Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இன்றைய அரசுப் பள்ளிகளில் - குறிப்பாக தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் என்னதான் நடக்கிறது?

         ஓட்டுநர் என்றால் பேருந்தை ஓட்ட வேண்டும்; நடத்துனர் என்றால் பயணச்சீட்டு வழங்க வேண்டும். ஒரு வேளை பட்டதாரி ஆசிரியருக்கான தகுதி பெற்ற பலரும் அவ்வேளை கிடைக்காமல் ஓட்டுநர் பணிக்கு வந்துவிட்டனர் என்று வைத்துக்கொள்வோம்
 
           அதற்காக, பேருந்தைப் புளியமரம் புளியமரத்திற்கு நிறுத்தி முறைசாராக் கல்வி என்னும் பேரில் பயணிகளுக்குப் பாடம் நடத்தச் சொல்லி அவர்களுக்கு அரசு உத்தரவிட்டால் (அப்படியும் நடக்கலாம்! யார் கண்டது?) அது எவ்வளவு பெரிய கேலிக் கூத்து? அது மட்டுமல்ல, அப்பேருந்து ஊர்போய்ச் சேருவது எப்பொழுது? ஆசிரியர்கள்மீது திணிக்கப்படும், அவர்களுக்குத் தொடர்பே இல்லாத பிறபணிகள் இத்தகையனவே! கல்வித்துறை சார்ந்த அலுவலகங்கள் கேட்கும் பள்ளி விவரங்கள் எழுதிக் கொடுத்தே பள்ளிப் பாடங்களை மறந்து போனார்கள் ஆசிரியர்கள்!
பொதுவாக அரசுப் பள்ளிகளின் வீழ்ச்சிக்கும் தரமின்மைக்கும் ஆசிரியர்களே முழுக்காரணம் என்பது போல மக்களிடம் பொதுப்புத்தியை அரசும் ஊடகங்களும் விதைத்திருக்கின்றன. உண்மையில் தவறுகள் யாவும் அதிகாரப்படி நிலையின் மேல்மட்டத்தில் கட்டியமைக்கப்பட்டு, அவை கீழ் நோக்கிக் கடத்தப்படுகின்றன. பலியாவதென்னவோ கீழ அலகுகளில் பணியாற்றும் ஊழியர்களே! இதைத் தெரிந்தும், தெரியாததுபோல் முதலாளித்துவ ஊடகங்கள் தொழிலாளர்களையே குற்றவாளிகளாக்குகின்றன.
நூறுநாள் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில்(?) வேலை செய்யும் கூலித் தொழிலாளர்கள் ஆங்காங்கே மரநிழலில் படுத்துறங்கிவிட்டு ஊதியம் வாங்குவதாகப் பிரச்சாரம் செய்யும் மூளைகள்தாம் ஆசிரியர்கள் வகுப்பில் பாடமே நடத்தாமல் சம்பளம் வாங்குவதாகப் பரப்புகின்றன. இக்கூற்றில் ஓரளவு உண்மையிருக்கலாம்! ஆனால், இந்த சமூக அமைப்பு எத்தகையது? இந்த அரசு யாருக்கானது? என்ற கேள்விகளோடு தொடர்புடையது தொழிலாளர்கள் முதல் ஆசிரியர்கள் வரை பொறுப்புடன் பணியாற்றுவதும் பணியாற்றாமல் இருப்பதும்! சமனற்ற திறந்தவெளிப் போட்டியில் வேலை கொடுப்பவர் - வேலை பெறுபவரிடையே நிகழும் மறைமுகப் போராட்டம் என்றும், இந்தச் சமூக அமைப்புச் சிதைவதன் அடையாளம் என்றும் இதனைக் கூறலாம்.
