துறை ரீதியாக தங்களுக்கு ஏற்படும் குறைபாடுகள் குறித்து பிரதமரிடம்
நேரடியாக முறையிடுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று
ராணுவம், துணை ராணுவப் படைகளின் அதிகாரிகள் உள்பட அனைத்து மத்திய அரசு
ஊழியர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்தியப் பணியாளர், பயிற்சித் துறை திங்கள்கிழமை வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:
ஏதேனும் ஓரிடத்தில் அரசு ஊழியர் ஒருவர் துறை ரீதியான தனது குறைபாடுகளைப்
பதிவு செய்யவோ, அதற்குத் தீர்வு காணவோ விரும்பினால் விதிகளின்படி அதை தனது
மூத்த அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும்.
அப்படியில்லை எனில், தனது தலைமை அலுவலகத்திலோ அல்லது அந்தப் பிரச்னையை
தீர்த்து வைக்கும் அதிகாரமுடைய நபர், அதாவது சம்பந்தப்பட்ட
நிறுவனங்களுக்கான தீர்ப்பாயத்தில் பொறுப்பில் இருப்பவரிடம் குறைகளைத்
தெரிவிக்க வேண்டும்.
இதையெல்லாம் செய்யாமல் நேரடியாக உயர் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதுவதை
நன்னடத்தை விதிகளை மீறிய செயலாகத்தான் கருத முடியும். தான் அணுக வேண்டிய
அதிகாரிகளைத் தவிர்த்துவிட்டு, இதுபோன்று நேரடியாகக் கடிதம் எழுதுவோர் மீது
ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
தவறிழைக்கும் ராணுவ அதிகாரிகள்: நன்னடத்தை விதிகளைப் பின்பற்றாமல்,
ராணுவம், துணை ராணுவப் படைகளைச் சேர்ந்த அதிகாரிகள் தங்களது குறைகள்
குறித்து பிரதமர், அமைச்சர், பணியாளர் நலத் துறைச் செயலாளர் உள்பட உயர்
அதிகாரிகளிடம் நேரடியாகப் புகார் தெரிவிப்பது கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, ஏற்கெனவே அமலில் இருக்கும் விதிகள் மீண்டும் ஊழியர்களின்
கவனத்துக்கு கொண்டு வரப்படுகிறது. இது துணை ராணுவப் படைகள், பாதுகாப்புப்
படைகளின் அதிகாரிகள் உள்பட அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும்.
மின்னஞ்சல் அனுப்புவதோ, பொதுப் பயன்பாட்டு இணையதளங்களில் தகவல்
வெளியிடுவதோ அல்லது அரசுப் பணியாளர்கள் தங்களுக்கு வெளியில் உள்ள
செல்வாக்கைப் பயன்படுத்தி உறவினர்கள் மூலம் குறைகளை வெளிப்படுத்துவதோ,
விதிகளை மீறிய செயலாகவே கருதப்படும். அவ்வாறு விதிகளை மீறுவோர் மீது
நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசுத் துறைகளில் 48 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...