மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, பேராசிரியர்கள் இல்லை என்று புகார்
எழுந்துள்ளதால், கல்லுாரிகளில் திடீர் ஆய்வு நடத்த, பல்கலை மானியக்குழுவான
யு.ஜி.சி., மற்றும் அகில இந்திய கல்வி கவுன்சிலான ஏ.ஐ.சி.டி.இ., அதிகாரிகள்
முடிவு செய்து உள்ளனர்.
தமிழகத்திலுள்ள, 530 இன்ஜி., கல்லுாரிகளில், பல கல்லுாரிகள் தன்னாட்சி
பெற்றவை. ஆனால், அனைத்து கல்லுாரிகளும், ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் பெற்று,
அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ளன. இதேபோல், கலை கல்லுாரிகள், யு.ஜி.சி.,
அங்கீகாரம் பெற்று, 13 அரசு பல்கலைகளின் இணைப்பில் செயல்படுகின்றன.
இவற்றில், இன்ஜி., கல்லுாரிகளில், 15 மாணவர்களுக்கு ஒரு பேராசிரியர்; கலை,
அறிவியல் கல்லுாரிகளில், 20 - 30 மாணவர் வரை, ஒரு பாடப்பிரிவுக்கு ஒரு
பேராசிரியர் நியமிக்க விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. ஆனால், பல
கல்லுாரிகளில் நிரந்தர பேராசிரியர்கள் இல்லாமல், ஆராய்ச்சி மாணவர்களைக்
கொண்டு பாடம் நடத்துவதாக, யு.ஜி.சி., - ஏ.ஐ.சி.டி.இ.,க்கு புகார்கள் வந்தன.
மாணவ எண்ணிக்கைக்கு ஏற்ப, பேராசிரியர்கள் இல்லாததால், கல்வித்தரம்
குறைவதுடன், கல்லுாரிகளில் தேர்ச்சி கணிசமாக சரிந்துள்ளது என,
ஏ.ஐ.சி.டி.இ., தலைவர் சகாஸ்ரபுதேவ், யு.ஜி.சி., துணைத் தலைவர் தேவராஜு பல
நிகழ்ச்சிகளில் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கல்லுாரிகளில் அதிரடி ரெய்டு நடத்தி, பேராசிரியர் நிலவரத்தை
அறிக்கையாக சமர்ப்பிக்க, ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் யு.ஜி.சி., அதிகாரிகள்,
பல்கலைகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
இதன்படி, அண்ணா பல்கலை சார்பில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த
குழுவினர், இன்ஜி., கல்லுாரிகளில் திடீர் ஆய்வு நடத்த உள்ளனர். இந்த
ஆய்வில், ஏ.ஐ.சி.டி.இ., அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர்.இதேபோல், சென்னைப்
பல்கலை, பாரதியார் பல்கலை மற்றும் காமராஜர் பல்கலை உள்ளிட்ட பல
பல்கலைகளில், யு.ஜி.சி., குழுவினர் ஆய்வு நடத்தத் திட்டமிட்டுள்ளதாக,
யு.ஜி.சி., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...