பற்றாக்குறையால் பொருள்தேடி ஓடுகின்றவனை ஏன் இந்த நிலை எனக் கேட்கவும் ஆள் இல்லை! மிகை நுகர்வுக்காக ஓடுகின்றவனைத் தடுக்கவும் ஆள் இல்லை! இந்தச் சமனற்ற ஓட்டப்பந்தயமே இச்சமூக அமைப்பின் யதார்த்தம்! இந்தச் சூழ்நிலைகளிலும் மனசாட்சியுடனும் பொறுப்புடனும் பணியாற்றக் கருதும் ஆசிரியர்கள் சந்திக்கும் இன்னல்கள், கூடுதல் பணிகள்தாம் எத்தனை! எத்தனை!
•‘‘தேர்தல் பணி ஆசிரியர்களுக்குக் கட்டாயம் என அரசு ஆணை கூறுகிறது. தேர்தல் நேரத்தில் வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை மற்றும் அவற்றுக்கான பயிற்சி என்பதோடு மட்டும் இப்பணி முடிவதில்லை. அவ்வப்போது வாக்காளர் பட்டியலில் பொதுமக்களின் பெயர் சேர்த்தல் - நீக்கல் பணியையும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் செய்ய வேண்டும்.
குடும்ப அட்டைகளைப் புதுப்பித்தலுக்கான பெயர் சேர்த்தல் - நீக்கல் பணிகளை ஆசிரியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பள்ளியைச் சுற்றியுள்ள வசிப்பிடங்களில் (Habitations) செய்தல் வேண்டும்.
• ‘‘மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணியை ஆசிரியர்கள் செய்தாக வேண்டும் என அரசு ஆணை கூறுகின்றது. பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தும் தேசிய அளவிலான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மட்டுமல்ல, ஆண்டுதோறும் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பள்ளி சார்ந்த வசிப்பிடங்களில் உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பதோடு அவர்களின் கல்வி, வயது, சாதி, மதம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களைப் பதிவேடுகளில் பராமரித்தல் வேண்டும். அவை குறித்து அவ்வப்போது அனைவருக்கும் கல்வி இயக்கம், தொடக்கக் கல்வி இயக்கம் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அனுப்பிக் கொண்டே இருக்க வேண்டும்.
குழந்தைகளின் கல்விக்கு அனைத்தும் விலையில்லாமல் கொடுப்பதாக அரசு தம்பட்டம் அடிக்கிறது. ஆனால், கல்வியின் பெயராலேயே கற்பிக்கும் நேரம் பறிக்கப்படுகிறது என்பதை அரசு உணரவே இல்லை. மிதிவண்டியும் மடிக்கணிணியும்தான் பள்ளிக்கு நேரில் வந்து இறங்குகின்றன. மற்றபடி சீருடை, செருப்பு, புத்தகங்கள், நோட்டுகள், புத்தகப்பை முதலியனயாவும் ஓர் ஒன்றியத்திற்கு ஓர் அலுவலகமாக இருக்கின்ற உதவித் தொடக்கக் கல்வி அலுவலகத்திற்கோ, மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகத்திற்கோ வந்து இறங்குகின்றன.
ஐம்பது, அறுபது கி.மீ. சுற்றளவில் உள்ள பள்ளிகளிலிருந்து ஆசிரியர்கள் சென்று வாகனங்களில் எடுத்துச் செல்ல வேண்டும். அதுவும் ஒரே தவணையாக அனைத்தும் வந்து இறங்குவதில்லை. புத்தகங்கள், நோட்டுக்கள் பாதி வந்து சேரும். அதை எடுத்துச் செல்ல ஒருமுறை செல்லவேண்டும். மீதியை எடுத்துச் செல்ல அடுத்த முறை வரவேண்டும். சீருடைகள், செருப்புகள் சரியான அளவில் இல்லையென்றால் அதை மாற்றிப்பெறுவதற்கு மீண்டும் வரவேண்டும். செருப்பிற்காக முன்னரே குழந்தைகளின் கால் அளவு எடுத்துக் கொடுத்தவர்களும் ஆசிரியர்களே!
