புதுடெல்லி, அக்.17-பாராளுமன்றத்தில் நடைபெறும் திருவள்ளுவர் திருவிழாவில்
திருக்குறள் போட்டியில் வெற்றி பெறும் தமிழக மாணவர்கள்
கவுரவிக்கப்படுவார்கள் என்று உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க.
எம்.பி. தருண் விஜய் தெரிவித்தார்.இது குறித்து டெல்லியில் அவர்
நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவில் முதன் முறையாக திருவள்ளுவர் திருவிழா பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவள்ளுவர்மாணவர் இளைஞர் அமைப்பின் சார்பில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்களிடையே திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டியை நடத்த இருக்கிறோம்.திருக்குறளை திறம்பட ஒப்புவிக்கும் மாணவர்களுக்கான போட்டி நவம்பர் 1-ந் தேதி மதுரையில் உள்ள மகாத்மா சி.பி.எஸ்.இ. பள்ளியில் நடைபெறும். இந்த போட்டியில் தமிழ்நாட்டில் உள்ள பல பள்ளிகள், கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் கலந்துகொள்கின்றனர்.பாராளுமன்றத்தில் நடைபெற உள்ள திருவள்ளுவர் திருவிழாவில் மத்திய மந்திரி வெங்கையா நாயுடு உள்பட அனைத்து கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்களும் கலந்து கொள்வார்கள். மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து இந்த போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் 133 மாணவர்களுக்கு பரிசளிக்கிறார்.
தமிழகத்தில் இருந்து வரும் மாணவர்களின் திருக்குறள் முழக்கம் பாராளுமன்ற வளாகத்தை சிறப்பு செய்யும். வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவரும் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டு பாராளுமன்ற வளாகம், ஜனாதிபதிமாளிகை மற்றும் டெல்லியின் பல முக்கிய இடங்களுக்கு அழைத்து செல்லப்படுவார்கள். விழாவில் தமிழகத்தில் இருந்து சில திருக்குறள் அறிஞர்களும் கவுரவிக்கப்பட உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...