Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தீர்வு இதுவல்ல!

        மத்திய அரசில் குரூப்-டி, குரூப்-சி, குரூப்-பி பணியிடங்களுக்கான நியமனங்களில் அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதலாக நேர்முகத் தேர்வு ரத்து செய்யப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி மனம் திறந்து (மன் கீ பாத்) வானொலி உரையில் தெரிவித்துள்ளார். இது ஏற்கெனவே அவர் தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டிருந்ததுதான். அதைத்தான் தற்போது மீண்டும் உறுதிப்படுத்தி எப்போது அமலுக்கு வரும் என்பதை அறிவித்திருக்கிறார்.


        நேர்முகத் தேர்வு நடத்துவதால் ஊழல் நடக்கிறது. வேலை வாங்கித் தருவதாக ஏழை மக்களிடம் லஞ்சம் பெறப்படுகிறது. சில நேரங்களில் லஞ்சம் கொடுத்தும் வேலை கிடைக்காமல் ஏழைகள் ஏமாந்து போகிறார்கள் என்பதுதான் இந்த முடிவுக்கான காரணம் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிடுவது உண்மைதான் என்றாலும், நேர்முகத் தேர்வை ரத்து செய்வது என்பது ஊழல் ஒழிப்புக்கு ஒரு தீர்வாக இருக்காது.

மத்திய அரசுப் பணிகளில் சுமார் 36 லட்சம் ஊழியர்கள் உள்ளனர். இவர்களில் 95% பேர் குரூப்-பி, சி, டி வகைகளில் சேர்ந்தவர்கள். அதாவது "நான்-கெசட்டெட்' ஆஃபீஸர்ஸ் அனைவரும் இந்த வகைக்குள் வந்துவிடுகின்றனர். இந்தப் பணியிடங்களில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் ஓய்வு பெறுவதும், புதிய நியமனங்கள் நடைபெறுவதும் வாடிக்கையான வழக்கம். 

