சென்னை உள்பட 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 22-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பலத்த மழை காரணமாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. மழை நின்ற பிறகும் பல இடங்களில் வெள்ள நீர் வடியாததால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் வரும் 22-ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறையை அறிவித்துள்ளனர்.
மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு ஏற்கெனவே 6 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது மேலும் 2 வேலை நாள்களும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு சனிக்கிழமைகளையும் சேர்த்தால் 10 நாள்கள் இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறை காரணமாக, பத்தாம் வகுப்பு, பிளஸ்-2 போன்ற பொதுத்தேர்வு மாணவர்கள் உள்பட பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக கல்வித் துறை அதிகாரிகள் கூறியது:-
வடகிழக்குப் பருவமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் மட்டும் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. இந்த மாவட்டங்களில் மட்டுமே பள்ளிகள் செயல்படவில்லை. பிற மாவட்டங்களில் பள்ளிகள் வழக்கம்போல் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், மழை நின்ற பிறகும் பள்ளி, கல்லூரி வளாகங்கள் ஈரப்பதத்துடன் இருப்பதாலும், வெள்ள நீர் பல பகுதிகளில் முழுமையாக வடியாததாலும் மாணவர்களின் பாதுகாப்பு கருதி பள்ளி, கல்லூரிகளுக்கான விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டபிறகுதான், இழந்த வேலை நாள்களை எவ்வாறு ஈடு செய்வது என்பது குறித்து பரிசீலிக்கப்படும். இப்போது மாணவர்களின் பாதுகாப்பு கருதியே இந்த விடுமுறை அறிவிப்பை மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ளனர்.
பெரும்பாலும் மழை உள்ளிட்ட காரணங்களால் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டால் அதற்குப் பதிலாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் திறக்கப்படும். இப்போதும் அதுபோல் சனிக்கிழமைகளில் பள்ளி திறக்கப்படுமா அல்லது அரையாண்டுத் தேர்வு விடுமுறை குறைக்கப்படுமா என்பது குறித்த முடிவு பள்ளிகள் திறந்தபிறகுதான் தெரியவரும் என்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...