காலாண்டு
விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்ததையடுத்து அரசு மற்றும் அரசு உதவி
பெறும் பள்ளிகளில் 2-ம் பருவ பாடப்புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டது.
பருவ பாடப்புத்தகங்கள்
தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள், புத்தகப்பை உள்ளிட்ட 14 வகையான விலையில்லா பொருட்கள் பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா உத்தரவுப்படி, பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் மேற்பார்வையில் வழங்கப்பட்டு வருகின்றன.
1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு 3 பருவங்களாக பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. காலாண்டு தேர்வு வரை தேவையான புத்தகங்களை முதல் பருவ புத்தகங்கள் என்றும், அரையாண்டு தேர்வு வரையிலான புத்தகங்கள் 2-வது பருவ புத்தகங்கள் என்றும், அரையாண்டுக்கு பின்னர் இறுதி ஆண்டு தேர்வு வரையிலான புத்தகங்கள் 3-வது பருவ புத்தகங்கள் என்றும் அழைக்கப்படுகிறது.
புத்தக பையின் சுமையை குறைக்க...
மாணவ-மாணவிகள் பள்ளிக்கு எடுத்து வரும் புத்தக பையின் சுமையை குறைக்கும் நோக்கோடு இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது. பருவ பாடப்புத்தங்கள் உடன் மாணவ-மாணவிகளுக்கு இலவச நோட்டுப்புத்தகங்கள், சீருடைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு பாடநூல் சேவை கழகம் சார்பில், அதன் மேலாண்மை இயக்குனர் மைதிலி ராஜேந்திரன், செயலாளர் கார்மேகம் ஆகியோர் அச்சிட்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தேவையான 2-ம் பருவ பாடப்புத்தகங்களை தமிழகம் முழுவதும் முதன்மை கல்வி அதிகாரிகளின் கண்காணிப்பில் உள்ள குடோன்களுக்கு அனுப்பிவைத்தனர்.
பள்ளிகள் திறப்பு
பின்னர் அங்கிருந்து, அந்தந்த பள்ளிகளுக்கு 2-ம் பருவ பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுப்புத்தகங்களை ஆசிரியர்கள் எடுத்துச்சென்றனர். தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிக்கூடங்கள் திறந்த அன்றே பருவ பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி காலாண்டு தேர்வு விடுமுறை முடிவடைந்து சென்னையில் நேற்று காலையில் பள்ளிக்கூடங்கள் வழக்கம்போல் திறக்கப்பட்டன.
2-ம் பருவ பாடப்புத்தகங்கள் வினியோகம்
சென்னை எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட சென்னையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு 2-ம் பருவ பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் ஆகியவை வழங்கப்பட்டன.
6, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு ஆங்கிலம், தமிழ் ஆகிய பாடங்களை உள்ளடக்கிய ஒரு புத்தகம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய பாடங்களை உள்ளடக்கிய மற்றொரு புத்தகம் என 2 புத்தகங்கள் வழங்கப்பட்டன.
மாணவ-மாணவிகள் ஆர்வம்
9-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு ஆங்கிலம், தமிழ் பாடங்களை உள்ளடக்கிய புத்தகம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களை உள்ளடக்கிய புத்தகம் மற்றும் கணித பாடத்தை உள்ளடக்கிய புத்தகம் என 3 புத்தகங்கள் வழங்கப்பட்டன.
அந்த புத்தகங்களை கொண்டு முதல் நாளான நேற்றே ஆசிரியர்கள் பாடங்களை நடத்தினர். மாணவ-மாணவிகளும் புது பாடத்திட்டங்களை ஆர்வத்துடன் படித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...