ஆசிரியர் இயக்கங்களின் வேலை நிறுத்த
போராட்டத்தால் விழுப்புரம் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பாதிப்பில்லை என
சி.இ.ஓ., மார்ஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு
நடவடிக்கை குழு சார்பில், மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக தமிழக
ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி,
நேற்று வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. இதை யொட்டி, விழுப்புரம் கலெக்டர்
அலுவலகம் எதிரே தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு
சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தொடர்பாளர் செந்தில்குமார் தலைமை தாங்கி
பேசுகையில், மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் கழகம், உயர்நிலை பள்ளி தலைமை
ஆசிரியர் கழகம், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம், பட்டதாரி ஆசிரியர்,
தமிழக தமிழாசிரியர் உட்பட 23 சங்கங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 838 ஆசிரியர்கள்
வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதாக குறிப்பிட்டார். முன்னதாக விழுப்புரம்
அரசு மகளிர் மேல்நிலை பள்ளி, நகராட்சி ஆண்கள் மேல்நிலை, பி.என்., தோப்பு
மேல்நிலை பள்ளி ஆகிய இடங்களில் சி.இ.ஓ., மார்ஸ் நேற்று காலை திடீர் ஆய்வு
செய்தார்.
பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
விழுப்புரம் மாவட்டத்தில் தொடக்க, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள்
மொத்தம் 2 ஆயிரத்து 316 பள்ளிகள் இயங்கி வருகிறது. இந்த பள்ளிகளில் 12
ஆயிரம் ஆசிரியர், ஆசிரியைகள் பணிபுரிந்து வருகின்றனர். ஆசிரியர்களின் இந்த
வேலை நிறுத்த போராட்டத்தால் எந்த பள்ளியிலும் பாட வகுப்புகள் பாதிக்கப்பட
வில்லை. வகுப்புகள் அனைத்தும் வழக்கம் போல் நடக்கிறது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு
பதிலாக, கற்கும் பாரத திட்டம் மற்றும் வட்டார வளமைய பயிற்றுநர்கள் மூலம்
சிறப்பு ஆசிரியர்கள் 2 ஆயிரத்து 438 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக
தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...