இரண்டு போட்டித் தேர்வுகள் ஒரே தேதியில் வருவதால், தமிழ்நாடு அரசுப்
பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் குரூப்-2 தேர்வு தேதி
மாற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு வேலைத் தேடும் பல லட்சம் பட்டதாரி
இளைஞர்களிடையே எழுந்துள்ளது.
கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்) ஆண்டுக்கு இருமுறை ஜூன், டிசம்பர் மாதங்களில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.வரும் டிசம்பர் மாதத்துக்கான "நெட்' தேர்வு அறிவிப்பை, கடந்த செப்டம்பர் மாதம் சி.பி.எஸ்.இ. வெளியிட்டது. தேர்வானது டிசம்பர் 27-ஆம் தேதி நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வை தமிழகம் உள்பட நாடு முழுவதும் இருந்து 7 லட்சத்துக்கும் அதிகமானோர் ஆண்டுக்கு ஆண்டு எழுதி வருகின்றனர்.இதற்கிடையே, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-2 (ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-2) தேர்வுக்கான அறிவிப்பு கடந்த அக்டோபர் 12-ஆம் தேதி வெளியிட்டது. இந்தத் தேர்வும் டிசம்பர் 27-ஆம் தேதி நடத்தப்படுகிறது.
இதற்கு இளநிலை பட்டப் படிப்பு குறைந்தபட்ச கல்வித் தகுதியாகும். இந்த நிலையில், முதுநிலை பட்டப் படிப்பை முடித்து "நெட்' தேர்வை எழுதுபவர்களில் பலர், அரசுப் பணியைப் பெறும் நோக்கத்தில் டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் குரூப்-1, குரூப்-2 தேர்வுகளையும் எழுதுவது வழக்கம்.இந்த முறை இந்த இரண்டு தேர்வுகளும் ஒரே நாளில் (டிசம்பர் 27)வருவதால், குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து "நெட்'"செட்' சங்க நிறுவனர் தலைவர் சுவாமிநாதன் கூறியது:"நெட்' தேர்வை ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திலிருந்து 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் எழுதுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் அரசுப் பணிகளுக்கான தேர்வுகளையும் எழுதி வருகின்றனர். இந்தத் தேர்வுக்கான அறிவிப்பு ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதமே அறிவிக்கப்பட்டுவிடும். இதுபோல் 2015 டிசம்பர் மாதத் தேர்வும் செப்டம்பர் மாதமே அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் "நெட்' தேர்வு நடத்தப்படும் அதே தேதியில், குரூப்-2 தேர்வை டி.என்.பி.எஸ்.சி.நடத்த இருப்பதால் ஆயிரக்கணக்கானோர் தேர்வெழுத முடியாத நிலை ஏற்படும்.முதுநிலை பட்டப் படிப்பையும், அதற்கு மேலும் படித்துவிட்டு பல ஆண்டுகளாக வேலைவாய்ப்புக்காகக் காத்திருப்பவர்களின் நிலையைக் கருத்தில்கொண்டு, குரூப்-2 தேர்வு தேதியை மாற்றியமைக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அதிகாரி ஒருவர் கூறியது: "நெட்' தேர்வு தேதி என்பன உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அறிந்து, ஆலோசித்துதான் குரூப்-2 தேர்வு தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, தேதியை மாற்றியமைக்க வாய்ப்பு இல்லை. இருந்தபோதும் தேர்வாணையத் தலைவருடன் இதுதொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்றார்.
yes sir, this is right information. Please change tnpsc exam date.... because that have ugc examination on full day. So how attend two exams
ReplyDelete.