நாம் வாங்கும் சொத்துகளிலேயே ரியல் எஸ்டேட் முதலீடுகள்தான், சாதகமான
சமயங்களில் எதிர்பாராத பலன்களைக் கொடுப்பதாக உள்ளன. ஒரு வீட்டுக்குச்
சொந்தக்காரராக இருக்கும் பெருமிதத்தோடு, பணத்தைப் பெருக்குவதற்கான சிறந்த
வழிவகைகளில் ஒன்றாகவும் ரியல் எஸ்டேட் முதலீடுதான் இருக்கிறது.
கனவுத்திட்டங்களை நம்பி பணத்தைப் பெருக்கிய, நஷ்டப்பட்ட கதைகள் நம்மைச்
சுற்றி ஏராளமாக உலாவருபவை. அவற்றில் வீடுகள் போன்ற சொத்துகள், போட்ட
முதலீட்டுக்கு நிச்சயமான லாபத்தை ஈட்டித்தருபவையாக இதுவரை கருதப்பட்டன.
அத்துடன் வீடுகள் போன்றவற்றில் செய்யப்படும் முதலீடுகள் மூலமும், மாதத்தவணை
கட்டுவதன் வழியாகவும் வரிகளிலிருந்து சலுகை பெறலாம்.
பொதுவாகவே குடியிருப்பதற்காக வாடகையாகக் கொடுக்கப்படும் பணத்தை வெறும்
செலவாகவே மக்கள் கருதுகின்றனர். அதற்குப் பதிலாக ஒரு வீட்டை வாங்குவதன்
மூலம் வாடகையாக நஷ்டமாகும் பணம் சேமிக்கப்படும் என்ற கருத்து நிலவுகிறது.
வீடுகள் வாங்குவது லாபகரமானதாகவும், பண ரீதியாக பல மடங்கு பலனைத்
தருவதாகவும் பத்தாண்டுகள் தொடர்ந்து இருந்துவந்தது. அந்த நிலை கடந்த
இரண்டாண்டுகளில் மந்தப் போக்கை எட்டியுள்ளது.
சென்னை போன்ற இந்தியாவின் பெருநகரங்களில் தேவைக்கு அதிகமாக வீடுகள்
கட்டப்பட்டதாலும், வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம்
அதிகரிக்கப்பட்டதாலும், பொருளாதார மந்தநிலை காரணமாகவும் இந்தச் சுணக்கம்
ஏற்பட்டுள்ளது. வரவிருக்கும் ஆண்டுகளிலும் வீடுகளின் மதிப்பு பெரிதளவு
உயரும் வாய்ப்பில்லையென்றே பலரும் கருதும் நிலை உள்ளது. பிக்டெசிசன்ஸ்
ரியல்எஸ்டேட் இணையத்தளம் எடுத்த கருத்தாய்வில் 60 முதல் 80 சதவீதம் பேர்,
வீடுகளின் விலைமதிப்பு ஆண்டுக்கு 10 சதவீதமே உயரும் என்று கூறியுள்ளனர்.
ஆனால் வீட்டுக் கடன் வட்டித்தொகையைக் கணக்கிட்டால் இத்தொகை குறைவு.
வீட்டுச் சொத்துகளின் விலை மதிப்பு தொடர்ந்து உயராத நிலையில், ஒரு சொத்தை
வாங்குவதில் அனைவருக்கும் உற்சாகம் குறையவே செய்யும். அதிகமான வீட்டுக்கடன்
வட்டி கட்டுவதால் என்ன பிரயோஜனம் என்று வீடு வாங்குபவர்கள் யோசிக்கத்
தொடங்கியுள்ளனர்.
இது தொடர்பாக மேற்கண்ட ஆய்வின்படி, கீழ்க்கண்ட ஆலோசனைகளை வீடுகளை வாங்கத் திட்டமிடுபவர்கள் பரிசீலிக்கலாம்:
1. இப்போதைய சூழ்நிலையில் சொத்தாக ஒரு வீட்டை வாங்கினால் விலை மதிப்பு
ரீதியாக, சிறந்த பலனைத் தருவதற்கு 9 முதல் 14 ஆண்டுகள் பிடிக்கும்.
வாடிக்கையாளர் குறைந்த கால அளவிலான லாபத்தை விரும்பினால் அவர் அந்த வீட்டை
வாடகைக்கு விடலாம்.
2. பெருநகரங்களில் வேலை பார்ப்பவர்கள், தங்கள் சொந்த ஊரான சிறு நகரங்களில்
வீடுகளைக் குறைவான விலையில் வாங்க முடியும். வீட்டின் மதிப்பும் உயரும்.
இந்த வகையில் வீடுகளை வாங்குபவர்கள் வீட்டுக் கடன் கொடுக்கும் நிறுவனத்தை
மாற்றுவதன் மூலம் தங்கள் பணத்தைச் சேமிக்க முடியும். குறைந்த வட்டி
வசூலிக்கும் வங்கிக்கு மாற்றிக்கொள்வது உண்மையிலேயே நமது பணத்தை
மிச்சப்படுத்தும்.
வட்டி விகிதம் 1 சதவீதம் குறையும்போது, ஒரு கோடி மதிப்புள்ள கடனுக்கு 80
ஆயிரம் ரூபாய் வரை ஆண்டுக்குச் சேமிக்க முடியும். நாம் வீட்டுக் கடன்
செலுத்த வேண்டிய காலம் 20 ஆண்டுகளெனில் 16.12 லட்ச ரூபாய் சேமிக்க இயலும்.
உதாரணத்துக்கு ஒரு வீட்டை நீங்கள் வாங்கும்போது அதன் விலை 70 லட்சம் ரூபாய்
என்று வைத்துக்கொள்வோம். அந்த 70 லட்ச ரூபாயில் 80 சதவீதம் பணம், அதாவது
56 லட்ச ரூபாய் வீட்டுக்கடனாகத் தரப்படுகிறது. மூன்று ஆண்டுகளுக்குப்
பின்னர் நீங்கள் வாங்கிய வீட்டின் மதிப்பு 80 லட்சம் ஆகிறது.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வீட்டுக் கடனாகத் திருப்பியளிக்க வேண்டிய தொகை
53 லட்சம் மிச்சம் உள்ளதென்று வைத்துக்கொள்வோம். 80 லட்சம் மதிப்புள்ள
வீட்டுக்குக் கடன் திட்டத்தை மாற்ற நினைத்தால் தற்போது 80 லட்சம்
மதிப்புள்ள உங்கள் வீட்டுக்கு 64 லட்ச ரூபாய் கடன் கிடைக்கும். பாக்கி
கடன்தொகை 53 லட்சத்தை நீங்கள் திரும்பக் கட்டிய பிறகு உங்கள் கையில் 11
லட்ச ரூபாய் இருக்கும்.
இந்தப் 11 லட்ச ரூபாய்தான் உங்கள் வீட்டிலிருந்து அடையும் லாபம். வருடா
வருடம் 10 சதவீத மதிப்பு கூடியதால் வந்திருக்கும் வரவு இது. தொழில் கடன்கள்
மற்றும் முதலீட்டுக் கடன்களுக்குப் பொதுவாக 14 முதல் 24 சதவீதம்
வட்டித்தொகை வசூலிக்கப்படும் நிலையில் வீட்டுக்கடனுக்கு 10 சதவீதம்
வட்டிவீதம் என்பது மிகவும் லாபகரமானதே.
வீட்டுக் கடனைப் பொருத்தவரை நிறைய பணத்தைச் சேமிப்பதற்குக் கடனில் ஒரு
பகுதியை;r சீக்கிரமே கட்டி கடன்காலத்தைக் குறைப்பதே சிறந்தவழி. இதன் மூலம்
வட்டிச் சுமை குறையும். அதேநேரத்தில் வரிச் சலுகையும் உண்டு.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...