முன்பெல்லாம் ஒரே தவணையில் புத்தகம் நோட்டுகள் எல்லாம் பள்ளிக்கு எடுத்துச் சென்றுவிடலாம். முப்பருவக் கல்விமுறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, கடந்த மூன்று ஆண்டுகளாக வருடத்திற்கு மூன்றுமுறை இப்பொருட்களைத் தூக்கிச் செல்ல வேண்டும் ஒரு பருவத்திற்கு 4 நாட்கள்வீதம் முப்பருவத்திற்கும். 12 வேலை நாட்கள் இதில் கழிந்துவிடும். (வேலை நாட்களில் வேண்டாம்; விடுமுறை நாட்களில் இவற்றை ஆசிரியர்கள் எடுத்துச் சென்று தங்கள் பாதுகாப்பில் வைத்துக்கொண்டு பள்ளியில் சேர்த்துவிடுங்கள்என அதிகாரிகள் கூறுவது ஆசிரியர்களின் விடுமுறையைக் காலி செய்யும் இன்னொரு விதி மீறலே!)
ஒவ்வொரு ஒன்றியத்திலும் சுமார் 400 முதல் 600 வரை தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் இருப்பர். அவர்களின் ஊதியப் பட்டியலை எழுதித் தொகுத்து கணிணியில் ஏற்றிக் கருவூலத்திற்கு அனுப்புகிற பணியை உதவித் தொடக்கக் கல்வி அலுவலகம் கவனிக்க வேண்டும். அங்குப் பணியில் போதுமான பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை.
அங்குப் பணியாற்றும் ஓரிருவருக்கும் கணிணியைக் கையாளுதல் போன்றவற்றில் சிரமம் உள்ளது. இம்மாதிரியான காரணங்களால் ஆசிரியர்களே ஐந்துமுதல் பதினைந்துபேர் வரை ஊதியப்பட்டியல் தயாரித்தல், சரிபார்த்தல் பணிக்கு உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்(AEEO) ‘அறிவுரையின்பேரில்அவ்வலுவலகத்திற்கு வந்துவிடுவர்! அப்பணி ஒவ்வொரு மாதமும் குறைந்தது பத்து நாட்கள் வரை நீடிக்கும். இப்படி இவர்கள் செய்யவில்லை என்றால் ஆசிரியர் சமூகத்திற்கு அந்த மாதச் சம்பளம் வர அடுத்த மாதம் 20 ஆம் தேதி ஆகலாம்; அல்லது அதற்கடுத்த மாதத்திற்கும் தள்ளிப் போகலாம். தமிழகத்தின் அனைத்து ஒன்றியங்களிலும் இதுதான் நிலைமை!
• 2000 முதல் 2014 ஆம் ஆண்டு வரை ஆசிரியர்கள் பொதுவைப்புநிதி, பங்களிப்பு ஓய்வூதிய நிதி ((GPF, CPS)) முதலிய கணக்குகளைச் சரிபார்த்தல், தணிக்கைக்கு உதவுதல் (Auditing)) முதலிய பணிகளுக்காக கடந்த ஆண்டு இறுதியில் இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை ஒவ்வொரு ஒன்றியத்திலும் 15 ஆசிரியர்கள்வரை AEEO அலுவலகத்திற்கு வேலை பார்த்தனர்! இப்படியானசிறப்புப்பணிஅவ்வப்போது வரும்! இவையாவும் கிணிணிளி அலுவலகத்தின் வேலையே!
பள்ளிகளைக் கண்காணிக்க அதிகாரிகளின் படிநிலைத் தவிர, ஒவ்வொரு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், பள்ளி மேலாண்மைக் குழு, கிராமக் கல்விக் குழு, அன்னையர் குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம் எனப் பலசனநாயக அமைப்புகள்உள்ளன. பள்ளி மேலாண்மைக் குழு என்பது பெற்றோர் ஆசிரியர் கழகப் பெண் உறுப்பினர் (தலைவர்), மாற்றுத் திறனாளிகளின் பெற்றோர் (துணைத் தலைவர்), தலைமை ஆசிரியர் (செயலர்), உதவி ஆசிரியர், பெற்றோர்கள் 75%, அதில் பெண்கள் 50% வார்டு உறுப்பினர், தன்னார்வலர், கல்வியாளர், சுய உதவிக்குழு உறுப்பினர் முதலிய 20 உறுப்பினர்களைக் கொண்டது.
