தமிழகத்தில் செயல்படும், பல பி.எட்., கல்லுாரிகளில் முதல்வர்களே இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை கட்டுப்பாட்டில், அரசு மற்றும் அரசு உதவி பெறும், 21 பி.எட்., கல்லுாரிகளும், 600 சுயநிதி கல்லுாரிகளும் செயல்படுகின்றன.
இந்தக் கல்லுாரிகள், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஆசிரியர்கள் மற்றும் கல்லுாரி முதல்வர் நியமனங்களுக்கு அங்கீகாரம் பெற வேண்டும். மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் உள்ளனரா என, ஆய்வு செய்த பின், இந்த அங்கீகாரம் வழங்கப்படும்.
ஏற்கனவே அங்கீகாரம் வழங்கி, மூன்று ஆண்டுகளாகி விட்டதால், இந்த கல்வி ஆண்டில் புதிதாக அங்கீகாரம் தர வேண்டும். கல்லுாரிகள் இதற்கான ஆவணங்கள் மற்றும் விவரங்களை நவ., 6க்குள் தாக்கல் செய்ய, ஆசிரியர் கல்வியியல் பல்கலை உத்தரவிட்டுள்ளது. மேலும், கல்லுாரி முதல்வர் குறித்த விவரங்களை அனுப்பவும் அறிவுறுத்தியுள்ளது.
ஆனால், பல கல்லுாரிகளில் முதல்வர் இல்லாமல், பிறமாவட்டங்கள் அல்லது மாநிலங்கள் அல்லது வேறு இடங்களில் பணிபுரியும் பிஎச்.டி., முடித்தவர்களை, முதல்வர் போல கணக்கு காட்டியுள்ளதாக, ஆசிரியர் பல்கலைக்கு தெரிய வந்துள்ளது. பல்கலை பதிவாளர் கலைச்செல்வன் நடத்திய ஆய்விலும், இது உறுதியாகி உள்ளது.
எனவே, அனைத்து கல்லுாரிகளும் தங்கள் முதல்வர்களை, ஒரே நேரத்தில் நேரில் ஆஜர்படுத்த, ஆசிரியர் கல்வியியல் பல்கலை அதிகாரிகள் வாய்மொழியாக அறிவுறுத்தியுள்ளனர். இந்த நெருக்கடியை சமாளிக்க, உயர்கல்விதுறை அதிகாரிகளைப் பிடித்து, அங்கீகாரம் பெற சம்பந்தப்பட்ட கல்லுாரிகள் முடிவு செய்துள்ளன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...