திருக்குறளை கொரிய மொழியில் வெளியிடும் பணியை பொங்கலுக்குள் முடிக்கவேண்டும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் 29-ந்தேதி முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை தாக்கல் செய்து பேசும்போது, “தமிழ் மொழிக்கும், கொரிய மொழிக்கும் இடையே உள்ள தொடர்பின் அடிப்படையிலும், திருக்குறளை கொரிய மொழியில் மொழி பெயர்க்கவேண்டும் என்ற கொரிய மக்களின் நீண்ட நாள் கோரிக்கையின் அடிப்படையிலும், கொரியாவில் தமிழர்களும், தமிழகத்தில் கொரியர்களும் வாழ்ந்து வருவதை கருதியும் பார்போற்றும் உலக பொதுமறையாம் திருக்குறளை கொரிய மொழியில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்.
இதற்கென ரூ.36 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் ஓரடியில் உலக மக்களுக்கேற்ற எளிய அறநெறிக் கருத்துக்களை கொண்ட தமிழ் மொழியின் அறநெறிக் கருவூலமான ஆத்திச்சூடியை சீனம் மற்றும் அரபு மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியிருந்தார்.
தமிழ் வளர்ச்சித்துறை
இந்த அறிவிப்பை வெளியிட்ட அடுத்த நாள் முதலே தமிழ் வளர்ச்சித்துறை செயலாளர் மு.ராசாராம் தலைமையில் அதிகாரிகள் வேகமாக பணியை தொடங்கிவிட்டனர். திருக்குறள் சீனம், அரபு மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் வெளியிடப்பட்டுவிட்டது. 2 மொழிகளிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொழி பெயர்ப்பு நூல்கள் அச்சிடப்பட்டு சீனாவுக்கும், அரபு நாடுகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுவிட்டன.
இதுமட்டும் அல்லாமல், அந்த நாடுகளில் உள்ள நூலகங்களில், இந்த நூல்களை வைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. தற்போது பாரதிதாசன் கவிதை நூல்கள் அரபு, சீன மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு, சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இது போல திருக்குறளை கொரிய மொழியில் மொழி பெயர்க்கவும், ஆத்திச்சூடியை அரபு, சீன மொழிகளில் மொழி பெயர்க்கவும் பணிகள் தொடங்கிவிட்டன.
பொங்கலுக்குள்...
தமிழ் வளர்ச்சித்துறை செயலாளர் மு.ராசாராம் தலைமையிலும், சென்னையில் வாழும் கொரிய நாட்டை சேர்ந்த தமிழ் வல்லுனர் யாங், பெண் வல்லுனர் அருணா சுபா உள்பட 6 பேர்கள் கொண்ட குழு இந்த பணியை செய்து வருகிறது. இவர்கள் அனைவரும் ஆங்கிலம், கொரியா மற்றும் தமிழ் ஆகிய மும்மொழிகளையும் நன்கு கற்றறிந்தவர்கள். ஆத்திச்சூடியை அரபு மொழியில், மொழிபெயர்க்கும் பணியை உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
இதுபோல ஆத்திச்சூடியை சீன மொழியில் மொழி பெயர்க்க டாக்டர் யூகி தலைமையில் தைவான் நாட்டை சேர்ந்த நிபுணர் குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. பொங்கலுக்குள் மொழி பெயர்ப்பு பணிகளை முடிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
திருவள்ளுவர் தினத்துக்குள் முடிக்க பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் கொரிய நாட்டு தூதரகம், தமிழ்நாட்டில் வாழும் கொரியர்களுக்கு தமிழை கற்பது எப்படி என்று ஒரு நூலை வெளியிட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...