பள்ளி வளர்ச்சித் திட்டம் தயாரித்தல், செயல்படுத்த வழிகாட்டல் முதலியன இக்குழுவின் முக்கியப் பணிகள். இக்குழு மாதம் ஒரு முறை கூட்டப்பட வேண்டும். இக்கூட்டத்தை ஒவ்வொரு மாதமும் கூட்டுவதோடு கூட்ட நிகழ்வு மற்றும் கலந்து கொண்டோர் வருகை பதிவேடு முதலியவற்றைப் பராமரிப்பதும், அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வளமையத்திற்கு இதன் நகலை அனுப்பிவைப்பதும் தலைமை ஆசிரியர் கடமையாகும்.
கிராமக் கல்விக் குழு என்பது 20 பேர் கொண்ட இன்னொரு குழுவாகும். பள்ளி உள்ளடங்கிய ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய, நகராட்சி தலைவர்கள், வார்டு உறுப்பினர் போன்றோருள் ஒருவர் தலைவராகவும், பள்ளித் தலைமை ஆசிரியர் செயலாளராகவும் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர், சுய உதவிக்குழு உறுப்பினர்(பெண்), பெற்றோர்கள், அங்கன்வாடிப் பணியாளர், அரசுசாரா தொண்டு நிறுவன உறுப்பினர், கல்வியாளர், ஆசிரியர் பிரதிநிதி, கிராம நிர்வாக அலுவலர், வார்டு உறுப்பினர் (தாழ்த்தப்பட்டோர்), மாற்றுத் திறனாளிகளுக்கான தொண்டு நிறுவன பொறுப்பாளர், இளைஞர் மன்ற நிர்வாகிகள் முதலியோர் இக்குழுவில் உறுப்பினர்களாக இடம் பெறுவர்.
இக்குழுவின் முக்கியப் பணி, அனைவருக்கும் கல்வி இயக்கம் வழங்குகிற பள்ளி மானியம் பராமரிப்பு மானியம், புதிய வகுப்பறை, கழிப்பறை, சுற்றுச்சுவர், சாய்தளம் முதலியன கட்டுவதற்கான நிதி ஆகியன சரியாகச் செலவழிக்கப்படுகிறதா? எனக் கண்காணிப்பதாகும். பள்ளிக்கு வழங்கப்படும் நிதியை இக்குழுவின் தலைவர் மற்றும் செயலராகிய தலைமை ஆசிரியர் ஆகிய இருவர் கூட்டாகத் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். பள்ளிக்குத் தேவையான செலவுகளைச் செய்ய தீர்மானம் நிறைவேற்றி காசோலையில் தலைவர், செயலர் கையெழுத்திட்டுப் பணத்தை எடுத்துச் செலவழிக்க வேண்டும். கிராமக் கல்விக் குழுவையும் மாதம் ஒருமுறை கட்டாயம் கூட்ட வேண்டும். இக்குழுவும் பள்ளி மேலாண்மைக் குழுவும் ஒரே நாளில் கூட்டப்படக் கூடாது. இக்கூட்டத்தைக் கூட்டுவதும் கூட்டப் பதிவேட்டைப் பராமரிப்பதும் பள்ளித் தலைமை ஆசிரியரின் பொறுப்பு.
இம்மாதிரியான சனநாயகத் தன்மை வாய்ந்த குழுக்கள் வரவேற்கத்தக்கவைதானே? என்று சிலர் கேட்கலாம். உண்மையில் நிலப்பிரபுத்துவக் கூறுகளை ஆழமாகக் கொண்ட முதலாளித்துவ சமுதாயத்தில் வடிவ அளவில் இத்தகைய குழுக்களை அறிமுகப்படுத்துவது வெறும் சடங்குத் தனமானது; அதிகார வர்க்கத்திற்கு இது ஒரு சனநாயக முகமூடியாகப் பயன்படும், அவ்வளவுதான்! நடைமுறையில் எந்த நல்ல விளைவுகளையும் ஏற்படுத்தாது. தலைமையாசிரியருக்கும் இதுவும் ஒரு கூடுதல் சுமையே.
இது கூட்டப்படவில்லையென்றால் உயரதிகாரிகளுக்குப் பதில் சொல்ல வேண்டும் என்பதற்காகவே அனைவருக்கும் செய்தி சொல்லிவிட்டு பள்ளியில் காத்திருப்பார். பெரும்பாலான கூட்டங்களுக்கு யாரும் வருவதில்லை. வரவேண்டிய தார்மீகக் கடமையுள்ள அப்பகுதி மக்கள் பிரதிநிதிகள் இக்கூட்டத்தையெல்லாம் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. (விதிவிலக்குகள் உண்டு.) அவரவர் சார்ந்த கட்சிப்பணி அல்லது காண்ட்ராக்ட் பணியில் தொடங்கி அவரவர் சொந்தத் தொழிலைப் பார்க்கச் சென்றுவிடுவர். மேலும், தாழ்த்தப்பட்டோர் அதிக எண்ணிக்கையில் பள்ளிகளில் படிப்பார்களேயானால், தலைவர் பிற்படுத்தப்பட்டோராக இருப்பின் அப்பள்ளிகளைக் கண்டுகொள்ளவே மாட்டார். அப்பள்ளி இருப்பதையே அவர்கள் தொந்தரவாகக் கருதுவர்.
பொதுமக்களாகிய குழந்தைகளின் பெற்றோர் மிகவும் பின்தங்கிய பொருளியல் சூழலில் அன்றைக்குக் கிடைக்கும் வேலையை விட்டுவிட்டு பள்ளியின் கூட்டங்களுக்கு வர நேரம் ஒதுக்க முடியாமல் இருப்பர்.
வேலையில்லாக் காலங்களில் நேரங் கிடைத்த போதும் பள்ளிகளில் சென்று எதைச் சொல்வது என்று தயங்குகிற பெற்றோர்களே அதிகம். இவர்கள் பெரும்பாலும் படிக்காதவர்கள். முதல் தலைமுறையாகப் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பியவர்கள். தலைமை ஆசிரியரோ கூட்டம் நடந்ததாகக் காட்ட, தானே வீடுவீடாகச் சென்று தலைவர் மற்றும் உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்கி வருவார். (12 பேர் கையெழுத்து குறைந்தபட்சம் வேண்டுமே!). சிலர் அலட்டிகாமல் தாமே வலதுகையால் சில கையெழுத்துகளையும், இடது கையால் சில கையெழுத்துகளையும் போட்டுக் கூட்டத்தை முடித்துவிடுவர். ஆனால் இவற்றையெல்லாம் செய்துமுடிக்க ஆகும் நேரம் குழந்தைகளுக்கும் கற்பிக்கப்படும் நேரத்திலிருந்து களவாடப்படுகிறதே!
