Home »
» ஆதார் அட்டை கட்டாயம் ஆகுமா? சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு
நாடு முழுவதும் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் “ஆதார்” என்ற பெயரில் அடையாள அட்டையை மத்திய அரசு வழங்கி வருகிறது. மத்திய அரசும், பல்வேறு மாநில
அரசுகளும் சமையல் கியாஸ் இணைப்பு, வங்கி கணக்கு தொடங்குதல், ஓய்வூதியம்,
திருமணங்களை பதிவு செய்தல், சேமநல நிதி போன்ற சில பொதுச்சேவைகளுக்கு ஆதார்
அட்டையை கட்டாயமாக்கின.
இந்த நடைமுறையை நீக்கக்கோரி கர்நாடக ஐகோர்ட்டின் முன்னாள் நீதிபதி
புட்டாசுவாமி சுப்ரீம் கோர்ட்டில் 2012-ம் ஆண்டில் பொதுநல வழக்கு
தொடுத்தார். இதில் சுப்ரீம் கோர்ட்டு ஆதார் அட்டையை கட்டாயமாக்கக்கூடாது
என்று தீர்ப்பு வழங்கியது. இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று
மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.
இதைத்தொடர்ந்து கடந்த ஆகஸ்டு 11-ந் தேதி இந்த வழக்கின் மீதான விசாரணை 5
நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. தனிமனிதர்களின்
அந்தரங்கத்தன்மை அவர்களது அடிப்படை உரிமையில் வருகிறதா? இல்லையா? என்பது
குறித்து இந்த அமர்வு முடிவெடுக்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த வழக்கை விசாரித்து முடிவெடுக்கும் வரை மத்திய அரசு ஆதார் அட்டை
வழங்குவதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரர் சார்பில்
கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஒரு இடைக்கால
உத்தரவை பிறப்பித்தனர். அதில், மண்எண்ணெய், சமையல் எரிவாயு மற்றும் ரேஷன்
பொருட்களை வழங்குவதற்காக மட்டுமே ஆதார் அட்டையை மத்திய, மாநில அரசுகள்
பயன்படுத்திக்கொள்ளலாம். மற்ற சேவைகளுக்கு ஆதார் அட்டையை
கட்டாயப்படுத்தக்கூடாது. இவைகளுக்கு ஆதார் அட்டை அவசியமில்லை என அரசு
பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும். குற்ற வழக்குகள் தொடர்பாக
நீதிமன்றங்கள் கேட்டுக்கொண்டால் ஒழிய ஆதார் அட்டையில் உள்ள தனிநபரின்
விவரங்களை வேறு யாருடனும் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்று
கூறப்பட்டிருந்தது.
இதற்கிடையில் மத்திய அரசு, செபி, டிராய், ரிசர்வ் வங்கி மற்றும் சில மாநில
அரசுகள் தாக்கல் செய்த இடைக்கால மனுக்களில், ஆதார் அட்டையின் பயனை அரசு
சார்ந்த சமூகநல திட்டங்களுக்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை
விடுக்கப்பட்டிருந்தது.
இந்த மனுக்களின் மீதான விசாரணை நேற்று நீதிபதிகள் ஜே.செல்லமேஸ்வர், எஸ்.ஏ.
பாப்டே மற்றும் சி.நாகப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு
வந்தது. 2 மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணையில் மத்திய அரசு சார்பில்
அட்டார்னி ஜெனரல் முகுல் ரோகத்கி ஆஜராகி வாதாடினார்.
அட்டார்னி ஜெனரல் தன்னுடைய வாதத்தில், பெருவாரியான சலுகைகளை பெறும்
நோக்கில் சிலர் தங்களுடைய அந்தரங்கமான தகவல்கள் மீதான உரிமையை
விட்டுக்கொடுக்க தயாராக இருக்கும்போது இதில் கோர்ட்டு ஏன் தலையிட வேண்டும்.
கோர்ட்டின் இந்த முடிவினால் பெருவாரியான மக்கள் பாதிப்புக்கு
உள்ளாவார்கள். ஆதார் அட்டை பயன்படுத்துவதால் தவறான முறையில்
பயன்பெறுபவர்கள் தடுக்கப்பட்டுள்ளனர். இதனால் ஒரு ஆண்டுக்கு அரசுக்கு
சுமார் ரூ.14 ஆயிரம் கோடி மிச்சமாகியுள்ளது என்றார்.
மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சியாம் திவான், ஏழைகளாக
இருந்தாலும், படிக்காதவர்களாக இருந்தாலும் அவர்களின் அந்தரங்க தகவல்கள்
குறித்து எந்த வகையான சமரசமும் இருக் கக்கூடாது. இந்த வழக்கு ஏற்கனவே
அரசியல்சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளதால் 3 நீதிபதிகள் கொண்ட இந்த
அமர்வு இதில் முடிவெடுக்க முடியாது என்றார்.
டிராய் தரப்பில், சிம் கார்டுகளை வழங்க இதுவரை ஆதார் அட்டை
பயன்படுத்தப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் அந்த நடைமுறை
நிறுத்தப்பட்டுள்ளது. இப்போது சிம் கார்டுகள் தீவிரவாதிகள் வசமும் எளிதாக
செல்லும் வாய்ப்புகள் உள்ளன என்று வாதிடப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கின் மீதான
தீர்ப்பு நாளை (இன்று) பிற்பகல் 3.30 மணிக்கு வழங்கப்படும் என்று
தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...