தற்போது பிரதமர் அறிவித்துள்ளதைப்போல, இந்தப் பணியிடங்களுக்கு நேர்காணல் இல்லாமல் வெறும் விண்ணப்பம் அல்லது வேலைவாய்ப்பு அலுவலகம் தரும் பதிவுமூப்புப் பட்டியல் அடிப்படையில் தேர்வு நடத்தப்பட்டால், உரிய ஆற்றல் இல்லாதவர்கள் தேர்வாகும் வாய்ப்பு மிகவும் அதிகரித்து அரசு நிர்வாகத்தின் செயல்பாடு மேலும் பாதிக்கும். 
 ÷பிரதமர் குறிப்பிடுவது போல இந்த நடைமுறையால் ஊழல் அகன்றுவிடும் என்பதும் உறுதியில்லை. தகுதித் தேர்வு வினாத்தாள் வெளியாதல், விடைத்தாள் மாற்றி வைத்தல் போன்ற ஊழல்கள் நடக்கும் இன்றைய சூழலில், விண்ணப்பத்தைக் கையாளுவோருக்கும், வேலைவாய்ப்பு அலுவலக ஊழியர்களுக்கும் பணம் கொடுத்துத் தங்கள் பெயரை முன்னுரிமை கிடைக்கச் செய்வது கடினம் ஒன்றும் அல்ல. ஆகவே, இதன்மூலம் ஊழலை ஒழித்துவிட இயலாது. 
 ÷ஹரியாணா அரசு செய்திருப்பதைப்போல, நேர்காணலுக்கு மதிப்பெண் இல்லாதபடி செய்தல் அல்லது அந்த மதிப்பெண் மிகக் குறைந்த அளவே இருக்கும்படி செய்யலாமே தவிர, நேர்காணலே கூடாது என்று சொல்வது அரசுப் பணியில் தகுதியற்றவர்களும் போலிகளும் உள்ளே புகுந்து, அரசு இயந்திரத்தை நாசப்படுத்திவிட வழிவகுக்கும். 
 ÷சாதாரண கடைநிலை ஊழியர்களான, அலுவலக ஏவலர்கள் (ப்யூன்), துப்புரவுத் தொழிலாளர்கள் (ஸ்வீப்பர்) போன்ற பணிகளுக்கு அந்தந்த அலுவலக உயர்அலுவலர்களே பணி நியமனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும்கூட, அவர்கள் அந்த நியமனத்தைக்கூட, ஒரு முறை நேரில் பார்த்த பிறகுதான் முடிவு எடுக்கிறார்கள். இதற்கு அடிப்படைக் காரணம், அவர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்ட வயது இளமையாக இருந்தாலும், நடைமுறையில் அவர்கள் உடல்வலிமையுடன் இருக்கிறார்களா, இந்த வேலையை அவர்களால் செய்ய முடியுமா, பேச்சும், உடல்மொழியும் அடுத்தவரின் உணர்வைப் புரிந்துகொள்ளும் வகையில் இருக்கிறதா என அறிந்து கொள்வதற்காகத்தான் அந்த வாய்ப்பை நேர்காணல் வழங்குகிறது. ஊழியரின் பொதுஅறிவைச் சோதிப்பதற்காக மட்டுமே அல்ல நேர்காணல். 
 ÷ஒரு பணிக்கு குறிப்பிட்டுள்ள கல்வித் தகுதி மட்டுமே போதும் அல்லது தகுதித் தேர்வில் அவர் வெற்றி பெற்றிருந்தாலே போதுமானது; அவரை அப்படியே பணிக்கு வந்து சேரச் செய்யலாம் என்றால், போலிகள் உள்ளே புகுவதில் வெற்றி பெறுவார்கள். இப்போது உடல்தகுதிச் சான்றிதழ், மாற்றுத்திறனாளிச் சான்றிதழ்கள் உள்ளிட்டவைக் கூட லஞ்சம் கொடுத்தால் கிடைத்துவிடும் என்பதுதான் உண்மை நிலை. அதனால் குறைந்தபட்சம் நேர்காணலுக்கு மதிப்பெண் ஏதும் இல்லாமலேகூட ஒரு முறை அவர்களது திறமையைச் சோதிக்கும் நடைமுறை கட்டாயம் தேவை.
 ÷நேர்காணல் குழு உறுப்பினர்கள் ஊழல் செய்கிறார்கள் என்றால், நேர்காணல் குழுவை ஒரு நாள் முன்னதாக, பல்வேறு அரசுத் துறை, பொதுத் துறை சார்ந்த அதிகாரிகளைக் கொண்டு திடீரென அமைத்து, நேர்காணல் நடத்தினால் இடைத்தரகர்களின் செயல்பாட்டை முடக்க முடியும். பள்ளித் தேர்வில் விடைத்தாள் திருத்தும் பணியின்போது அவற்றுக்கு மாற்று எண்கள் கொடுத்து, எந்த ஊர், எந்தப் பள்ளி, எந்த மாணவன் என்று தெரியாதபடி விடைத்தாள் திருத்தச் செய்வதுபோல, நேர்காணல் நடத்தும் குழுவையும் திடீரென்று நியமித்து ஊழலை ஓரளவு தவிர்க்கலாம்.
 ÷நேர்காணல் குழு ஊழல் செய்கிறது, அவர்களை வைத்து இடைத்தரகர்கள் பிழைப்பு நடத்துகிறார்கள், மக்கள் ஏமாறுகிறார்கள் என்பதற்காக நேர்காணல் இல்லாமல் செய்வதன் மூலம் திறமை இல்லாதவர்கள் அரசுப் பணியில் நியமிக்கப்படும் அபாயம் அதிகரிக்கும்.
 ÷ மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற "வியாபம்' பணியிட நியமன, மருத்துவக் கல்லூரி அனுமதி ஊழல் எதிரொலிதான் பிரதமரின் இந்த அறிவிப்புக்கு காரணம் என்று தோன்றுகிறது. ஊழலை ஒழிப்பதில் அவருக்கு இருக்கும் முனைப்பை பாராட்டும் அதேவேளையில், அதற்கு அவர் கையாள நினைக்கும் நேர்முகத் தேர்வை ரத்து செய்யும் முடிவு சரியானதல்ல என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
 ÷நேர்காணல் இல்லாமல் செய்வதால், ஊழல் குறையும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. ஆனால், அரசு இயந்திரத்தின் செயல்திறன் குறைந்துபோகும் என்பது சர்வ நிச்சயம்.




2 Comments:

  1. மிகச்சரியாகச் சொல்லப்பட்டுள்ளது. சரியான தீர்வுகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.(செருப்புக்குத் தகுந்தாற்போல் காலை வெட்டக் கூடாது

    ReplyDelete
  2. It should be implement as soon as possible. Hardworking persons may benefited

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive