தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின், 28 சங்கங்கள்
சேர்ந்து, 'ஜாக்டோ' கூட்டு நடவடிக்கைக் குழுவை அமைத்துள்ளன. இந்த குழு
சார்பில், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் போராட்டங்கள்
நடத்தப்படுகின்றன.
சென்னை, தி.நகரில் உள்ள தமிழ்நாடு பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் சங்க
அலுவலகத்தில், 'ஜாக்டோ' உயர்மட்ட குழு கூட்டம், நேற்று நடந்தது. பின்,
'ஜாக்டோ' ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் மற்றும் தமிழ்நாடு உயர் மற்றும்
மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்க பொதுச் செயலர் சாமி சத்தியமூர்த்தி
கூறியதாவது:
ஆசிரியர்களுக்கான, ஆறாவது சம்பள கமிஷனின் ஊதிய முரண்பாடுகளை நீக்குவது;
இலவச திட்டங்களை மேற்கொள்ள தனி அதிகாரி நியமிப்பது; பங்களிப்பு ஓய்வூதிய
திட்டத்தை திரும்ப பெறுதல் உள்ளிட்ட, 15 அம்ச கோரிக்கைகளை அரசு கண்டு
கொள்ளவில்லை.வரும், 8ம் தேதி, தமிழகத்தில் உள்ள, 1.25 லட்சம் அரசு பள்ளிகளை
பூட்டி, 3.5 லட்சம் ஆசிரியர்கள், வேலைநிறுத்த போராட்டம் நடத்த
முடிவாகியுள்ளது. இந்த போராட்டம், திட்டமிட்டபடி நடக்கும். மாவட்ட ஆட்சியர்
அலுவலகங்கள் முன், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமும் நடத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
போராடினால் ஒழுங்கு நடவடிக்கை
ஆசிரியர்களின் போராட்டத்தை ஒடுக்க, பள்ளிக்கல்வி துறை உயர் அதிகாரிகள், பல
முயற்சிகளை எடுத்து வருகின்றனர். வரும், 8ம் தேதி விடுப்பு எடுக்கும்
ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை நடந்து
வருகிறது. அதிகாரிகள், ஆளுங்கட்சி ஆதரவு சங்கங்களை அழைத்து, எதிர்
நடவடிக்கை மேற்கொள்ள
உத்தரவிட்டுள்ளனர் என, பள்ளிக்கல்வி துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...