பள்ளிக்குக் கழிவறை, புதிய வகுப்பறைக் கட்டடம் முதலியவற்றிற்குப் பணம் ஒதுக்கியிருந்தால், அதற்குக் கிராமக் கல்விக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றுவது, காசோலையில் கையெழுத்து வாங்க அவ்வப்போது தலைவரைத் தேடுவது (ஒரே நேரத்தில் மொத்தமாகப் பணம் எடுக்க முடியாது), குறிப்பிட்ட நாட்களுக்குள் கட்டடப் பணி முடிக்க வேண்டி கொத்தனா, சித்தாளைத் தேடுவது, அவர்களின் வேலையைக் கண்காணிப்பது, கட்டுமானப் பொருட்கள் வாங்குவது, அவற்றுக்கான பில் தொகுப்பது, பல்வேறு பணி நிலைகளைப் படம் எடுப்பது, வங்கிக் கணக்குப் புத்தகம், காசோலைப் புத்தகம், ரொக்கப் புத்தகம், செலவினம் வாரியாகப் பேரேடு, பற்றுச் சீட்டுகள், கோப்புகள் முதலியனவற்றைப் பராமரித்தல் ஆகிய பணிகளைத் தலைமையாசிரியர் செய்தல் வேண்டும். இவற்றோடு பள்ளி மற்றும் பராமரிப்பு மானியச் செலவினப் பதிவேடுகளைப் பராமரித்தல் வேண்டும். இவற்றை ஆண்டுக்கு ஒருமுறை வட்டார வளமையத்தில் கொண்டு வந்து சரிபார்த்துச் செல்ல வேண்டும். மாநிலத்திலிருந்து வரும் தணிக்கைக் குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
அன்னையர் குழு என்பது 6 பேர் கொண்ட பெண்கள் குழு. இது பள்ளியின் கழிப்பறை, மதிய உணவு முதலியவற்றைப் பார்வையிடும். இவர்களுக்கான பார்வையாளர் பதிவேட்டையும் தலைமை ஆசிரியர் பராமரிக்க வேண்டும்.
பெரும்பாலான கிராமங்களில் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையே இருபது, பதினைந்து, பத்து, எட்டு, ஐந்து என்று இருக்கும்போது இவர்களைக் கண்காணிக்க 46 பேர் கொண்ட இத்தனை குழுக்கள் அவசியமா? ஒரே குழு போதாது என்றால் குறைந்தபட்சம் மாணவர் எண்ணிக்கைக்கேற்ப இக்குழுக்களை அமைத்துக் கொள்ளக் கூடாதா?
நூற்றுக்கும் மேற்பட்ட பதிவேடுகளை ஒவ்வொரு பள்ளியிலும் ஆசிரியர்கள் பராமரிக்க வேண்டும். பாடம் நடத்தும் நேரத்தைவிட பதிவேடுகள் பூர்த்தி செய்யும் நேரமே அதிகம்.
• ‘அனைவருக்கும் கல்வி இயக்கம் வட்டார அளவில், குறுவட்டார அளவில் நடத்தும் பல்வேறு பயிற்சிகளில் (குறைந்தபட்சம் 10 + 10 ) ஆசிரியர்கள் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும். பயிற்சி என்பது தேவையை ஒட்டி உண்மையிலேயே ஆசிரியரிடமிருந்து கோரிக்கை வந்தால் வழங்குவதில் தவறில்லை. புதிதாகப் பணியில் சேர்ந்தவர்க்கு வேண்டுமானால் கட்டாயம் வழங்கலாம். ஆனால், ஒதுக்கப்பட்ட நிதியைச் செலவு செய்தே ஆக வேண்டும் என்பதற்காக, ஆண்டுதோறும் அரைத்த மாவையே அரைப்பதுபோல் தன்சுத்தம், பல்சுத்தம், உடல்நலம், கை கழுவுதல், உடற்பயிற்சி, கலை மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரித்தல், வாசித்தல், எழுதுவதில் மேம்பாடு; போன்ற தலைப்புகளில் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்வர்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர், அனைவருக்கும் கல்வி இயக்கக் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர், மேற்பார்வையாளர் முதலியோர் கூட்டும் கூட்டங்களில் கலந்துகொண்டு அவர்களின் வழிகாட்டுதல்களைத் தலைமை ஆசிரியர்கள் பெறவேண்டும்! இம்மாதிரியான கூட்டம் ஆண்டுக்கு எத்தனை முறை என்ற கணக்குக் கிடையாது!
