எண்ம முறையில் பாடம் கற்றல், குழந்தைகள் நூல்கள் வாசித்தல், கணினிபயிற்சி
பெறுதல், அறிவியல் ஆய்வகம் என பல சிறப்பு அம்சங்களுடன் சுகாதாரம், ஒழுக்கம்
ஆகியவற்றுடன் சேர்ந்து கல்வி கற்பிக்கப்படுகிறது.
மற்ற அரசுப் பள்ளிகளுக்கு ஓர் முன் உதாரணமாகவும்,
பெருநகரங்களில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு இணையாகவும் செயல்பட்டு வருகிறது
வடமணப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி. திருவண்ணாமலை மாவட்டம்,
வெம்பாக்கத்தை அடுத்த வடமணப்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ளது அரசுத்
தொடக்கப் பள்ளி. 1926-இல்தொடங்கப்பட்ட இந்தப் பள்ளியில் தற்போது சுமார் 250
மாணவர்கள்பயின்று வருகின்றனர்.
இந்தப் பள்ளியில் கடந்த சில ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை வெகுவாகக் குறைந்து
காணப்பட்டது. மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க முயற்சியில் தலைமை ஆசிரியர்
பொற்கொடி, ஆசிரியைகள் பூங்கொடி, ஆனந்தி, மலர்விழி, விஜயலட்சுமி, ரமணிபாய்,
அருணா ஆகியோர் ஒருங்கிணைப்போடு மாணவர்கள் சேர்க்கை இரண்டு ஆண்டுகளில்
இரண்டு மடங்குக்கு மேல் அதிகரிக்கப்பட்டது.
மேலும், இந்தக் கிராமத்தில் மாணவர்களின் வருகை கண்காணிக்கப்பட்டு பள்ளி
செல்லா குழந்தைகளே இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டு உள்ளது.பெற்றோர்,
ஆசிரியர்கள் சந்திப்புக் கூட்டம் நடத்தப்பட்டு ஆசிரியர்கள் கூறிய பல்வேறு
கல்வி சம்பந்தப்பட்ட ஆலோசனைகளின் பேரில், மாணவர்களின் பெற்றோர் பள்ளிக்கு
பொருளுதவி செய்ததால், மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு ஆர்வமாக வரத்
தொடங்கினர். மாணவர்கள் அனைவரும் படிக்கும் வகையில் வகுப்பறைகளில்
நாற்காலிகள், எழுதும் மேஜைகள் பொருத்தப்பட்டன.
அனைத்து வகுப்பறைகளும் வண்ணமயமாக அமைக்கப்பட்டன. பள்ளியில் மாணவர் சேர்க்கை
அதிகரிக்கும் வகையில் கிராம கல்விக் குழு, பள்ளி மேலாண்மைக் குழு, கிராம
மக்கள் ஒத்துழைப்போடு இலவசமாக எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள்
தொடங்கப்பட்டு, அதன் மூலம் கிராமப்புற மாணவர்கள் 70 பேர் ஆங்கில வழிக்கல்வி
பயிற்றுவிக்கப்படுகிறது.
மேலும், பெற்றோர் ஒத்துழைப்பால் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. மழலையர்களுக்கு
விளையாட்டு வழிக் கல்வியை ஆசிரியர்கள் அளித்து வருவது பள்ளியின் மற்றொரு
சிறப்பு அம்சமாகும். ஒழுக்கம், சுகாதாரம், பின்புதான் கல்வி என்ற
கோட்பாடுடன் இங்கு கல்வி கற்பிக்கப்படுகிறது.பள்ளி மாணவர்களிடையே தலைமைப்
பண்புகளை வளர்க்கும் விதமாக இறை வணக்கக் குழு, சுகாதாரக் குழு உள்ளிட்ட
ஒன்பது குழுக்கள் அமைக்கப்பட்டு மாணவர்களிடையே நற்பண்புகள் வளர்க்கப்பட்டு
வருகிறது.
இறைவணக்கத்துடன் தொடங்கும் பள்ளியில் பிற்பகல் 12 மணியளவில் யோகா,
தொடர்ந்து தியானப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.பிற்பகல் உணவு இடைவேளையின்
போது அனைத்து மாணவர்களும் வரிசையாக நின்று "தன் சுத்தம் சுகாதாரம்' என்ற
கோட்பாட்டில் சோப்பு கொண்டுகையை சுத்தம் செய்த பின்னர் சத்துணவை மாணவர்கள்
உண்ணத் தொடங்குகின்றனர்.பாடங்கள் அரசு விதி முறைகளின் படியும், காணொலிக்
கருவி மூலம் குறுந்தகடுகள் வாயிலாக பாடங்களுடன் பொது அறிவும் சேர்ந்து
ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
அனைத்து மாணவர்களுக்கும் காய்ச்சிய குடிநீரையே பருகிட ஏற்பாடு செய்யப்பட்டு
உள்ளது. காலை, மாலை வேளைகளில் சிறுநீர் கழிக்கவும்,வயிற்று உபாதைகளுக்காக
செல்லும் மாணவர்கள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் விளங்கி கை, கால்களில்
சுத்தம் செய்து கொண்டு வகுப்பறைச் செல்லும் காட்சியை நேரில்
காணமுடிகிறது.மாணவர்களின் தனித் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில்
எழுத்துப் பயிற்சி, ஓவியப் பயிற்சி, பேசும் பயிற்சி, கணினி பயிற்சி,
பன்முகத் திறன் வளர்த்தல் பயிற்சி, வாழ்க்கைக் கல்வி முறையில் நன்னெறிக்
கதைகள், உடற்கல்வி, தியானம், யோகா ஆகியன பயிற்றுவிக்கப்படுகின்றன.
மாணவர்களின் படைப்புகளான ஓவியம், எழுத்துக்கள், தேசத் தலைவர்கள், அறிவியல்
கண்டுபிடிப்புகள், வரலாற்றுப் படைப்புகள், மேப்புகள், விலங்குகள்,
தாவரங்கள், நாணயங்கள், எண்கள், தமிழ், ஆங்கில எழுத்துக்களின் படங்கள்
அனைத்தும் ரசிக்கும் வகையில் மாணவர்களால்அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்களின்
அறிவியல் படைப்புகள் அனைத்தும் அறிவியல் ஆய்வக அறையில் காட்சியாக
வைக்கப்பட்டுள்ளன.பல நூறு நூல்கள் கொண்ட நூலகமும் பள்ளியில் அமைக்கப்பட்டு
உள்ளது.இந்த நூலகத்தில் 1-ஆம் வகுப்பு முதல் புத்தகங்கள் படிக்கும் பழக்கம்
இந்தப் பள்ளி மாணவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.கணினியின் பயன்பாடு
முக்கியம் என்பதை உணர்த்தும் வகையில் 3 முதல் 5-ஆம் வகுப்பு வரையில்
கணினிப் பாடப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
மேலும், கணினியில் பெயின்டிங், டிராயிங், பவர் பாயின்ட் பயிற்சிகளும்
அளிக்கப்படுகின்றன.சிறந்த பள்ளியாக விளங்கி வருவதன் காரணமாக தகவல்
தொழில்நுட்பத் துறை அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன், திருவண்ணாமலை
மாவட்ட ஆட்சியர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நூர்ஜகான், தொடக்கக்
கல்வி அலுவலர்கள் இந்தப் பள்ளி ஆசிரியர்களைப் பாராட்டி உள்ளனர் என்பது
குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...