அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததால், ராமநாதபுரம் மாவட்டத்தில் 365 சத்துணவு அமைப்பாளர் பணியிடங்கள் ரத்தாகின்றன.தமிழகத்தில் 42,855 சத்துணவு மையங்களில் 30,925 காலிப் பணியிடங்கள் உள்ளன. இவற்றில் காலியாக உள்ள அமைப்பாளர்,
உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவிட்டது. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் சமையலர் பணியிடம் நிறுத்தி வைக்கப்பட்டது. முதற்கட்டமாக சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்காணல் நடத்தி முடிக்கப்பட்டன. விரைவில் அப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தொடர்ந்து அமைப்பாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
அதற்கு முன் 25 குழந்தைகளுக்கு குறைவாக உள்ள சத்துணவு மையங்களை, அருகில் உள்ள பெரிய மையங்களுடன் இணைக்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் இணைப்பு மையங்களில் அமைப்பாளர் பணியிடங்கள் அனைத்தும் ரத்தாகின்றன. மேலும் அந்த மையங்களுக்கு சமையலர் அல்லது உதவியாளர் பணியிடம் மட்டும் வழங்கப்பட உள்ளது.இந்த நடவடிக்கையால் ராமநாதபுரம் மாவட்டத்தில் 365 அமைப்பாளர் பணியிடங்கள் காலியாகின்றன.
ஏற்கனவே இந்த பணியிடங்களில் உள்ள அமைப்பாளர்கள் காலி பணியிடங்களில் நியமிக்கப்பட உள்ளனர். இதனால் காலி பணியிடங்கள் ஏற்பட்டால் மட்டுமே புதிதாக அமைப்பாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) கணபதி கூறுகையில், “25 மாணவர்களுக்கு குறைவான பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்களை இணைப்பு மையங்களாக மாற்றிய பின்பே அமைப்பாளர் பணியிடங்கள் நிரப்பப்படும்,” என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...