மாணவர்களுக்கு இலவசப் பேருந்துக் கட்டணச் சலுகை பெற அதற்கான விண்ணப்பங்களைப் பூர்த்திசெய்து தொகுத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் கொடுத்து பஸ் பாஸ் பெற்றுத் தருவதும் ஆசிரியர்கள் கடமை.
தற்போது சாதிச் சான்றிதழ் பெற்றுத் தருகிற கடமையையும் ஆசிரியர்கள் செய்ய வேண்டும்.
மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளின் கல்விசாரா வேலைப்பளு தனி என்றாலும், தற்போது குறிப்பாக 12, 10ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அவர்களின் சான்றிதழை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்கிற வேலையும் ஆசிரியர்கள் செய்கிறார்கள்.
பெரும்பாலும் தலைமையாசிரியர்கள்தாமே இப்பணிகளைக் கவனிக்கிறார்கள்? மற்ற ஆசிரியர்கள் கல்விப் பணியைக் கவனிக்கலாமே?’ என்று கேட்கத் தோன்றும்! தமிழகத்தில் பெரும்பாலான தொடக்கப்பள்ளிகளில் 2 ஆசிரியர்களும் நடுநிலைப்பள்ளிகளில் 6,7,8 வகுப்புகளுக்கு தலைமையாசிரியரையும் சேர்த்து மூவர்தான் உள்ளனர். ஆக, ஈராசிரியர்களில் ஓராசிரியர் எப்போதும் கல்வித்துறை சார்ந்த பணிகளுக்காக பள்ளியைவிட்டு வெளியே சுற்றிக் கொண்டிருக்க வேண்டிய சூழலை அரசே செய்கிறது!
இங்ஙனம் பல துறையினர் செய்யவேண்டிய நிறையப் பணிகளை ஆசிரியர்களே செய்கின்றனர், பாடம் நடத்துவதைத் தவிர. தமிழக பள்ளி மாணவர்களுக்கு எல்லாம் இலவசமாய் கிடைக்கிறது, கல்வியைத் தவிர. தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள் மீது உழைப்புச்சுரண்டலும், மாணவர்கள் மீதான கட்டணக் கொள்ளையும் கொடுமையாக அரங்கேறுகிறது. ஆனால் ஒப்பீட்டளவில் கல்விப்பணி தவிர, பிற பணிகள் அந்த ஆசிரியர்களுக்கு இல்லை. எப்போதும் மாணவர்களோடு அவர்கள் இருக்கிறார்கள். உழைக்கும் மக்கள் உட்பட தங்கள் குழந்தைகளை கடன் வாங்கியாவது தனியார் பள்ளிகளில் சேர்க்க காரணம் இதுவே.
இந்தச் சூழலை உருவாக்கியவை மத்திய மாநில அரசுகளே.
விவரங்கள்
எழுத்தாளர்: சிற்பி மகன்
தாய்ப் பிரிவு: மக்கள் விடுதலை
பிரிவு: மக்கள் விடுதலை - பிப்ரவரி 2015
வெளியிடப்பட்டது: 30 நவம்பர் -0001

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி




8 Comments:

  1. yes. 100% saaku poku

    ReplyDelete
  2. ஐயா, தாங்கள் பல வேலைகள் செய்யலாம் அதுக்காக பாடம் நடத்தாம இருப்பது எவ்வித நியாயமும் இல்லை. ஒரு நாளைக்கு இரண்டு பாட வேளைகள் ஒழுங்காக பாடம் நடத்தினாலே போதும்.

    ReplyDelete
    Replies
    1. அறிவார்ந்ந பதிவன்று.அது எப்படி? பல வேலை செய்தாலும் பாடத்தை நடத்து... பாடத்தை நடத்தத்தானே கேட்கிறார்கள் ஆசிரியர்கள். பலவேலை எதற்கு?

      Delete
  3. Ka kaa kudava theriyama varuvangala

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive