Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பதவி உயர்வுக்கு ஆபத்து - என்ன சொல்கிறது 7-வது ஊதியக் குழு?

    ஏழாவது ஊதியக் குழு தன் அறிக்கையை 19.11.2015-ல் மத்திய நிதியமைச்சரிடம் வழங்கி, பத்திரிகையாளர் சந்திப்பையும் நடத்தியது. அன்று முதல், ஊடகங்களும் சமூக வலைதளங்களும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிக அளவில் ஊதிய உயர்வு வழங்கப்படுவதைப் போல ஒரு தோற்றத்தை உருவாக்குகின்றன. ஆனால், உண்மை நிலை என்ன?

      நாடு முழுவதும் கூட்டு நடவடிக்கைக் குழுவில் அங்கம் வகிக்கும் அனைத்து மத்திய அரசு ஊழியர்களின் அமைப்புகள் 50% அகவிலைப்படி உயர்ந்தவுடன், அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும், 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய விகிதத்தை அரசுத் துறையில் இருப்பதுபோலவும் தனியார் துறையில் இருப்பதுபோலவும் மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். அதற்காக 2012-ல் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தமும் செய்தார்கள்.

ஐ.மு. அரசின் அலட்சியம்

அன்றைக்கு ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, 10 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் ஊதிய விகிதத்தை மாற்ற முடியும் என்று கூறினாலும் ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று செப்டம்பர் 13-ல் ஊதியக் குழு அமைக்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் அறிவிப்பு செய்ததோடு விட்டுவிட்டது. மீண்டும் அனைத்து ஊழியர்களும் போராடியதன் விளைவாக பிப்ரவரி 2014-ல், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.கே. மாத்தூர் தலைமையில், ஏழாவது ஊதியக் குழு அமைக்கப்பட்டு 18 மாதத்துக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த ஊதியக் குழு வரம்பு, மத்திய அரசில் வேலை செய்கிற ஊழியர்கள், பாதுகாப்புத் துறை ஊழியர்கள், முப்படை வீரர்கள் அனைவரையும் உள்ளடக்கியது. ஏழாவது ஊதியக் குழுவின் கணக்குப்படியே ஏறக்குறைய 1 கோடி ஊழியர் மற்றும் ஓய்வூதியர்களுக்குப் பலன் கிடைக்கும். அரசாங்கமே மொத்தம் ரூ.1,02,000 கோடி செலவாகும் என்று தெரிவித்துள்ளது. குறைந்தபட்சம் 15%லிருந்து 23.55% வரை ஊதியம் உயரலாம் என்று ஊதியக் குழு அறிவித்துள்ளது.

7-வது ஊதியக் குழு பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுவிட்டால், மாநில அரசு ஊழியர்களுக்கும் அமல்படுத்தப்படலாம். சிலர், இந்த ஊதிய உயர்வு மத்திய, மாநில அரசுகளுக்கு ஒரு பொருளாதார சுனாமியாக மாறும் என்று எச்சரிக்கிறார்கள்.

இரண்டாவது ஊதியக் குழு பரிந்துரையால் ஊதியம் 14.2% உயர்ந்தது. 3-வது ஊதியக் குழுவால் 20.6%-ம், 4-வது ஊதியக் குழுவால் 27.6%-ம், 5-வது ஊதியக் குழுவால் 31.0%-ம் 6-வது ஊதியக் குழுவால் 54%-ம் உயர்ந்தது. 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரை 14.3%. 1957-ல் 2-வது ஊதியக் குழு அளித்த 14.2% உயர்வை 7-வது ஊதியக் குழுவும் பரிந்துரைத்துள்ளது. அதாவது, 4-வது, 5-வது, 6-வது ஊதியக் குழுக்கள் அளித்த உயர்வு இப்போது பறிக்கப்பட்டிருக்கிறது.

பாதிப்பை ஏற்படுத்தாது

முதலாவது ஊதியக் குழு தொடங்கி 5-வது ஊதியக் குழு வரை இந்தியாவின் தொழிலோ, பொருளாதாரமோ, இப்போது பேசப்படுவதுபோல் உயர்ந்திருக்கவில்லை. பொருளாதாரத்தைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்றால், அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற சித்தாந்தம் பரவலாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால், ஊதியக் குழுத் தலைவர் நீதிபதி. ஏ.கே. மாத்தூரே இது பொருளாதாரத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தாது என்பதைப் புள்ளிவிவரங்களுடன் விளக்கியிருக்கிறார்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6-வது ஊதியக் குழு நிதிச்சுமை பங்கு 0.77% தான். 7-வது ஊதியக் குழு பரிந்துரை அமலாகும்போது அது 0.56% ஆகக் குறையும் என்பதை அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது. இந்த உயர்வுகூட 10 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான். பல்வேறு அரசுத் துறை, தனியார் துறைகளில் 4 அல்லது 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. எனவே, ஊதிய உயர்வு அதிகம் என்று சொல்வது நியாயமற்றது.

அத்துடன் ஊதியக் குழு தன் பரிந்துரையில் ஊழியர் நல விரோத நடவடிக்கை சிலவற்றைப் பரிந்துரைத்துள்ளது. 1957-ல் பிரதமர் நேரு தலைமையில் நடந்த 15-வது தொழிலாளர் மாநாட்டில் ஏற்றுக்கொண்ட கோரிக்கையின்படியே குறைந்தபட்ச ஊதியத்தைக் கணக்கிடுவதாகக் கூறும் ஊதியக் குழு, மாத ஊதியம் ரூ. 26,000 என்பதற்குப் பதிலாக ரூ.18,000-ஐ மாத ஊதியமாகப் பரிந்துரை செய்துள்ளது. 2015 ஜனவரியோடு ஒப்பிட்டுப் பார்த்தாலே, உணவுக்கும் மற்ற அடிப்படைத் தேவைகளுக்குமான அடிப்படைச் செலவு ரூ.11,341 ஆக இருக்கின்றபோது, வெறும் 9,218 ரூபாயை அடிப்படைச் செலவுக்காகக் காட்டப்பட்டிருக்கிறது. 

ஊழியருக்கு 524 ரூபாய் (3%) வாடகைப்படி போதுமென்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த அடிப்படை ஊதியத்தை வரையறை செய்வதில் ஏற்பட்ட கோளாறுதான் கடைநிலை ஊழியர்கள் ஊதிய உயர்வு பெறுவதற்குப் பதிலாக இழப்புக்கு வழி செய்திருக்கிறது. உதாரணமாக, 1.1.2016-ல் ரூ.18,000 அடிப்படை ஊதியம் பெறும் ஊழியர் பெறும் ஊதிய உயர்வு (வீட்டு வாடகைப்படி இல்லாமல்) ரூ.2,250 மட்டுமே. ஆனால், புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு அதிகமாகப் பிடித்தம் செய்வது ரூ.110 மற்றும் குடும்பக் காப்பீட்டுக்குப் பிடிக்கும் பணம் ரூ.1,500. ஊதிய உயர்வு ரூ. 2,250, அவர் ஊதியத்திலிருந்து பிடிக்கப்படுவது ரூ. 2,600. எனவே, உண்மையில் அவர் ரூ.350 இழக்கிறார். அரசுக் குடியிருப்பில் வசித்தால் ஆயிரக்கணக்கில் இழப்பு ஏற்படும். பெருவாரியான கடைநிலை ஊழியர்கள் ரயில்வே, பாதுகாப்பு மற்றும் தபால் துறையைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்குத்தான் ஊதியக் குழு பெரும் அநீதி இழைத்திருக்கிறது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் பெற்றுக்கொண்டிருக்கும் பல்வேறு சலுகைகளையும், உரிமைகளையும் பறிப்பதற்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

பதவி உயர்வுக்கு ஆபத்து

உயர் நிலை அதிகாரிகளுக்கு இருப்பதுபோல் 5 பதவி உயர்வுகளைக் கேட்டிருந்தோம். 10, 20, 30 வருடங்களில் 3 பதவி உயர்வு கொடுப்பதற்குக்கூட ‘நல்ல உழைப்பு’ இருந்தால் மட்டும் போதாதாம். ‘மிகச் சிறந்த உழைப்பு’ தேவை என்று கூறியுள்ளது. இதை யார் முடிவெடுப்பது? பெண் ஊழியர்கள் எண்ணிக்கை 10% மட்டுமே. அவர்களுக்குக் குழந்தை பராமரிப்பு விடுப்பாக 6-வது ஊதியக் குழு 2 வருடம் கொடுத்தது. அதை இந்தக் குழு முதல் ஆண்டுக்கு முழுச் சம்பளம், 2-வது ஆண்டுக்கு 80% சம்பளம் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. குடும்பக் கட்டுப்பாடு, மிகுதி நேர வேலைப்படி, சலவைப்படி உள்ளிட்ட 62 படிகள் எடுக்கப்பட பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. சாதாரண ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பண்டிகைக்காலக் கடன் உட்பட அனைத்து வட்டியில்லாத கடன்களும் நிறுத்தப்படவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஊதிய விகிதத்துக்கும் அதிகபட்ச ஊதிய விகிதத்துக்கும் இடையிலான வேறுபாடு இந்தப் பரிந்துரைக்குப் பிறகு மேலும் அதிகரிக்கப்போகிறது. பதவி நிலைக்கு ஏற்ற ஊதிய விகிதங்களின் எண்ணிக்கையும் குறைவதற்குப் பதில் அதிகமாகப்போகிறது.

நன்மையும் உண்டு

இந்த ஊதியக் குழு ஒரு சில நல்ல பரிந்துரைகளையும் செய்துள்ளது. ஓய்வூதியர்களுக்கு அவர்கள் பணியில் இருந்து 1.1.2016-ல் ஓய்வுபெற்றால் என்ன ஓய்வூதியம் கிடைக்குமோ அந்த ஓய்வூதியம் கிடைப்பதற்குப் பரிந்துரை செய்துள்ளது. கருணைக்கொடை அதிகபட்ச உச்சவரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் பலன் உயர் அதிகாரிகளுக்கே செல்லும் என்றாலும், வரவேற்கப்பட வேண்டியதே. ஊழியர்களுக்கு மத்தியில் பிரிவை ஏற்படுத்திய ‘கிரேடு பே’, ‘பே பேண்ட்’ என்ற பிரிவினைகளை ஒழித்தது பாராட்ட வேண்டிய அம்சம். குழந்தைப் பராமரிப்பு விடுப்பு ஒற்றைப் பெற்றோரான (சிங்கிள் பேரண்ட்) ஊழியர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. ஊதியத்தை மாற்றுவதற்குக் குறிப்பிட்ட காலம்வரை காத்திருக்காமல் தேவைக்கேற்றபோது மாற்ற வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

5-வது ஊதியக் குழு தந்த படிப்பினையை அரசும் மறக்காது; ஊழியர்களும் மறக்க மாட்டார்கள். எனவே, மத்திய அரசு நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு பிரச்சினைகளைத் தீர்க்கும் என்று மத்திய அரசு ஊழியர்கள் காத்திருக்கிறார்கள்.

- எம். துரைபாண்டியன், பொதுச் செயலாளர்,

மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம்,




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive