங்கி குதுப்பினார் வரை மவுஸை நகர்த்தியே வாங்கிவிடலாம். தகவல் தொழில்நுட்பத்துறை வளர்ச்சி தரும் சொகுசு இது. சுட்டெரிக்கும் கோடையில் கடை கடையாக ஏறி இறங்க வேண்டாம். மால்களில் பார்க்கிங்குக்கு பாதி சொத்தை எழுதித்தர  வேண்டாம். முன்பு போல அலைந்து திரிந்து, நான்கைந்து கடை ஏறி ஷாப்பிங் செய்ய வேண்டியதில்லை. நமக்கு எந்த பொருள் வேண்டுமோ, அதை கடையில் வாங்குவதைவிட மிகக்குறைவான விலையில் இணையத்தில் வாங்க முடிகிறது.
 

நம்பவே முடியாத தள்ளுபடிகளை ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்டுகள் அள்ளித் தருகின்றன. கடை வாடகை, வேலை ஆட்களுக்கு சம்பளம், மற்ற மாதிரி செலவுகள் இல்லாததால் சில்லரை விலையை விட மிகவும் மலிவு விலைக்கு ஆன்லைனில் அவர்களால் தர முடிகிறது. பண்டிகைக்காலம் தவிர்த்து, ஆன்லைன் விற்பனை அதிகரிப்பது கோடைக்காலத்தில்தான் என்கிறது ஒரு புள்ளி விவரம். குறிப்பாக டிவி டிவிடி ப்ளேயர், ஏசி மாதிரியான எலெக்ட்ரானிக் சமாச்சாரங்களை இந்தியர்கள் வாங்கிக் குவிக்கிறார்கள். மொபைல் போன் விற்பனையும் அமேஸான் போன்ற தளங்களில் சக்கைப்போடு போடுகிறது.  
எந்தப் பொருளையும் தொட்டுப் பார்த்து வாங்க முடியவில்லை போன்ற சில குறைபாடுகள் இருந்தாலும் .ஆன்லைன் ஷாப்பிங் என்பது நடுத்தர மக்களுக்கு  புதியதாக கிடைத்திருக்கும் வரம். ஆனால், பிராண்டட் பொருட்களை அலைச்சல் இன்றி  ஈஸியாக தேடி எடுக்க முடிகிறது போன்ற சாதகங்கள் எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்.உங்களை யாரோ எங்கிருந்தோ நேரில்  கூட பார்க்காமல் ஏமாற்றக்கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டியது அவசியம், நீங்கள் பொருள் வாங்கும் இணையதளம் எவ்வளவு தூரம் நம்பகமானது, பணம் செலுத்தி எத்தனை நாட்களில் பொருளை  அனுப்புகிறார்கள் போன்றவற்றை எல்லாம் அறியாமல் மவுஸ் பட்டனை அமுக்கக்கூடாது. ஒருவேளை உங்களுக்கு பார்சலாக  வந்த பொருள் பழுதடைந்திருந்தால், அதை அவர்கள் திரும்பப் பெற்றுக் கொள்ளும் உத்தரவாதம் இருக்கிறதா என்பதையெல்லாம் முன்பே தெரிந்துவைத்துக் கொள்ள வேண்டும். ஆன்லைன் ஷாப்பிங்கை பொறுத்தவரை, மேலும் நீங்கள் கவனத்தில்  கொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் இருக்கின்றன.
விதிமுறைகள் கவனம் : 
ஷாப்பிங் வெப்சைட்டுகள் தங்கள் விதி முறைகளை ஒரு லிங்கில் ஓரமாக வைத்திருப்பார்கள். இதையெல்லாம் படிப்பானேன்  என்று சோம்பல் படாமல், வேகமாக ஸ்க்ரோல் செய்து ஒருமுறை வாசித்து விடுங்கள். நுகர்வோருக்கு ஆப்பு அடிக்கக்கூடிய விதி  ஏதேனும் இருக்கலாம். ஒருமுறை விற்ற பொருளை திரும்பப் பெற முடியாது மாதிரி வார்த்தைகள் ஏதேனும் தென்பட்டால்,  அந்த வெப்சைட்டுக்கு ஒரு பெரிய கும்பிடு போட்டுவிட்டு குளோஸ் செய்யுங்கள். 
நம்பகமான கடைதானா? 
உங்களுக்கு நன்கு தெரிந்த நிறுவனத்தின் ஆன்லைன் ஸ்டோரில் பொருட்கள் வாங்குவது பாதுகாப்பானது. உதாரணத்துக்கு,  உங்கள் நகரின் பெரிய மொபைல் போன் கடையில் வெப்சைட்டில் ஒரு போன் வாங்கி, அது பழுதானால் நேரில் போய் சரிசெய்து   கொள்ள முடியும். ஊர் பேர் தெரியாத ஏதோ வெப்சைட்டில் பொருள் வாங்கிவிட்டு, ஆஃப்டர் சேல்ஸ் சர்வீசுக்கு அல்லாடிக்  கொண்டிருக்க வேண்டாம்.உங்கள் நண்பர்களும், உறவினர்களும் அடிக்கடி பொருட்கள் வாங்கி திருப்தியை வெளிப்படுத்திய  வெப்சைட்டுகளை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். 
