இலவச மடிக்கணினி திருடுபோன பள்ளிகளில் பணியாற்றிய தலைமை ஆசிரியர்களுக்கு
நிறுத்தி வைக்கப்பட்ட ஓய்வூதிய பணப் பலன்களை உடனே வழங்க வேண்டும் என்று
தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகம் வலியுறுத்தியது.
இந்த அமைப்பின் மாநிலப் பொதுக் குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் மு.பொன்முடி தலைமை வகித்தார். மாநில பொதுச்
செயலாளர் ஆ.ரமேஷ், பொருளர் செ.சண்முகநாதன், அமைப்புச் செயலாளர் க.கனகராசு
ஆகியோர் முன்னிலை வகித்தனர். காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் சந்திரசேகர்
வரவேற்றார்.
மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் பதவி உயர்வில் உள்ள
முரண்பாடுகளைக் களைய தமிழக முதல்வரின் அறிவுறுத்தல்படி அமைக்கப்பட்ட
சீராய்வுக் குழு அறிக்கையை அமல்படுத்த வேண்டும், இந்தக் கோரிக்கையை
வலியுறுத்தி வரும் நவம்பர் 28-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது
என, கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இலவச மடிக்கணினி திருடுபோன பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஓய்வூதியப் பணப் பலன்களை உடனே வழங்க வேண்டும்.
வேலூர் மாவட்டத்தில் தலைமை ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது
செய்ய காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை
வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் செயல் தலைவர் டி.சுப்பிரமணியன், கெளரவத் தலைவர்
வா.ராதாகிருஷ்ணன், ஆலோசனைக் குழுத் தலைவர் சே.ராஜபாண்டியன் உள்ளிட்டோர்
பங்கேற்றனர். புதிய மாவட்ட கல்வி அலுவலர்கள், பணி நிறைவு பெற்ற மாநிலப்
பொறுப்பாளர்கள் இந்தக் கூட்டத்தில் கெளரவிக்கப்பட்டனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...