ஆர்.கே. நகரில் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் (ஐ.டி.ஐ.) தொடங்கப்படும்
என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து, தமிழக அரசு
வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தமிழகத்தில் 77 அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் 29 ஆயிரத்து 83
மாணவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 4 ஆண்டுகளில் 3
ஆயிரம் மாணவர்கள் பயிற்சி பெறும் வகையில், 15 தொழில் பயிற்சி நிலையங்களை
முதல்வர் ஜெயலலிதா தொடக்கிவைத்துள்ளார்.
நிகழாண்டில் தஞ்சாவூர், புதுக்கோட்டை, விருதுநகர், பெரம்பலூர், விழுப்புரம்
ஆகிய 5 மாவட்டங்களில் தலா ஒரு தொழில் பயிற்சி நிலையங்கள் தொடங்கப்படும் என
சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் முதல்வர் அறிவித்தார்.
இந்த நிலையில், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.2,42,160 கோடி முதலீடு
உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, சென்னை மாநகரைச் சுற்றியுள்ள பகுதிகளில்
ஏற்படுத்தப்படவுள்ள தொழில் நிறுவனங்களுக்கு தொழில் திறன் மிகுந்த
தொழிலாளர்கள் அதிகளவு தேவை. எனவே, சென்னையில் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்
(ஆர்.கே. நகர்) பேரவைத் தொகுதியில் ஒரு தொழில் பயிற்சி நிலையம் தொடங்க
முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
அனைத்து வகையான உள்கட்டமைப்பு வசதிகளுடன் அருணாசல ஈஸ்வரன் கோயில் தெரு,
காமராஜர் சாலையில் தொழில் பயிற்சி நிலையம் தொடங்கப்படும். இதற்கு தேவையான
ஆசிரியர்-ஆசிரியர் அல்லாத பணியிடங்கள், அனைத்து தளவாடங்கள், கட்டடங்கள்
கட்டுதல் போன்ற பல்வேறு பணிகளுக்காக ரூ.7.06 கோடிக்கு நிர்வாக ஒப்புதல்
வழங்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...