குழந்தைகளை தத்தெடுப்பதற்கான விதிமுறைகளை, தமிழக அரசு
எளிமைப்படுத்தியுள்ளது. தத்தெடுப்போர், போலீசில் தடையில்லா சான்று பெற
வேண்டியதில்லை. தமிழகத்தில், அரசு அங்கீகரித்த, 17 குழந்தைகளை தத்து
கொடுக்கும் தொண்டு நிறுவனங்கள் உள்ளன; உள்நாடு, வெளிநாட்டினருக்கும்
குழந்தைகளை தத்து கொடுக்கின்றன.
போலீசில், தடையில்லா சான்று பெற வேண்டும்; இத்தனை
வயதுக்குள் இருந்தால்தான் தத்தெடுக்க முடியும் என, பல்வேறு விதிமுறைகள்
உள்ளன. போலீசில்தடையில்லா சான்று பெறுவது, குதிரைக்கொம்பாக உள்ளதால்,
தத்தெடுக்க ஆர்வம் இருந்தும், பலர் முன் வருவதில்லை.
இதைக்கருத்தில் கொண்டு, மத்திய தத்துவ ஆதார மையம் வழிகாட்டுதல்படி, தமிழக
அரசு, குழந்தை தத்தெடுப்பு திட்ட விதிமுறைகளை எளிமைப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, சமூகநலத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
* போலீஸ் தடையில்லா சான்று தேவையில்லை
* தம்பதியின் வயது கூட்டுத்தொகை, 99 வயதுக்குள் இருந்தால் மட்டுமே குழந்தை
தத்தெடுக்கலாம் என்ற நிலை இருந்தது. தற்போது, வயது கூட்டுத்தொகை, 115 ஆக
உயர்த்தப்பட்டுள்ளது
* உரிய ஆவணங்கள் சரிபார்த்ததும், பதிவு மூப்பு அடிப்படையில், குழந்தை தத்தெடுப்பு குறித்து எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படும்
* மருத்துவ சோதனை முடித்து, 24 மணிநேரத்தில் குழந்தையை தேர்வு செய்யலாம்;
ஒரிஜினல் ஆவணங்கள் கொடுத்த, 30 நாட்களுக்குள் குழந்தை கிடைக்கும்
*குழந்தை தத்தெடுக்க, www.adoptionindia.nic.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யும் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
குழந்தை தத்தெடுக்க விரும்புவோர், சட்ட ரீதியாக எடுப்பதே நல்லது.
விதிகளுக்கு மாறாக தத்தெடுத்தால், பல சிக்கல்களை சந்திக்க நேரிடும். அரசே,
குழந்தைகளை கைப்பற்றும்; சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு,
அவர் கூறினார்.- நமது நிருபர் -
இதுவரை தத்து எவ்வளவு?
குழந்தை தத்தெடுப்பு திட்டம், 2013ல் அமலுக்கு வந்தது. 2015 ஆகஸ்ட் வரை,
உள்நாடுகளில், ஆண் - 1,070; பெண் - 3,492 என, 4,562 குழந்தைகள் தத்து
கொடுக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு தம்பதியருக்கு, ஆண் - 72; பெண்- 322 என,
394 குழந்தைகள் தத்து கொடுக்கப்பட்டுள்ளன. மொத்தம், 4,956 குழந்தைகள் தத்து
கொடுக்கப்பட்டுள்ளன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...