அரக்கோணம் நகரில் மின்சார மீட்டர்கள் விநியோகம் கடந்த இரு மாதங்களாக
நிறுத்தப்பட்டதால், புதிய இணைப்பு கோரி மனு செய்தோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரக்கோணம் நகரம் சென்னையின் புறநகராக மாறி வருகிறது. நகரைச் சுற்றி பல
பகுதிகளில் தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டும் பணி நடைபெற்று
வருகிறது. இந்தப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. வீட்டு
உரிமையாளர்கள் மின் இணைப்புக்கு விண்ணப்பித்து அதிகாரிகளிடம் உத்தரவு பெற்ற
நிலையில் மின் பயன்பாட்டு கணக்கீட்டு மீட்டர்கள் இல்லாததால் இணைப்புகள்
அளிக்கமுடியவில்லை.
கடந்த 03.09.2015 முதல் அரக்கோணம் கோட்டத்தில் மின்சார மீட்டர்கள்
விநியோகம் நிறுத்தப்பட்டு விட்டதாக மின்வாரியத்தினர் தெரிவித்தனர். எப்போது
மீட்டர் விநியோகம் செய்யப்படும் எனக்
கேட்டால் தங்களுக்குத் தெரியாது, வந்தால் தருவோம் என மின்வாரிய அலுவலகத்தில் பதில் தெரிவிக்கின்றனர்.
மின் இணைப்புக்கு, மீட்டருக்கான தொகைகளைக் கட்டி இரு மாதங்களான நிலையிலும்
மீட்டர் விநியோகம் தொடக்கப்படவில்லை. ஆனால் வணிக மும்முனை இணைப்புகளுக்கான
மீட்டர் விநியோகம் மட்டும் நடைபெறுகிறது. வீடுகளுக்கு தர வேண்டிய ஒருமுனை
இணைப்புக்கான மீட்டர் நிறுத்தப்பட்டதால் அவசரத்துக்கு வீடுகளுக்கு இணைப்பு
தேவைப்படுவோர் தேவையே இல்லாமல் மும்முனை இணைப்பை அதிக வைப்புத் தொகை
செலுத்தி பெற்றுக் கொள்கின்றனர். இதனால் மின்நுகர்வோருக்கு வீண்
செலவாகிறது.
இது குறித்து மின்வாரியத் தலைமைப் பொறியாளர் பெருமாள்சாமியிடம் கேட்டதற்கு கூறியதாவது:
தலைமையகத்தில் இருந்தே மீட்டர் விநியோகம் நடைபெறவில்லை. தற்போது மாநில
அளவில் மீட்டருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் நுகர்வோருக்கு
மீட்டர்கள் விநியோகம் செய்ய முடியவில்லை என்பது உண்மை தான். அவசரத்துக்கு
தேவைப்படுவோர், மீட்டருக்கான தொகையை வாரியத்தில் செலுத்தியிருக்கும்
பட்சத்தில், வெளியே கடைகளில் மீட்டரை வாங்கி அதற்குண்டான ரசீதை மின்வாரிய
அலுவலகத்தில் அளித்தால் அந்தத் தொகை மின்கட்டணத்தில் கழித்துக்
கொள்ளப்படும். விரைவில் இப் பிரச்னை தீர்ந்து தலைமையகத்தில் இருந்து
மீட்டர் விநியோகம் தொடங்கும் என நம்புகிறோம் என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...