உங்களுக்கு ஓர் ஆன்லைன் ஸ்டோரை பற்றி தெரியவில்லை, ஆனால், அவர்கள் நல்ல விலையில் நீங்கள் விரும்பக்கூடிய பொருளை கொடுக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த ஸ்டோரை பற்றி மற்றவர்கள் என்ன கருதுகிறார்கள் என்று  லேசாக ‘கூகிள்’ செய்து பார்த்தாலே போதும். 
தள்ளுபடி : 
ஆன்லைன் சைட்டுகள் அறிவிக்கும் தள்ளுபடிகளை பெற, ‘டிஸ்கவுன்ட் கூப்பன்’ பயன்படுத்த வேண்டும். நீங்கள்  ஒவ்வொருமுறை ஷாப்பிங் செய்யும்போதும் தள்ளுபடி இருக்கிறதா, இருந்தால் அதற்கு கூப்பன் எங்கே கிடைக்கும் என்று  தெரிந்துகொண்டு காசை கொடுங்கள். 
கூடுதல் தகவல்கள் வேண்டாமே : 
முகவரி, தொலைபேசி எண், கிரெடிட் / டெபிட் கார்டு எண். இவற்றைத் தவிர்த்து கூடுதல் தகவலை ஏதேனும் வெப்சைட்  கோரினால் அது சந்தேகத்துக்குரியது. கூடுதலாக உங்கள் பேங்க் அக்கவுன்ட் எண்ணையோ, லைசென்ஸ் எண்ணையோ கேட்டால்  ஏதோ தில்லுமுல்லு நடக்கப் போகிறது என்று அர்த்தம். சில இணைய தளங்கள் உங்கள் பொதுவான ஆர்வங்களை  தெரிந்துகொள்ள விரும்பும். விருப்பமில்லாவிட்டால் கொடுக்கத் தேவையில்லை. கொடுத்தே ஆக வேண்டும் என்று  கட்டாயப்படுத்தினால் ‘போய்யா’ என்று சொல்லிவிட்டு விண்டோவை க்ளோஸ் செய்யுங்கள். உங்கள் தகவல்களை ரகசியமாக  வைத்திருக்க நினைக்கும் நிறுவனங்கள் மட்டுமே நம்பிக்கைக்கு உரியவை. அவசியமற்ற எந்த தகவலையும் இணையத்தில்  யாருக்கும் தரவேண்டாம். 
பாதுகாப்பான ஷாப்பிங்தானா? 
கிரெடிட் கார்ட் எண் போன்றவற்றை டைப் செய்யும்போது அட்ரஸ் பாரை உற்று நோக்கவும். ‘https’ என்று ஆரம்பிக்காமல்  ‘http’ என்று மட்டும் இருந்தால் அது டுபாக்கூர். இங்கே ‘s’ for security என்று பொருள். https என்கிற  பாதுகாப்பினை வழங்காத  வெப்சைட்டுகளை சீண்டவேண்டாம்.
கிரெடிட் கார்ட் பயன்படுத்துங்கள் :
ஆன்லைன் ஷாப்பிங்கை பொறுத்தவரை டெபிட் கார்டை தவிர்ப்பது நல்லது. முடிந்தவரை கிரெடிட் கார்டை பயன்படுத்துங்கள்.  ஆன்லைன் ஷாப்பிங்குக்கு மட்டுமென்றே தனியாக ஒரு கிரெடிட் கார்டை பயன்படுத்த முடிந்தால் உத்தமம். இல்லையேல்  paypal போன்ற சேவைகளை உபயோகியுங்கள். 
சந்தேகியுங்கள் 
அநியாயத்துக்கு விலை மலிவு என்று விளம்பரப்படுத்தப்படும் பொருளை அவசரப்பட்டு வாங்கி விடாதீர்கள். உதாரணத்துக்கு  ஐபோன் ஐநூறு ரூபாய் என்று கூவி கூவி அழைத்தால் அவசரப்பட்டு போய் ‘க்ளிக்’ செய்யாதீர்கள். அது உங்களுக்கு  வைக்கப்படும்  கண்ணியாக இருக்கலாம். நீங்கள் பணமெல்லாம் செலுத்திய பிறகு, அவன் பாட்டுக்கு ‘அவுட் ஆஃப்  ஸ்டாக்’ என்று மெயில் அனுப்புவான். நம்முடைய பணத்தை திரும்பப் பெறுவதற்குள் தாவூ தீர்ந்துவிடும். அல்லது  தேசப்பிதாவின் கணக்கில் எழுதிக்கொள்ள வேண்டியதுதான். 
கடைசியாக, வெளியிடங்களில்  குறிப்பாக பிரவுஸிங் சென்டர்களில் ஆன்லைன் ஷாப்பிங்கை தவிர்க்கவும். வீட்டிலோ,  அலுவலகத்திலோ இருக்கும் உங்கள் கம்ப்யூட்டர் மூலமாக செய்வதே நல்லது. நீங்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டரில் வைரஸ்,  மால்வேர் மாதிரி பிரச்னைகள் இல்லாமல் அவை நல்ல ஆன்ட்டி வைரஸ் சாஃப்ட்வேர் மூலம் பாதுகாக்கப்பட்டிருப்பது அவசியம்.

A. Chandru




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive